கூட்டணிக்கு வருவதற்கு முன்பாக மானே, தேனே என, புகழ்பாடுவதும், தேர்தல் முடிந்ததும் கூட்டணி கட்சியினரை கழற்றிவிடுவதும் வாடிக்கை. ஆனால், அந்த நிலை இப்போது மாறி, 'கூட்டணி கட்சியினரை தேர்தலுக்கு முன்பாகவே திடுமென கழற்றிவிடும் போக்கு ஆரம்பித்திருக்கிறது' என, பாதிக்கப்பட்டோர் புலம்புகின்றனர். 'கூட்டணி கட்சிகளை மதிக்க வேண்டும் என்கிற சான்றோர் பண்பாடுகளை, பெரிய கட்சிகள் பின்பற்றுவதில்லை' என்றும் பொருமல் இருக்க, அது குறித்து, அரசியல் புள்ளிகள் இருவர் நடத்திய கருத்து மோதல் இங்கே:
திராவிட கட்சிகள் மத்தியில் கூட்டணி தர்மம் என்பது எப்போதும் இருந்ததில்லை. தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும். அந்த ஆட்சியை அடியோடு அகற்ற வேண்டும் என, மற்ற கட்சிகளுக்கு, அ.தி.மு.க., அழைப்பு விடுக்கும். இதேபோல, அ.தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என, தி.மு.க., அழைப்பு விடுக்கும். ஆனால், ஆட்சிக்கு வந்தபின், எங்களால் தான் நீங்கள் வெற்றிபெற்றீர்கள் என, பெரியண்ணன் மனப்பான்மையில் நடந்து கொள்வர். இவர்களால், தனியாகப் போட்டியிட்டு எப்போதும் வெற்றிபெற முடியாது. ஆனால், கூட்டணி சேர்ந்து வெற்றிபெற்ற பின், கூட்டணி கட்சிகளை அலட்சியமாக நடத்துவர். கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு, இருக்கை கூட போடாமல் நிற்க வைக்கும் போக்கையெல்லாம், அ.தி.மு.க., தலைமை செய்துள்ளது. தி.மு.க.,வைப் பொறுத்தவரை, கூட்டணிக் கட்சிகளுக்கு உதவியதை, சொல்லிக்காட்டி வெறுப்பை உமிழும் போக்கைக் கடைப்பிடிக்கும். இவர்கள் இருவரிடமும் கூட்டணிக் கட்சிகளை வழிநடத்தும், சான்றான்மை போக்கு இருந்ததில்லை. தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் 20 முதல் 25 சதவீத ஒட்டுகளை வைத்துக் கொண்டு. பிற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடித்துக் கொள்கின்றன. இவர்கள் எப்போதும், பிற கட்சிகளுடன் சேர்ந்து தான், ஆட்சிக்கு வந்தோம் என, சொல்வதில்லை. ஆனால், பிற கட்சிகளை 'எங்களுடன் சேர்ந்ததால் தான் நீங்கள் வெற்றிபெற்றீர்கள். நீங்கள் தனித்து நின்றிருந்தால், படுதோல்வி கண்டிருப்பீர்கள்' என, ஏளனம் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பிற கட்சிகள் இவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் சந்தர்ப்பவாதம் என, கூறுவார்கள். ஆனால், இவர்களே பிற கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி வைத்துக் கொண்டால், அதை சாணக்கியத்தனம், அரசியல் முதிர்ச்சி என்றெல்லாம் வர்ணித்துக் கொள்வர். தங்களுக்கு எதிராக மாற்று சக்தி வளர்ந்துவிடக் கூடாது. எந்த காலத்திலும், அவர்கள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில், மிகத் தெளிவாக உள்ளனர். இந்நிலை மாற வேண்டுமானால், இரு திராவிட கட்சிகளையும் தனிமைப்படுத்த வேண்டும்.
பாலு, வழக்கறிஞர் பிரிவு தலைவர், பா.ம.க.,
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து, நல்லது செய்யும்போது அவர்களை வாழ்த்துவதும், தவறுகள் நடக்கும்போது, அதை சுட்டிக்காட்டுவதும் தான், ஜனநாயகம். ஒரு கட்சி, ஒரு கூட்டணியிலிருந்து, எதிர் கூட்டணிக்கு சென்றுவிட்டது என்பதற்காக, வசைபாடுவது சரியல்ல. அதை, எங்களைப் போன்றவர்கள் செய்வதில்லை. அதேநேரத்தில், கொள்கை ரீதியாக ஒரு கட்சியை விமர்சிப்பதை நாங்கள் கைவிடுவதில்லை. கூட்டணி கட்சிகளை மரியாதையாக நடத்துவதும்; இல்லை என்று சொல்வதைக் கூட, இதமாகச் சொல்வதுமே, நாகரீகம். அதுபோன்ற அணுகுமுறையை, தி.மு.க.,விடம் நாங்கள் பார்த்துள்ளோம். இதைப் பார்த்து, அ.தி.மு.க., பழகிக் கொள்ளவேண்டும் என்பது, எங்கள் கருத்து. திராவிடக் கட்சிகள், தமிழகத்தில் பெரிய கட்சிகள். முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள், சமுதாய கட்சிகள். சிறிய கட்சிகளும் கூட. எங்களைப் போன்றவர்கள், மொத்தமுள்ள தொகுதியில் மிக சொற்பமான தொகுதிகளில் தான் போட்டியிடுகிறோம். பெரும்பான்மையான தொகுதிகளில், திராவிட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கூட்டணி வாங்கும் ஓட்டில், பெரும்பகுதி ஓட்டு, திராவிட கட்சிகளின் ஓட்டுகளே. எங்களுடைய பங்களிப்பு கணிசமாக இருந்தாலும், அவர்களை ஒப்பிடுகையில் குறைவு தான். ஆனால், ஒரு கூட்டணி வெற்றிபெற்றது என்றால், அதற்கு கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே காரணம். வெற்றிபெற்ற பின், வெற்றிக்கு நாங்கள் தான் காரணம் என, பெரிய கட்சி மார்தட்டிக் கொள்வதை, நாங்கள் இடம்பெற்ற கூட்டணியில் இதுவரை சந்தித்ததில்லை. ஆனால், இப்போதைய சட்டசபையில், இரு கட்சி கள், யாரால் யார் வெற்றி பெற்றோம் என, ஒருவரை ஒருவர் சாடிக் கொள்வது நடந்துள்ளது. இந்த அணுகுமுறை சரியானதல்ல. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை கடந்து, அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும்போது, கூட்ட ணியை வழிநடத்தும் கட்சி, சான்றண்மைப் போக்குடன் நடந்துக்கொள்வது அவசியம். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை.
காதர் மொய்தீன், தமிழக தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE