தமிழகத்தில் காங்கிரஸ் 'தற்போது' தனித்து விடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸின் நிலை, எதிர்காலம், கப்பல்துறை மூலமாக சாதித்தவை, காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
காங்கிரசுக்கு, தமிழகத்தில் சரியான கூட்டணி அமையவில்லை என்றாலும், தேர்தலை சந்திக்க, காங்கிரஸ் தயாராக உள்ளதா? 39 தொகுதிகளிலும் போட்டியிடுமா? அல்லது உண்மையான ஓட்டு சதவீதம் வெளிப்பட்டுவிடும் என, ஒதுங்குமா?
காங்கிரஸ் கட்சி, பல முறை, தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளது. அதில், இரண்டு முறை, மறைந்த தலைவர் மூப்பனார் தலைமையில் நின்றது. இதில் ஒரு முறை, 29 எம்.எல்.ஏ.,க்களை பெற்றது.மேலும் தொடர்ந்து, பல முறை, திராவிட கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெற, காங்கிரஸ் கட்சி, பெரும் பலத்தை கொடுத்துள்ளது.நிலையான ஆட்சி; மதச் சார்பின்மை; பயங்கரவாத ஒழிப்பு, போன்றவற்றில், ஒத்த கருத்துடையவர்கள், காங்கிரஸ் தலைமையை ஏற்பர். காங்கிரஸ், தனித்து போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல; எனவே, ஒதுங்க மாட்டோம்.
லோக்சபா தேர்தலுக்கு, தமிழகத்தில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, அனைத்து கட்சிகளும் அஞ்சுவதற்கு, காரணம் என்ன? உண்மையில் காங்கிரஸ் மூழ்கும் கப்பலா?
நிலையான, உறுதியான ஆட்சியை, காங்கிரசால் மட்டுமே தர முடியும். தேர்தல் கூட்டணியை, எந்த கட்சியும், இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை; இன்னும் காலம் உள்ளது.காங்கிரஸ், மூழ்கும் கப்பல் அல்ல. மூழ்கி கொண்டிருப்போரை, காப்பாற்றும் கப்பல்.
ராஜிவ் கொலையாளிகளுக்கும், தமிழர் நலனுக்கும் என்ன தொடர்பு? இந்த கருத்தை வைத்து, காங்கிரசுக்கு எதிராக நடக்கும் பிரசாரத்தை, எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் நலனில், அக்கறை கொண்ட அரசாக, மத்திய காங்கிரஸ் அரசு, செயல்படுவதன் காரணமாக, தமிழர்களுடைய மறுவாழ்விற்காக உதவி செய்து கொண்டிருக்கிறது. மேலும், சிங்களர்களுக்கு கிடைக்கக் கூடிய அதே உரிமை, தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற உறுதியோடு, சமரசம் செய்து கொள்ளாமல், வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.
நீங்கள் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாக முயன்றீர்கள். அதற்காக விஜயகாந்தை கூட போய் பார்த்தீர்கள். ஆனால்,'தி.மு.க., ஆதரவை கேட்கவில்லை' என, கருணாநிதி சொல்லியிருக்கிறாரே. அது உண்மையா?
முற்றிலும் தவறான செய்தி. இதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது. மாறாக, இதை கற்பனை கேள்வியாக, நான் கருதுகிறேன்.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சூழ்நிலையை காரணம் காட்டித் தான், கட்சியின் பாத யாத்திரை நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்வரவில்லை என, கூறப்படுகிறதே?
ராகுல், இந்தியாவின் பெரும்பாலான மக்களின், நம்பிக்கையை பெற்ற தலைவர். இந்தியாவின், அனைத்து மாநிலங்களிலும், மூலை முடுக்கெல்லாம், பட்டி தொட்டி எல்லாம் சென்று, அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கொண்டிருக்கிறார்.தமிழகத்திற்கு ராகுல் வர, எந்த தடையும் கிடையாது. வரும் காலத்தில், தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்வார்.
அமைச்சராகி, நான்கு ஆண்டுகளுக்கு பிறகுதான், கப்பல் துறை நிகழ்ச்சிகளில், கலந்து கொள்ள துவங்கி னீர்கள். தற்போது, தொடர்ந்து, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். இவ்வளவு காலமும், அமைதியாக இருந்தது ஏன்?
என் அனைத்து நடவடிக்கைகளையும், பார்க்க வேண்டும்; தெரிந்து கொள்ள வேண்டும்; முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பார்த்தவர்கள், படித்தவர்கள், புரிந்து கொண்டவர்கள், இந்த கேள்வியை கேட்க மாட்டார்கள்.
காங்கிரசோடு கூட்டணி இல்லை என, தி.மு.க., தரப்பில் உறுதியாக அறிவித்த பின்னாலும், கூட்டணிக்காக, காங்கிரஸ் தரப்பில் முயல்வது ஏன்? குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, ப.சிதம்பரம் ஆகியோர், கூட்டணிக்காகவே, தி.மு.க., தலைவரை சந்தித்ததாகவும், தி.மு.க., தரப்பில், மறுத்துவிட்டதாகவும் சொல்கின்றனரே?
உண்மைக்கு புறம்பான செய்தி. அவர்கள் சந்தித்ததற்கும், கூட்டணிக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. மூன்று பேரும், அன்றே, பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டனர்.
நாட்டை கடந்த, 10 ஆண்டுகளாக, ஆண்ட கட்சியின் துணை தலைவர் ராகுல். அவரது தாயார் சோனியா நினைக்காமல், மத்திய அரசில், எதுவும் அசையாது என, கூறப்படுகிறது. இருப்பினும், 'அரசியல் முதல் அரசு அமைப்பு வரை, அனைத்தையும் மாற்ற வேண்டும்' என, பாமரன் போல் ராகுல் கூறி வருவதற்கு காரணம் என்ன? அவர் மனதளவில், தன்னை பாமரனாக பாவித்துக் கொண்டு, பொறுப்பேற்காமல் நழுவுகிறாரா?
ராகுல் என்பவர், இந்தியாவினுடைய, மற்ற தலைவர்களோடு, ஒப்பிட்டு பார்க்கும் போது, வித்தியாசமான தலைவர். மற்றவர்கள் எல்லாம், மேடையில் பேசுகின்றனர். ராகுல், மேடையை விட்டு கீழிறங்கி, மக்களை சந்தித்து, உண்மை நிலையை புரிந்து கொண்டு, அதை பேசுவதை விட, செயல்படுத்துவதே சரி என, நினைக்கும் தலைவர்.அதன் அடிப்படையிலே, இன்றைக்கு, கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், கட்டாய கல்வி திட்டம், தகவல் உரிமை பெறும் சட்டம், லோக்பால் என, சுதந்திரம் அடைந்து, 60 ஆண்டுகளில் கிடைக்காத, நல்ல நிலையை, இந்தியா பெற்றுள்ளது.
'தமிழகத்தை பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து, மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சித்து விட்டது' என, முதல்வர் ஜெயலலிதா, முழங்கி வருகிறாரே?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருடைய அறிக்கையை, நான் வழி மொழிகிறேன்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு கட்டட ஊழல், உரம் ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என, பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பிறகும், காங்கிரஸ் ஜெயிக்கும் என, நம்புகிறீர்களா?
ஊழல் எல்லாம் ஒரு புறம், மேடையில் இருக்கிறது; மறுபுறம் நீதிமன்றத்திலும் இருக்கிறது. இதுபோன்ற பல ஜோடிப்பான ஊழல்களை, காங்கிரஸ் தொடர்ந்து, சந்தித்து கொண்டிருக்கிறது. இதை தாண்டி, மக்கள் நன்மையை பெற்று, 2004 மற்றும் 2009ல், வெற்றி பெற்றோம். இது, 2014ல் தொடரும்.
காங்கிரஸ் தனித்து போட்டியிடும் பட்சத்தில், நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்? மயிலாடு துறையா, தஞ்சாவூரா?
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு, எனக்கு மட்டுமல்ல, இங்கு இருக்கின்ற தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இறுதியான முடிவு.
ஈழத்தமிழர் பிரச்னையை, மையமாக வைத்து, கடந்த சில மாதங்களாக, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதுபோல, நீங்கள் பேசியது ஏன்? இது லோக்சபா தேர்தலில், முக்கிய பிரச்னையாக உருவெடுக்குமா?
காங்கிரஸ் கட்சியினுடைய, தமிழக தொண்டர்கள் மனநிலை, மக்கள் மனநிலை, ஆகியவற்றில் ஒத்த கருத்து இருந்ததால் வலியுறுத்தினேன்; அதை பிரதிபலித்தேன்.
பா.ஜ., உடன் கூட்டணி பேசிக் கொண்டிருக்கும் பா.ம.க., உங்கள் கட்சியோடும், கூட்டணிக்கு முயன்று வருகிறதாமே?
எனக்கு அதைப்பற்றி தெரியாது. உண்மையில் தெரியாது.
இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்கிற, முதல்வர் ஜெயலலிதா கனவு, சாத்தியப்படுமா?
காங்கிரசை பொறுத்தவரை, ராகுல் பிரதமராக வர வேண்டும் என்பது, எங்களுடைய உறுதியான நம்பிக்கை. அது நடக்கும் என்று, நம்புகிறோம்.
தமிழக காங்கிரஸ் அலுவலகம் மீது, சில அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராஜிவ் சிலைகளும், பல இடங்களில் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதே?
பொதுவாக கருத்து வேறுபாடு வரும். தேசிய கட்சிகளாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும், பல பிரச்னைகளில், மாறி மாறி கருத்து கூறுவது, அரசியலில் சகஜம்.கருத்து வேறுபாட்டை, வன்முறையினால் மாற்றி விடலாம். ஒத்த கருத்துக்கு, ஒரு கட்சியை கொண்டு வந்து விடலாம் என, நினைத்தால், அது தவறான கொள்கை. மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மேலும், ஒரு கட்சி அலுவலகத்தை தாக்குவது என்பது, அநாகரிகமான ஒன்று. இது போன்றதவறான கலாசாரத்தை, தமிழகத்தில் யாரும் பின்பற்றக் கூடாது. மேலும், தலைவர்களுடைய சிலைகளை சேதப்படுத்துவது என்பது, உண்மையான, அடுத்த கட்சி தொண்டன் கூட, ஏற்றுக் கொள்ள முடியாதது. அதை செய்ய வேண்டும் என, நினைக்கும், சமூக விரோதிகள், மனதை தொட்டு, நினைத்து பார்க்க வேண்டும். அவர்கள் இல்லத்தில் உள்ளவர்கள் கூட, அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்கள் வெறுத்து ஒதுக்குவர் என்பது எனது கருத்து. இதுபோன்ற, தவறான கலாசாரத்திற்கு, தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது. முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேடை நாகரிகத்தை, அனைத்து கட்சியினரும், இந்த தேர்தலில் இருந்து, கடைபிடிக்க வேண்டும். அநாகரிகமான மேடை பேச்சு, வாக்கு வங்கிக்கு வழி வகுக்காது.
காங்கிரஸ் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது, தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என, கருதுகிறீர்களா?
யார் ஆட்சியில் இருந்தாலும், இது போன்ற தவறான நடவடிக்கைகளுக்கு, துணை போகக் கூடாது. உடனடியாக இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை வரும். இல்லையெனில் மக்களுக்கு, நம்பிக்கை ஏற்படாது.
நீங்கள் கப்பல் துறை அமைச்சராக இருந்தும், தமிழக துறைமுகங்கள், பெரிய அளவில் வளரவில்லை என்று பேசப்படுகிறதே?
தூத்துக்குடி துறைமுகத்திற்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன், வ.உ.சி., பெயர் வைத்தாகி விட்டது. இலங்கைக்கு கப்பல் விட்டோம், மக்கள் போகாததால், தொடர முடியவில்லை.உட்கட்டமைப்பு வளர்ச்சியில், இந்தியாவில், முதலிடத்தில் இருப்பது, கப்பல் துறை. இந்த ஆண்டு மட்டும், 30 திட்டங்களை செயல்படுத்துகிறோம். 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில், துறைமுகங்களை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து, எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும், இணைப்பு சாலையை, அகலப்படுத்தும் பணி மற்றும் புதிய சாலை அமைக்கும் பணி, நிறைவு பெறாமல் உள்ளதே?
என் துறை சார்பில், 84 சதவீதம் பணியை, முடித்து விட்டேன். மீதியை, மாநில அரசு செய்ய வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE