தழும்புகளோடு தமிழன்: ''புத்திர சோகம் கொடியது''

Added : மார் 07, 2014
Share
Advertisement
மேற்கு தாம்பரம் 'அட்டை கம்பெனி' சாலையில், யாரிடம் கேட்டாலும் அந்த முகவரிக்கு வழி சொல்கிறார்கள். 'எங்கள் ஓட்டு' பகுதிக்காக, நாம் தேடிச்சென்ற 42 வயது சேதுமாதவன், மகன் ப்ரணவோடு வரவேற்றார். மாதவனின் வீட்டிற்குள், ஸ்ருதி தந்த துயரம் இன்னும் மிச்சமிருக்கிறது. ஜுலை 25, 2012. அன்றுதான், பள்ளி பேருந்திலிருந்த ஓட்டை வழியாக தவறி விழுந்து, சேதுமாதவனின் 6 வயது மகள் ஸ்ருதி பலியானாள்.
தழும்புகளோடு தமிழன்: ''புத்திர சோகம் கொடியது''

மேற்கு தாம்பரம் 'அட்டை கம்பெனி' சாலையில், யாரிடம் கேட்டாலும் அந்த முகவரிக்கு வழி சொல்கிறார்கள். 'எங்கள் ஓட்டு' பகுதிக்காக, நாம் தேடிச்சென்ற 42 வயது சேதுமாதவன், மகன் ப்ரணவோடு வரவேற்றார். மாதவனின் வீட்டிற்குள், ஸ்ருதி தந்த துயரம் இன்னும் மிச்சமிருக்கிறது. ஜுலை 25, 2012. அன்றுதான், பள்ளி பேருந்திலிருந்த ஓட்டை வழியாக தவறி விழுந்து, சேதுமாதவனின் 6 வயது மகள் ஸ்ருதி பலியானாள். அவளது மரணத்திற்குப் பிறகு, இன்று வரை, அவள் படித்த பள்ளியிலிருந்து யாருமே வந்து விசாரிக்கவில்லை (மாணவர்கள் தவிர) என்பது இவருக்குள்ள வருத்தம். கூடவே, ஸ்ருதி வழக்கின் விசாரணை நிலைமையை, அரசு தெரிவிக்காமலிருப்பது மிகப்பெரும் வருத்தம்.
சில நொடிகள் மவுனத்தில் கரைய, பேசத் தொடங்கினோம். நேரடியா விஷயத்துக்கு வருவோம். இந்த

* நாடாளுமன்ற தேர்தல்ல உங்க ஆதரவு யாருக்கு?


நான் பெரிய அளவுல படிக்கலைங்க! என்னைப் பொறுத்தவரைக்கும், சாதி மூலமா ஏற்படுற மோசமான விளைவுகளை, மதவாத சக்திகளாலேயும் ஏற்படுத்த முடியும். இந்த அடிப்படையில, என்னோட ஓட்டு மதச்சார்பற்ற வேட்பாளருக்குத்தான்! ஆனா, சமீபத்துல ஒரு புத்தகத்துல படிச்சேன். குஜராத்ல பல நல்ல விஷயங்கள் நடந்திருக்காமே! இந்த அடிப்படையில சொல்லணும்னா, மோடி பிரதமர் ஆனா நல்லாத்தான் இருக்கும். பார்க்கலாம், தேர்தலுக்குதான் இன்னும் நாள் இருக்கே!

* உங்களால மறக்க முடியாத ஒரு சம்பவம்?


2004 ஜுலை 16 அன்னைக்கு கும்பகோணத்துல 94 பிஞ்சு குழந்தைகளை நெருப்புக்கு பலி கொடுத்தோமே... அந்த கோர சம்பவத்தை என்னால என்னைக்குமே மறக்க முடியாது. அத்தனை உயிர்கள் போனதுக்கு அடிப்படை காரணம், ஒரு சிலரோட பொறுப்பின்மை. சரி, அதுக்கப்புறமாவது, பள்ளி குழந்தைகளோட பாதுகாப்பு விஷயத்துல கவனமா இருக்காங்களா? 'சோகத்துலேயே கொடிய சோகம் புத்திர சோகம்'னு சொல்வாங்க! கும்பகோணம் சம்பவத்தப்போ, என்னால அதை புரிஞ்சுக்க முடியலை. ஆனா, என் வீட்டு சம்பவத்துக்கு அப்புறம், அதை முழுமையா உணர்றேன்!

* உங்களோட மனதை கவர்ந்த அரசியல் புள்ளி?


அரவிந்த் கெஜ்ரிவால். எங்களோட பிரச்சனையையும், உங்க பிரச்சனையா பாருங்கன்னு, எத்தனையோ காலமா அரசியல்வாதிகளைப் பார்த்து மக்கள் சொல்லிட்டுதான் இருக்கறாங்க. ஆனா, கெஜ்ரிவால் அதை செஞ்சாரு. மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் இப்படித்தான் இருக்கணும். ஒரு நல்ல அரசியலுக்கான ஆரம்பம், கெஜ்ரிவால்!

* கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடு?


நிறைய பண்ணிட்டாங்க. ஆனா, ஒண்ணு ரெண்டு விஷயங்கள்தான் ஞாபகத்துல இருக்கு. ஒட்டுமொத்த தமிழினத்தையும் சிங்கள ராணுவம் சூறையாடுனப்போ, தமிழகமே கதறுச்சு. உடனே மத்திய அரசும், தமிழினத்தை காப்பாத்த முயற்சி எடுத்ததா சொன்னாங்க. இப்பவும் சொல்றாங்க. ஆனா, என்ன பிரயோஜனம்? தமிழினம் மொத்தமும் சிதைஞ்சுடுச்சே! 'மானிய விலையில, ஒன்பது சிலிண்டருக்கு பதிலா இனி 12 சிலிண்டர் கிடைக்கும்'ங்கற அறிவிப்புல ஆறக்கூடிய காயமா இது?

* தமிழக கட்சிகள் பற்றி என்ன நினைக்கறீங்க?


எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். இந்த வகையில, 'குடும்ப அரசியல்'ங்கற விஷயத்தை தவிர்த்துட்டு பார்த்தா, தி.மு.க., ஓகேதான்! இவங்க ஆட்சியில, அரசாங்க ஊழியர்களுக்கு சுதந்திரம் இருக்கும். ஆனா, அந்த சுதந்திரத்தை சிலர் தவறா பயன்படுத்துவாங்க. அதனால, எல்லோருக்கும் கெட்ட பேரு வரும். அ.தி.மு.க., ஆட்சின்னா, அது 'அம்மா'தான். மத்தபடி எல்லாருமே 'சும்மா'தான்! விஜய்காந்த் அரசியல்ல இன்னும் நிறைய கத்துக்கணும். ம்ம்ம்...மத்தகட்சிகளைப் பத்தி அவ்வளவா தெரியாது. தெரிஞ்சுக்க விருப்பமும் இல்லை!

* 2014 தேர்தல் மூலமா நீங்க விரும்புற மாற்றங்கள்?


சாதாரண மனுஷனும் சந்தோஷமா இருக்கிற மாதிரி விலைவாசி இருக்கணும். தினமும் கஷ்டப்பட்டு உழைக்கிறவனுக்கு, மூணு வேளை சாப்பாடு கிடைக்கணும். அரசியல் தொடர்பு இல்லாதவனும் வாழ்க்கையில ஜெயிக்கணும். மின்சாரம், தண்ணீர் பற்றாக்குறை இருக்கவே கூடாது. தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்துல, அரசு பள்ளிகளும் கல்வி கொடுக்கணும். கூடவே, குழந்தைகளோட உயிருக்கு பாதுகாப்பும் கொடுக்கணும். கல்வியை விட இது ரொம்ப முக்கியம்! ரொம்ப ரொம்ப முக்கியம்!

சேதுமாதவன் பள்ளி பேருந்து விபத்தில் பலியான மாணவி ஸ்ருதியின் தந்தை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X