அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட்கள் கழற்றிவிடப்பட்டுள்ள சூழ்நிலையில், 'பா.ஜ.,வோடு கூட்டணி அமைக்கும் முயற்சியில் இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா' என, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல் அலையடிக்கிறது. ஒருவேளை, அப்படியொரு கூட்டணி தமிழகத்தில் அமையும்பட்சத்தில், அது யாருக்கு சாதகமாக அமையும் என்பது குறித்து, அரசியல் வட்டாரங்களில் மாறுபட்ட கருத்துக்கள் அலசப்படுகின்றன. அப்படி மாறுபட்ட கருத்துக்களோடு, அரசியல் பிரபலங்கள் இருவர் நடத்திய கருத்து மோதல்:
அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் இணைவது இயற்கையான கூட்டணி. தேசியம், தெய்வீகம் என்ற, கொள்கையை இரு கட்சிகளும் கொண்டுள்ளன. இதுபோன்ற ஒரே கொள்கையைக் கொண்டுள்ள, இரு கட்சிகள் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால், யாருக்கு ஓட்டுப் போடுவது என, வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். இரு கட்சிகளும் இணைந்து கூட்டணியாக போட்டியிட்டால், வாக்காளர்களுக்கு குழப்பம் இருக்காது. ஒட்டு சிதறாமல் இருக்கும். இதனால், ஒரே கொள்கையுள்ள இரு கட்சிகளும் வெற்றிபெறும். ஆனால், இவ்விரு கட்சிகளின் கூட்டணியை, கட்சி மேலிடம் தான் முடிவு செய்யவேண்டும். மோடியும், ஜெயலலிதாவும் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற, தத்துவத்தை ஏற்பவர்கள். மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிக்க வேண்டும் என்பதில், தீவிரமாக இருப்பவர்கள். இருவரும், மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், நாட்டில் நிலவும் வறட்சி போக்கப்படும், வளர்ச்சி மேம்படும், நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும், வேலைவாய்ப்பு பெருகும். அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்தால், யாருக்கு நல்லது என்றால், நாட்டுக்கு நல்லது. தமிழக மக்களுக்கு நல்லது. மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும், ஆட்சிக்கு முக்கியமானவை. அவர்கள் அனைவருக்கும் சமமான அதிகாரம் இருக்கும். இதற்கு மாறாக, கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியில், யார் பெரியவர்கள் என்ற பேச்சே இல்லை. பா.ஜ., தலைமையில் ஆட்சி அமையும் போது, அதில் அ.தி.மு.க., பங்கேற்றால், அக்கட்சியின் கை ஓங்கிவிடும் என்றோ, கூட்டணிக்கு பா.ஜ., தலைமை வகிப்பதால், அதன் கை ஓங்கிவிடும் என்றோ கூறுவதற்கில்லை. கூட்டணி என்பது, ஒத்த கருத்துடையவர்களும், ஒரே கொள்கை உடையவர்களும் இணைந்து உருவாக்கினால், அதன் ஆயுள் அதிகம். அதற்கு, அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி உகந்தது. பா.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., ஏற்கனவே அங்கம் வகித்து அனுபவம் கொண்ட கட்சி என்பதும், முக்கியமான ஒன்று. எனவே, இக்கூட்டணி அமைவதை மக்களும் வரவேற்பார்கள்.
எஸ்.வி.சேகர், பா.ஜ.,
நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. மோடியை பிரதமராக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரையும், இதே நிலை தான் நீடிக்கிறது. ஆனால், இருக்கும் ஆதரவை, ஓட்டாக மாற்றும் வல்லமை, தமிழக பா.ஜ.,வுக்கு குறைவாக உள்ளது. அதனால், கூட்டணியை நாட வேண்டிய அவசியம் அக்கட்சிக்கு உள்ளது. ஆனால், பா.ஜ., அமைக்கும் கூட்டணி, அக்கட்சிக்கு லாபம் தருவதாக இருக்க வேண்டும். லோக்சபா தேர்தல் மூலம், மாபெரும் வெற்றியை பா.ஜ.,வால் பெறு முடியவில்லை என்றாலும், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதன்மூலம், தமிழகத்தில் நிலைத்து நிற்க முடியும். சட்டசபை தேர்தல்களிலும் அது எதிரொலிக்கும். ஆனால், ஒரு சில லோக்சபா சீட்டுகளுக்காக, அ.தி.மு.க.,வுடன் அக்கட்சி கூட்டணி ஏற்படுத்திக் கொண்டால், அக்கட்சிக்கு கிடைக்கவிருக்கும் பெரும் வாய்ப்பை இழக்க நேரிடும். அதன் வேரில், அதுவே வெந்நீர் ஊற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும். மோடியின் மூலம் கிடைத்துள்ள பெரும் ஆதரவை, ஜெயலலிதாவுக்கு தாரை வார்த்து விடுவார்கள். அதன்மூலம், ஜெயலலிதா வெற்றிபெற்றுக் கொள்வார். தமிழ் மாநில காங்கிரசுக்கு, தமிழக மக்கள் அளித்த மாபெரும் வாய்ப்பை, தி.மு.க.,வுக்கு அளித்துவிட்டு, அக்கட்சி தெருவுக்கு வந்த நிலை தான், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்தால் உருவாகும். அ.தி.மு.க.,- தி.மு.க., அல்லாத ஒரு அணியை, தேசிய கட்சியான பா.ஜ., தலைமையில் உருவாக்குவதன் மூலம், திராவிட கட்சிகள் மாறி, மாறி தமிழகத்தை ஆட்சி செய்ததற்கு முடிவு கட்டலாம். புதிய மாற்றத்தை தமிழகத்திலும் உருவாக்க முடியும். அதற்கு, லோக்சபா தேர்தல் அடித்தளமாக பா.ஜ.,வுக்கும், அதன் தலைமையில் அணிவகுக்கும் கட்சிகளுக்கும் கிடைக்கும். எனவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, அ.தி.மு.க.,வுக்கு பெரும் லாபத்தையும், பா.ஜ.,வுக்கு பெரும் நஷ்டத்தையும் தான் ஏற்படுத்தும். என்னைப் பொறுத்தவரை, அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி ஏற்பட வாய்ப்பு மிக அரிது. அப்படி அமைந்தால் அது, பா.ஜ.,வுக்கு பாதிப்பு.
தமிழருவி மணியன், தலைவர், காந்திய மக்கள் கட்சி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE