தொகுதி நிலவரம்: கள்ளக் குறிச்சி| Dinamalar

தொகுதி நிலவரம்: கள்ளக் குறிச்சி

Added : மார் 08, 2014 | |
பிரச்னைகள், எதிர்பார்ப்பு* விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு, தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாகும். கடந்த, சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாகவும் அளித்தது. இதுவரை நடவடிக்கை இல்லை * கள்ளக்குறிச்சி ரயில் நிலைய திட்ட பணிக்கு, மத்திய அரசு, 39.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், பல
தொகுதி நிலவரம்: கள்ளக் குறிச்சி

பிரச்னைகள், எதிர்பார்ப்பு
* விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு, தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாகும். கடந்த, சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாகவும் அளித்தது. இதுவரை நடவடிக்கை இல்லை


* கள்ளக்குறிச்சி ரயில் நிலைய திட்ட பணிக்கு, மத்திய அரசு, 39.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், பல ஆண்டுகளாக, திட்டம் கிடப்பில் உள்ளது. கடந்த, லோக்சபா தேர்தலின் போது, அனைத்து முக்கிய கட்சிகளின், முதன்மை வாக்குறுதியாக, கள்ளக்குறிச்சி ரயில் திட்டம் இடம் பெற்றது


* கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்


* ரிஷிவந்தியம், மூங்கில்துறைப்பட்டு ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்


* மேட்டூர் அணையிலிருந்து, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஒன்றியங்களுக்கு வரும், கால்வாய் நீளத்தை அதிகரித்து, விவசாயம் செழிக்க வழி செய்ய வேண்டும்


* சுவேகா நதியின் குறுக்கே உள்ள, சேரடி அணையை உயர்த்த வேண்டும்; ஆத்தூர் அருகே, கல்லாற்றின் குறுக்கே, அணை கட்ட வேண்டும்; மணலூர்பேட்டை அருகே, தென்பெண்ணை ஆற்றில் பாலம் கட்ட வேண்டும்


* கள்ளக்குறிச்சி எம்.பி.,யாக தேர்வான, ஆதிசங்கர், மக்களின் அடிப்படை தேவைக்காக, எந்த பெரிய திட்டத்தையும் செயல்படுத்தவோ, கொண்டு வரவோ முயற்சி எடுக்கவில்லை என்பது, இத்தொகுதி மக்களின் ஆதங்கம். தொகுதியில், தற்போது, குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கியுள்ளது


* கல்வராயன் மலையில், கடுக்காய் அதிகம் விளைகிறது. மலைவாழ் மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்த திட்டங்களை செயல்படுத்த, அரசு முனைப்பு காட்டவில்லை; இதனால், பலர், வேலையின்றி, சாராயம் காய்ச்சுவதில் ஈடுபடுகின்றனர்


* ஏற்காடு தொகுதியில், பல மலை கிராமங்களுக்கு, முறையான சாலை, மின் வசதி இல்லை. மருத்துவ வசதி, எட்டா கனியாக உள்ளது. மலைவாழ் மக்களுக்கு, குடியிருப்பு பட்டா முறையாக வழங்கப்படவில்லை


* சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க.,வினர் அளித்த முக்கிய வாக்குறுதிகளை கண்டுகொள்ள வில்லை. அமைச்சர் மோகன் இத்தொகுதியில் இருந்தும் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்காததால், ஆளும்கட்சியினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படும் நிலை உள்ளது

கடந்த தேர்தல்

2009 லோக்சபா தேர்தலில், பா.ம.க.,- - ம.தி.மு.க.,- - கம்யூ., ஆதரவோடு அ.தி.மு.க., சார்பில் தன்ராஜும், காங்., -- தி.மு.க., வி.சி., ஆதரவோடு ஆதிசங்கரும், தே.மு.தி.க., சார்பில் சுதீஷும் போட்டியிட்டனர்.

எம்.பி., பேட்டி

* ஐந்து ஆண்டுகளில், தொகுதி மக்களை சந்தித்தது எத்தனை முறை?


கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசித்து வருகிறேன்; தமிழகத்தில் இருக்கும் போது, அனைத்து நாட்களிலும், தொகுதி மக்களை சந்தித்துள்ளேன்.

* தொகுதி குறித்து, பார்லிமென்டில் என்னென்ன பேசியுள்ளீர்கள்?


சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில் திட்டத்தை துவக்க வேண்டும்; ஏற்காடு, தலைவாசல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், குளிர்சாதன கிடங்கு வேண்டும்; கல்வராயன் மலையில் கடுக்காய் தொழிற்சாலை அமைக்க வேண்டும்; சின்னசேலம் அடுத்த வி.கூட்ரோட்டில் ஆட்டுப் பண்ணையில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்தல் போன்ற, கோரிக்கைகள் வைத்தேன். இவை அனைத்தையும், நிறைவேற்றி தருவதாக, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* மத்திய அரசு நிதி மூலமாக உங்கள் தொகுதிக்கு செய்த பணிகள்?


தொகுதி மேம்பாட்டு நிதியை, முழுமையாக செலவு செய்துள்ளேன். குடிநீர், கால்வாய், கிராமப்புறங்களில் சிமென்ட் சாலை மற்றும் மின் விளக்கு வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை.

* எத்தனை மசோதாக்களுக்கு ஆதரவாக, ஓட்டு அளித்து உள்ளீர்கள்?


நாடாளுமன்றத்தில் விவாவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, அனைத்து மசோதாக்களிலும் கலந்து கொண்டு ஓட்டளித்துள்ளேன்.

* உங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பு...


கண்டிப்பாக... தி.மு.க., வெற்றி பெறும்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X