தமிழகத்தில், வேலைவாய்ப்பு அளிப்பதில், விவசாயத்திற்கு அடுத்த நிலையில் உள்ள சிறு, குறு தொழில்கள் துறையில், பிளாஸ்டிக் உற்பத்தி தொழிலுக்கு முக்கிய பங்கு உண்டு. அரசுக்கு, 2,000 கோடி ரூபாய் வரி வருவாய் தரும் இந்த துறை, கட்டுப்பாடற்ற மூலப்பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, எட்டாக்கனியாகும் வங்கிக்கடன் மற்றும் விற்கப்பட்ட பொருட்களுக்கு பெரிய நிறுவனங்கள் உரிய காலத்தில் பணம் தராமல் இழுத்தடிப்பாலும் நலிவடைந்து உள்ளது. தமிழகத்தின் பிளாஸ்டிக் பயன்பாடு, ஆண்டுக்கு, 12 லட்சம் டன். அதற்கேற்ப உற்பத்தி இல்லை. 50 சதவீதம் வரை, பிற மாநிலங்களில் இருந்து பெறுகிறோம். தமிழகத்தில், ஏன் தென் மாநிலங்களில் கூட, பெரிய அளவில் பிளாஸ்டிக் மூலப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் இல்லாததால், மூலப்பொருட்களுக்கு, வட மாநிலங்களையே நம்ப வேண்டியுள்ளது.
இந்தியாவில், பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தயாரிப்பில், தனியார் நிறுவனமான ரிலையன்ஸ், பொதுத்துறை நிறுவனங்களான, கெயில் மற்றும் ஐ.ஓ.சி., தனியார் - பொதுத்துறை நிறுவனமான, 'ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் என, நான்கு பெரிய நிறுவனங்கள் உள்ளன. இதில், சந்தையில், 70 சதவீத பங்கை ரிலையன்ஸ் வைத்துள்ளது. அதனால், அந்த நிறுவனம் வைத்தது தான் சட்டம். பொதுத்துறை நிறுவனங்களும், ரிலையன்சுடன் கூட்டு சேர்ந்து, பிளாஸ்டிக் துறையை ஆட்டிப்படைக்கின்றன. விலை நிர்ணயம் தொடர்பாக, எந்த கட்டுப்பாடும் இல்லாததால், பொருட்களை தேக்கி வைத்து, வாரம் தோறும் விலையை ஏற்றுகின்றன. மூலப்பொருட்கள் அதிகம் தேவைப்படும் நேரத்தில், வடமாநிலங்களில் விற்பர்; தேவை குறையும்போது, தமிழகத்திற்கு தருவர். வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மூலப்பொருட்களை கொண்டு வர, லாரி வாடகை, கிலோவுக்கு ஐந்து ரூபாய் ஆகிறது. இந்த வித்தியாசத்தால், வட மாநில பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுடன், தமிழக உற்பத்தியாளர்கள் போட்டியிட முடிவதில்லை. மூலப்பொருட்களை இறக்குமதியாவது செய்யலாம் என்றால், அதற்கு, 7.5 சதவீதம் சுங்கவரியும், 4 சதவீதம் சிறப்பு கூடுதல் வரியும் கட்ட வேண்டும். இதனால், 15 சதவீதம் கூடுதலாவதால் இறக்குமதிக்கும் வாய்ப்பில்லை. புதிதாக அமையும் மத்திய அரசு, ஒவ்வொரு பிராந்தியத்திலும், மாநில அரசுகளுடன் இணைந்து, பெரிய அளவில் பிளாஸ்டிக் மூலப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களை துவங்க வேண்டும். பிளாஸ்டிக் தொழிலுக்கு, மூலப்பொருட்கள் உயிர் என்றால், மின்சாரம் உடல் போன்றது. 2007ல், துவங்கிய மின்வெட்டு பிரச்னை இன்னும் தீரவில்லை. புதிதாக அமையும் மத்திய அரசு, தினமும், 16 மணி நேரமாவது தொடர் மின்சாரம் கிடைக்கும் வகையில், சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தற்போது, சிறு, குறு தொழில்கள் கடன் வாங்கினால், 24 சதவீதம் வட்டி மற்றும் இதர கட்டணங்களாக வசூலிக்கப்படுகிறது. விவசாயத்திற்கு இணையான வட்டி விகிதத்தில், அடுத்து வரும் மத்திய அரசு, எங்களுக்கு கடன் தர ஏற்பாடு செய்ய வேண்டும். வேலையாட்கள் பற்றாக்குறையும் கடுமையாக உள்ளது. குறிப்பாக திறனுள்ளவர் கிடைப்பதில்லை. உற்பத்தி துறையில், உடலை வருத்தி வேலை செய்ய வேண்டும். சேவை துறையில், குளிரூட்டிய அறையில் உடல் வலிக்காமல் வேலை செய்யலாம்; நல்ல சம்பளமும் கிடைக்கும். பிரச்னையை காலம் கடந்து புரிந்து கொண்ட மத்திய, மாநில அரசுகள், தனியாருடன் இணைந்து திறன் மேம்பாட்டுப் பயிற்சி எனும், திட்டங்களை தீட்டி வருகின்றன. நம் ஊரில் திட்டங்கள் தீட்டுவது பிரமாதமாக இருக்கும்; நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை இருக்காது. இத்தகைய பிரச்னைகளில், அடுத்து வரும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
ஜி.சங்கரன், தலைவர், தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் சங்கம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE