தேர்தல் செலவு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டது ஏன்?| Dinamalar

தேர்தல் செலவு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டது ஏன்?

Added : மார் 08, 2014 | |
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொகை, 30 லட்சம் ரூபாயிலிருந்து, 70 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, 437 எம்.பி., க்கள், தேர்தல் கமிஷனால் நிர்ணயிக்கப்பட்ட, தொகையில், 59 சதவீதம் தொகையைத் தான் செலவழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஜனநாயக சீர்திருத்த சங்கம்(ஏ.டி.ஆர்)

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொகை, 30 லட்சம் ரூபாயிலிருந்து, 70 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, 437 எம்.பி., க்கள், தேர்தல் கமிஷனால் நிர்ணயிக்கப்பட்ட, தொகையில், 59 சதவீதம் தொகையைத் தான் செலவழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனநாயக சீர்திருத்த சங்கம்(ஏ.டி.ஆர்) மற்றும் தேசிய தேர்தல் பார்வையாளர் அமைப்பு (என்.இ.டபிள்யூ) என்ற, அமைப்பு கள் இணைந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு விவரங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு உள்ளன. அவ்வகையில், 2009 லோக்சபா தேர்தலில், வெற்றி பெற்ற, எம்.பி.,க்கள் செலவு செய்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அவர்களின் செலவுக் கணக்கு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்ததின் அடிப்படையில், இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வேட்பாளர்களின் தேர்தல் செலவு பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கடந்த, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், வேட்பாளர்களின் அதிகபட்ச, தேர்தல் செலவுத் தொகை, 30 லட்சம் ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், லோக்சபாவிற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட, 543 எம்.பி.,க்களில், 437 எம்.பி.,க்கள், நிர்ணயிக்கப்பட்ட செலவுத் தொகையில், 59 சதவீதம் மட்டுமே செலவழித்து உள்ளனர். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற, 70 சதவீத எம்.பி.,க்கள் செலவழித்த தொகையின் சராசரி, 14.62 லட்சம் ரூபாய் மட்டுமே. இதில், 129 எம்.பி.,க்கள், அதாவது, 30 சதவீதம் எம்.பி.,க்கள், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, 50 சதவீதத்திற்கும் குறைவாகவே செலவழித்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்ற, 317 எம்.பி.,க்கள், தேர்தலில் தங்கள் சொந்த பணத்தை செலவழித்ததாகவும், தங்கள் கட்சியின் சார்பில் எவ்வித தொகையும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்து உள்ளனர். இதேபோல், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களிலும், வேட்பாளர்கள் பலரும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, மிக் குறைந்த தொகையையே செலவழித்து உள்ளனர். டில்லி, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள், நிர்ணயிக்கப்பட்ட தொகையில், 51 சதவீதமும், சத்தீஸ்கர் எம்.எல்.ஏ.,க்கள், 53 சதவீதமும், மத்திய பிரதேச மாநில எம்.எல்.ஏ.,க்கள், 48 சதவீதமும், ராஜஸ்தான், மிசோரம் எம்.எல்.ஏ.,க்கள், முறையே, 46, 55 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஏ.டி.ஆர்., மற்றும் என்.இ.டபிள்யூ., வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில், வேட்பாளர்கள் சிக்கனமாக செலவழித்துள்ள நிலையில், தற்போது, வேட்பாளர்களின் தேர்தல் செலவுத் தொகையின் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தவிர, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், குறைந்த அளவு தொகையே செலவு செய்வது உண்மையானால், சமீபத்தில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பு உயர்த்தப்பட்டதை, அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளது ஏன்? என்ற கேள்வியும் எழுவதாக, அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். எனவே, தேர்தல் செலவு விவகாரத்தில், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் செலவழிக்கும் உண்மையான விவரங்கள் பெறப்படுவதோடு, தேர்தல் கமிஷன், வேட்பாளர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிப்பதின் மூலம், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, இலவசங்களை வாரி வழங்குவது போன்றவற்றை தவிர்க்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் செலவழித்த வேட்பாளர்கள்: சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, உத்தர பிரதேச முதல்வர், அகிலேஷ் யாதவ், 2009ல் நடந்த எம்.பி., தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டு லோக்சபாவிற்கு தேர்தெடுக்கப்பட்டார். இவர், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக தொகை செலவழித்துள்ளார். சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.பி., பிரேம் தாஸ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.பி., யஷ்வந்த் நாராயண் சிங் ஆகியோரும் அதிக தொகை செலவழித்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X