உள்ளாட்சிகளில் பதவி வகிக்கும் அரசியல் கட்சியினர், தங்களுடைய சொந்த வாகனத்தில், பதவியின் பெயர் பலகை, கட்சி கொடி பயன்படுத்தினால், அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தில், தேர்தல் நடத்தை விதி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் மகரபூஷணம் பேசியதாவது: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சி பிரமுகர்களின் விளம்பர பேனர், சுவரொட்டி, சுவர் விளம்பரம் ஆகியவற்றை, அந்தந்த பகுதி மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊழியர் அகற்ற வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும், திரும்ப பெறப்பட்டுள்ளன. அதேபோல், உள்ளாட்சி பிரதிநிதிகள், சொந்த வாகனங்களில், பதவி பெயர் பலகையையோ, கட்சி கொடியையோ வைத்திருக்கக் கூடாது. மீறி வைத்து இருந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்து விட வேண்டும். பாக்ஸ் வடிவிலான ஸ்பீக்கரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம், வரும், 9ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, மக்கள் பார்க்கும் வண்ணம், விழிப்புணர்வு பேனர் வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE