அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட, ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம் பெற்ற, தமிழக எம்.பி.,க்களுக்கு எதிராக, லோக்சபா தேர்தலில், பலமான வேட்பாளர்களை நிறுத்த, 'ஆம் ஆத்மி' கட்சி முடிவு செய்துள்ளது.
'லோக்சபா தேர்தலில், ஊழல் அரசியல்வாதிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்' என்ற கருத்தை தெரிவித்த, டில்லி மாநில முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனருமான, அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் அரசியல்வாதிகள் என, 160 பேர் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில், தமிழக அரசியல்வாதிகள் சிலரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. கெஜ்ரிவால் வெளியிட்ட அந்தப் பட்டியலில் இடம் பெற்ற, மற்ற மாநில அரசியல்வாதிகளுக்கு எதிராக, லோக்சபா தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதேநேரத்தில், பட்டியலில் இடம் பெற்ற, தமிழக அரசியல் தலைவர்கள் சிலர், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அவர்களை எதிர்த்து, பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த தயாராக உள்ளதாக, தமிழக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழக ஆம் ஆத்மி கட்சியின், மாநில பிரசாரக் குழு அமைப்பாளர், டேவிட் பரூன் குமார் கூறியதாவது: தமிழகத்தில், 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டு, வேட்பாளராக விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு, நேர்காணலும் முடிந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட, ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம் பெற்ற, தமிழக எம்.பி.,க்களான ராஜா, சிதம்பரம், வாசன் ஆகியோரை எதிர்த்து, பலம் வாய்ந்தவர்களை நிறுத்த முடிவு செய்து, அதற்கான வேட்பாளர்களையும் தேர்வு செய்துள்ளோம். மூவரும் நிற்கும் தொகுதிகள் தெரியவந்தவுடன், எங்கள் வேட்பாளரை களமிறக்குவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE