எருமை குளித்த குட்டை போல் குழம்பிக்கிடந்த தமிழக கூட்டணி நிலவரம், தற்போது, சற்றே தெளிவுபெற்று வருகிறது. இந்த முறை நடந்த குழப்பங்களுக்கு காரணம் வாக்கு வங்கி புள்ளிவிவரம் தான். இதை தீரப்பார்த்தால், ஏன் பா.ஜ., வோடு சேர பெரிய கட்சிகள் தயங்குகின்றன, ஏன் தேர்தலுக்கு முன் வலுவான கூட்டணி அமையாவிட்டால், ஜாதி ஓட்டுகள் முக்கியத்துவம் பெறும் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.
தமிழக தேர்தல் அரசியலை எம்.ஜி.ஆர்.,க்கு முன், எம்.ஜி.ஆர்.,க்கு பின் என, இரு காலகட்டங்களாக பிரிக்கலாம். இதில், எம்.ஜி.ஆர்.,க்கு பின் என்ற, காலகட்டத்தில், ராஜிவ் காந்தி படுகொலை (1991), ஜெயலலிதா எதிர்ப்பு அலை (1996) மற்றும் தி.மு.க., எதிர்ப்பு அலை (2011) ஆகிய மூன்று தேர்தல்களை தவிர, மற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி, -தோல்வியை ஏறத்தாழ, 40 சதவீத 'நடுநிலை வாக்காளர்கள்' தீர்மானித்தார்கள். குறிப்பிடத்தக்க அந்த மூன்று தேர்தல்களில் மட்டும், நடுநிலை வாக்காளர்கள், ஒவ்வொரு கூட்டணியின் வெற்றி தோல்வியோடு சேர்த்து, அதன் வாக்கு சதவீதத்தையும் தீர்மானித்தார்கள். கடந்த, 2011 சட்டமன்ற தேர்தலை, கூட்டணிகளாக சந்தித்த தமிழக கட்சிகள், அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலை தனித்தனியாக சந்தித்தன. அந்த தேர்தலில், ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்கு விகிதம் தான் தற்போது ஏற்பட்ட கூட்டணி நிலை அல்லது வினைக்கு காரணம். அந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு, 51 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. அதை தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க.,விற்கு, 39 சதவீத வாக்குகள் கிடைத்தன. சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.,வின், 10 சதவீதம் வாக்குகள் மற்றும் எஞ்சிய சதவீதத்தை கம்யூனிஸ்ட் கட்சிகளின் கணக்கு என, கழித்தால், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., பெற்ற வாக்கு சதவீதம் சரியே என, தெரியும். அதே உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., 26 சதவீதமும், காங்கிரஸ் ஆறு சதவீதமும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
2011ல் கடுமையான தி.மு.க., எதிர்ப்பு அலை இருந்ததால், அ.தி.மு.க.,வின் வாக்கு சதவீதத்தை நடுநிலை வாக்காளர்கள் அதிகரித்தனர். ஆனால், தற்போதைய நிலையில், இரண்டு பெரிய திராவிட கட்சிகளுக்கும், அவற்றின் குட்டி கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து, தங்களுடைய வழக்கமான அளவான, ஏறத்தாழ தலா 30 சதவீத வாக்குகள் தான் உள்ளன. இது தவிர, 'மோடி வாக்கு'களை கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. வழக்கமாக தமிழகத்தில் இரண்டு சதவீத வாக்குகளை பெறும், பா.ஜ.,வுக்கு, நாடு முழுவதும் வீசும் மோடி ஆதரவு அலையால், வாக்கு சதவீதம், 10 சதவீதமாக உயரலாம் என்ற, எதிர்பார்ப்பு உள்ளது. இவை தான் 'மோடி வாக்கு'கள். இப்படிப்பட்ட வாக்குகள் உள்ளன என்பதை, ஜெயலலிதாவின் ஆதரவு கோளாறால், 1998, 1999ல் அடுத்தடுத்து நடந்த, லோக்சபா தேர்தல்கள் நிரூபித்தன. அந்த சமயத்தில் வாஜ்பாய்க்கு ஆதரவான அலை இருந்ததால், தமிழகத்தில், பா.ஜ., அங்கம் வகித்த கூட்டணி களுக்கு (முதலில், அ.தி.மு.க., பின்னர், தி.மு.க.,) வழக்கத்தைவிட, 78 சதவீதம் அதிக வாக்குகள் கிடைத்ததாக புள்ளிவிவரங்கள்
தெரிவிக்கின்றன. ஆனால், 'வாஜ்பாய் வாக்கு'கள், பாரதிய ஜனதா வாக்குகளாக மாறிவிடவில்லை என்று, பின்னர் நடைபெற்ற தேர்தல்கள் நிரூபித்தன. அதே போல், பா.ஜ.,வோடு கூட்டணி வைத்திருந்ததால், 2001 சட்டமன்ற தேர்தலில் 'மைனாரிட்டி வாக்கு'களை தி.மு.க., இழந்தது. அதனால், அந்த தேர்தலில், மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில், பல தொகுதிகளை அந்த கட்சி இழக்க நேரிட்டது. இதனாலேயே, 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு, தி.மு.க., முழுக்குப் போட்டது. அதனால் தான், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் 'மோடி வாக்கு'களில் குளிர்காய பார்த்தாலும் பா.ஜ.,வுடன் தொடர் உறவு கொள்வதற்கு தயக்கம் காட்டுகின்றன.
ஆட்சி பொறுப்பில், தான் இல்லை என்பதாலும், தேசிய அரசியல் சூழ்நிலை இன்னமும் தெளிவடையவில்லை என்பதாலும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, அவ்வப்போது மோடி ஆதரவு நிலை எடுப்பதாக காட்டி வருகிறார். இந்த தேர்தலில் 'மோடி வாக்கு'கள் என்பது, அ.தி.மு.க., வசம் உள்ள 'தி.மு.க.,விற்கு எதிரான வாக்கு வங்கி'-யின் ஒரு பகுதிதான். அதனால், பா.ஜ., - தி.மு.க., கூட்டணி ஏற்பட்டால், மோடி ஆதரவு வாக்குகள், தி.மு.க.,விற்கு எதிர்பார்க்கப்படும் அளவிற்கு கிடைக்காமல் போகலாம். 'மைனாரிட்டி வாக்கு' களால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., விரும்பவில்லை என, ஒரு பக்கம் இருக்கையில், தி.மு.க.,விற்கு எதிரான வாக்குகளில் ஒரு பங்கே மோடி ஆதரவு வாக்குகள் என்பதால், தி.மு.க.,வுடனான கூட்டணியை பா.ஜ., விரும்பவில்லை. இந்த நிலையில், தி.மு.க., கூட்டணியின் வாக்குகளுடன், தே.மு.தி.க., மற்றும் காங்கிரசின் வாக்கு வங்கிகளும் இணைந்தால், அந்த அணிக்கு புதிய தெம்பு வந்துவிடும். அதே சமயம், பா.ஜ., அணியில், தே.மு.தி.க., பங்கு வகித்தால் மட்டுமே, அது வெற்றி கூட்டணி ஆகிவிடும் என்று கருத இடமில்லை. மாறாக, அ.தி.மு.க., அணிக்கும், -தி.மு.க., அணிக்கும் இடையே கடும் போட்டியை, பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணி உருவாக்கும். தே.மு.தி.க., கூட்டணி விவகாரத்தில் குழப்பி அடித்ததற்கு இது ஒரு முக்கிய காரணம். ஆனால், தற்போது, இத்தகைய நிலை தான் உருவாகி வருகிறது. இந்த நிலையில், மாநிலம் தழுவிய வகையில் மட்டுமல்ல, மாவட்டம் மற்றும் கிராமம் கிராமமாகவும் ஜாதி வாக்குகள் அதீத முக்கியத்துவம் பெறும். இடையில் 'ஆம் ஆத்மி கட்சி'யும் ஆங்காங்கே வாக்குகளை பிரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது, தேர்தலுக்கு முன்பே பலமான கூட்டணி உருவாகவில்லை எனில், கடும் போட்டி சூழல் உருவாகி வெற்றி, தோல்விகளை கணிப்பது கடினமாகும்; தேர்தல் முடிந்த பின்னரே ஒவ்வொரு தொகுதியிலும் என்ன நடந்தது என, புரியவரும்.
என். சத்தியமூர்த்தி, (கட்டுரையாளர் - இயக்குனர், அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன், சென்னை)
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE