கெஜ்ரிவால் காட்டும் வழி: பேராசிரியர். க. பழனித்துரை

Added : மார் 08, 2014 | கருத்துகள் (6) | |
Advertisement
மக்களாட்சிக்கு உள்ள அடிப்படைக் கூறுகளில், அம்சங்களில், குணாதிசயங்களில் இரண்டே இரண்டு அம்சங்களைத்தான், நம் மக்களாட்சி பூர்த்தி செய்து வந்துள்ளது. அதாவது, தேர்தல் நடத்துவது, தேர்தல் முடிந்தவுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் ஆட்சிக்கட்டிலில் அமர்வது என்ற, இரண்டு நிகழ்வுகளில் மட்டும்தான் மக்களாட்சியின் அடிப்படை அம்சங்களை முழுமையாக
கெஜ்ரிவால் காட்டும் வழி: பேராசிரியர். க. பழனித்துரை

மக்களாட்சிக்கு உள்ள அடிப்படைக் கூறுகளில், அம்சங்களில், குணாதிசயங்களில் இரண்டே இரண்டு அம்சங்களைத்தான், நம் மக்களாட்சி பூர்த்தி செய்து வந்துள்ளது. அதாவது, தேர்தல் நடத்துவது, தேர்தல் முடிந்தவுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் ஆட்சிக்கட்டிலில் அமர்வது என்ற, இரண்டு நிகழ்வுகளில் மட்டும்தான் மக்களாட்சியின் அடிப்படை அம்சங்களை முழுமையாக நிறைவு செய்திருக்கிறது இந்தியா. மக்களாட்சியில் உள்ள மற்ற எந்த அம்சங்களையும் அது பூர்த்தி செய்யவில்லை, பூர்த்தி செய்ய முயலவும் இல்லை, முடியவும் இல்லை.அடிப்படையில் மக்களாட்சி என்பது ஒரு செயல்பாட்டுக் கலாசாரம். ஒருவரையொருவர் மதித்து நடத்துதல், நேர்மையாகவும், நீதியுடனும் தன்னை நடத்திக் கொள்ளுதல், சுதந்திரம், சமத்துவம் இரண்டையும் நடைமுறைப்படுத்துதல், எதிர்மறைக் கருத்துகளுக்கு மதிப்பளித்தல், அதற்கான பக்குவம் பெறுவதற்கான சூழலை உருவாக்கித் தருகிற பங்கு, பொறுப்பு அரசியல் மற்றும் அரசு அமைப்புகளுக்கு, நிறுவனங்களுக்கு உள்ளது.அறுபது ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்சியில், அரசியலில், மக்களாட்சி என்பதற்கான அம்சங்கள் என்பது குறைவாகவே வெளிப்பட்டு, நம் மக்களாட்சி, பற்றாக்குறையாக இருந்து வந்தது.

ஜாதியால் உருவான ஏற்றத்தாழ்வுகள், மதத்தால் உருவான பிரிவினைகள், பொருளாதாரத்தால் உருவாக்கப்பட்ட எல்லையில்லா ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும், மக்களாட்சி செயல்படுவதற்கு மிகப்பெரிய தடைகள். சமூகத்தில் காணப்படும் இந்த நோய்கள், அரசியலை, ஆளுகையை மற்றும் நம் நிர்வாகத்தையும் தாக்கிவிட்டன.இந்தச் சூழலில் இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்துகிற பணியையும், மக்களுக்கு மேம்பாட்டை கொண்டுவருகிற பணியையும் இந்திய அரசு மேற்கொண்டது. அந்தப் பணியினைச் செய்வதற்கு ஜனநாயக முறையில் மக்களின் ஓட்டுகளைப் பெற்று முழு அங்கீகாரம் படைத்த, சர்வ வல்லமைகொண்ட அரசாக உருவாகி, ஆட்சிக்கட்டிலில் அமர்வோர், எஜமானர்கள் போலவும், மக்கள் அடிமைகளைப் போல நடந்துகொள்ளவும், நடத்திடவும் பழகிக்கொண்டனர்.மக்களை மையப்படுத்தி, மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை ஊட்டி, வளர்ச்சிச் செயல்பாடுகளில் மக்களை பங்கேற்கச் செய்வதற்குப் பதில், மக்களைப் பயனாளிப் பட்டாளமாக மாற்றி, அரசு போடும் சலுகைகளைக் கவ்விப்பிடிக்கும், யாசிக்கும் கும்பலாக மாற்றிவிட்டனர். அத்துடன் பொதுமக்களை, ஒரு வாக்குக் கும்பலாக ஆளுகைக்குத் தூரத்தில் வைத்துக்கொண்டனர்.

மக்களை, ஓட்டுகளுக்கு மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்தின. தேர்தல் காலங்களில் மட்டும்தான் மக்கள், அரசியல் கட்சிகளால் மதிக்கப்படுகின்றனர். மற்ற நேரங்களில் மக்களை மனுதாரராகவே வைத்துக்கொண்டனர். இதன் விளைவால் மக்களாட்சியில் மக்கள் வறியவராக, அரசை எதிர்பார்த்து நிற்கும், அதிகாரமற்ற வறியவராக பார்க்கப்படுகிற சூழலுக்கு உள்ளாயினர். மக்களும் ஓட்டளிப்பதைத் தவிர்த்து, வேறு எந்த ஜனநாயகக் கடமையும் ஆற்றுவதில்லை.அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்வுகள் மட்டுமே, அரசியலாகக் கருதப்பட்டு, கட்சி அரசியல் மொத்த இடத்தையும் பிடித்துக்கொண்டு விட்டது. இதன் விளைவால், மக்கள் அரசியல் என்பது மறைக்கப்பட்டுவிட்டது.அறுபது ஆண்டுகளில், விலைவாசி உயர்வதுபோல் அரசியலின் விலையும் உயர்ந்தது. இந்த அரசியல் விலை உயர்வுக்குக் காரணம், அரசியல் கட்சிகளின் பகட்டான அரசியல் செயல்பாடுகள்தான். இதன் விளைவால் அரசியல் வணிகமாகவே மாறிக்கொண்டு வருகிறது. சந்தையின் குணங்களை அரசியல் கட்சிகள் பெற்று, 'கார்பரேட் கம்பெனிகள்' போல் ஆகிவிட்டன.

ஆனால் இன்று, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இந்த வெற்றிடத்தை நிரப்பி, ஒரு புதிய தடத்தில் பயணிக்க முயற்சி செய்து வருகிறது. இந்திய ஜனநாயகம் இதன்மூலம் இன்று விரிவுபடுத்தப்படுகிறது. மக்களுடன் அரசியலும், ஆளுகையும் இணைக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் அந்தக் கட்சி, பொதுக்கருத்தை உருவாக்க, மக்களைச் சிந்திக்க மற்றும் பங்கெடுக்க வைத்துள்ளது. மக்களிடம் கருத்துக் கேட்பது, அதைவைத்து முடிவெடுப்பது எனப் புதிய முயற்சியை எடுத்துள்ளது. இந்தக் கட்சி, மக்கள் அரசியல் நடத்த முனைகிறது.கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதற்கான காரணங்கள் இருக்கலாம். ஆனால் மக்களாட்சியில் அவர் ஏற்படுத்தியிருக்கிற புதிய முயற்சி பாராட்டப்பட வேண்டியது. ஏனென்றால், இந்திய அரசியலில் ஓட்டுகளைப் பெற்ற பிறகு, மகாராஜாக்களாகவும், எதேச்சதிகாரம் பெற்ற ஹிட்லர்களாகவும் நடந்து, ஆட்சி நடத்தும் அரசியல் தலைவர்கள் இருக்கும் நாட்டில், மக்களுடன் ஒரு கட்சி இணைந்து, பொதுக்கருத்துகளைப் பெற்று அதன் அடிப்படையில் பெரிய முடிவுகளை மேற்கொண்டுள்ளது மக்களாட்சியில் ஒரு மைல்கல்.

இந்த நாட்டில் இதற்காகவே உருவாக்கப்பட்ட உள்ளாட்சியில்கூட மக்களுடன் நம் தலைவர்கள் இணைந்திருக்க முடியவில்லை. மக்கள் மத்தியில் கருத்துகளை உருவாக்க அமைக்கப்பட்ட கிராம சபைகளை, நம் உள்ளாட்சித் தலைவர்களால், பயன்படுத்த முடியவில்லை. அதற்கான முறையான பயிற்சியை அரசு அவர்களுக்கு அளிக்கவில்லை. மக்களிடம் கருத்துகளை உருவாக்குவது என்பதும், மக்களிடம் கருத்துகளைக் கேட்பது என்பதும், ஒரு மக்களாட்சிப் பண்பாடு. அதாவது மக்களை மதிக்கும் ஒரு பண்பாடு. மக்களிடம் கருத்துகளைக் கேட்பது, அரசைவிட மக்களை மதிப்பதாகும்.ஆனால், ஒரு மாநில அரசை உருவாக்க, மக்களிடம் கருத்துக்கேட்டு, ஆம் ஆத்மி கட்சி நம் மக்களாட்சியை ஒரு மக்கள் பங்கேற்பு ஜனநாயகமாக மாற்றியுள்ளது பாராட்டக்கூடிய அம்சம்.

ஆம் ஆத்மி கட்சியினர், மக்களிடம் சென்றனர். கட்சியைக் கடந்து பொதுமக்களிடம் கருத்தை அறிந்து கட்சிக்குமேல் மக்கள் என்ற சூழலை உருவாக்கியது ஒரு புதிய அம்சம். ஏனென்றால், அறுபது ஆண்டுகால அரசியலில், கட்சிகள் கட்சிக்காரர்களைப் பிராதனப்படுத்திவிட்டு பொதுமக்களை ஓட்டுகளுக்கு மட்டும் பயன்படுத்துகிற நிலையை உடைத்து, பொதுமக்களை மையப்படுத்தி, மக்களின் கருத்துகளை அடிப்படையாக வைத்து முடிவுகள் எடுக்கும் புதுமையைத் துணிவாக இந்தப் புதிய கட்சி எடுத்துள்ளது. துணிந்து புதிய தடத்தில் பயணிக்க முனைந்துள்ளது, இந்திய மக்களாட்சியில் ஒரு புதிய பரிமாணம்.மக்களைப் பிராதானப்படுத்துவதைத்தான், காந்தி விரும்பினார். பிரதிநிதித்துவ மக்களாட்சியை, பங்கேற்பு மக்களாட்சியாக மாற்றிக்காட்டியுள்ளார் கெஜ்ரிவால். நம் அரசியல் கட்சிகள், பொதுமக்களை ஓட்டு வங்கிகளாக நினைத்து நடத்துவதைத் தவிர்த்து, பொதுமக்களை கருத்துக் கேட்புக்கு உள்ளாக்கி, நம் அரசியலை மக்கள் அரசியலாக மாற்றுவதற்கு கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மூலம் வழிகாட்டியுள்ளார்.இதைப் புரிந்து கொள்ளவேண்டும். இன்று நடக்கும் ஆடம்பர அரசியலிலிருந்து எளிமையான, பக்குவமான அரசியலுக்கு வழிகோலும் ஆம் ஆத்மி கட்சியையும், அதன் தலைவர்களையும் பாராட்ட வேண்டும். நம் அரசியல் கட்சிகள் இதைப் புரிந்துகொண்டு, நம் அரசியலைப் புதிய திசையில் பயணிக்க வைக்க முயலவேண்டும்.
இ-மெயில்: gpalanithurai@gmail.com

பேராசிரியர். க. பழனித்துரை காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (6)

vimal - Ramna  ( Posted via: Dinamalar Android App )
15-மே-201406:33:39 IST Report Abuse
vimal அவர் பேச்சு ஒரு சர்வாதி்காரி போல இருந்ததே பத்தி்ரிக்கையாளர் விசயத்தி்ல் மறந்தது ஏனோ
Rate this:
Cancel
velan - chennai,இந்தியா
20-மார்-201415:45:12 IST Report Abuse
velan டெல்லியில் ஆட்சியை விட்டு வோடும் பொது மக்களின் கருத்தை கேட்டுவிட்டு ஓடியிருக்கலாமே? ஆட்சி அமைக்கும்போது மக்களிடம் கருத்து கேட்ட கேசரிவால் ஏன் இதை செய்யவில்லை?
Rate this:
Cancel
Selva - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
19-மார்-201411:39:15 IST Report Abuse
Selva மக்களைக் கலந்தலோசிப்பதேல்லாம் சரி - அவர் பேசுவதெல்லாம் யாருடன்? அவருடைய கட்சிக்காரர்களுடன் - எப்படி நியாயமான முடிவை எடுக்க முடியும் - ஆனால் இதுவரை அவர் எடுத்த முடிவுகள் எல்லாம் அவர் தன்னிச்சையாய் எடுத்ததே. இவர் ஆட்சியை தொடர்ந்து இருந்தால் இவரைப்பற்றி முழுக்க தெரிந்திருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X