சென்னை : லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் சில வாரங்களே உள்ளன. மத்தியில், நிலையான நல்ல ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? முதலில், உங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை, உறுதி செய்து கொள்ளுங்கள். பெயர் இல்லாவிட்டாலும், கவலை வேண்டாம். வேட்பு மனு தாக்கலுக்கு, நான்கு நாட்கள் முன்பு வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க விரும்புவோரிடம், விண்ணப்பம் பெறப்படும் என, முதல் முறையாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
மேலும், இன்று 9ம் தேதி, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, சிறப்பு முகாம் நடத்தப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இவ்வாய்ப்பை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.நாடு முழுவதும், ஒன்பது கட்டமாக, லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, ஏப்ரல் 24ம் தேதி, தேர்தல் நடைபெறும். தமிழகத்தில், 2.69 கோடி ஆண்கள்; 2.68 கோடி பெண்கள்; 2,996 இதரர் என, மொத்தம் 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, கடந்த அக்டோபர் மாதம், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணி மேற்கொள்ளப்பட்டது. விடுமுறை நாட்களில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம்நடத்தப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். மொத்தம், 39 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதியான நபர்கள் பெயர் சேர்க்கப்பட்டு, ஜனவரி மாதம், இறுதி வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டது. பொதுவாக, இறுதி வாக்காளர் பட்டியல் வௌியிட்ட பிறகு, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக, துணை வாக்காளர் பட்டியல் வௌியிடப்படும். அதில், முக்கிய நபர்களின் பெயர் மட்டும் சேர்க்கப்படும். கடைசி நேரத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்போர், ஓட்டு போட முடியாத நிலை ஏற்படும்.
வாய்ப்பு:
இதை தவிர்க்க, இம்முறை தேர்தல் கமிஷன், முதன் முறையாக, வேட்பு மனு தாக்கலுக்கு, நான்கு நாட்கள் முன்பு வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பம் பெறவும், அவற்றில் தகுதியானவர்களின் பெயர்களை சேர்க்கவும், உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், இம்மாதம் 29ம் தேதி, மனு தாக்கல் துவங்குகிறது. எனவே, 25ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.விடுமுறை நாளான இன்று, மாநிலம் முழுவதும், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அங்கு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பிப்பதற்கான படிவம் 6 இருக்கும். பொதுமக்கள், ஓட்டுச்சாவடிக்கு சென்று, வாக்காளர் பட்டியலில், பெயர் உள்ளதா என, சரி பார்த்துக் கொள்ளலாம். பெயர் இல்லையெனில், உடனே விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து வழங்கலாம்.
தயாரிப்பு:
சிறப்பு முகாமில், பெயர் சேர்க்க மட்டும் விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்க முடியாது. சிறப்பு முகாமில், விண்ணப்பம் கொடுக்க முடியாதவர்கள், மார்ச் 25ம் தேதி வரை, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம், ஆகியவற்றில், விண்ணப்பம் கொடுக்கலாம். விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான நபர்களின் பெயர் சேர்க்கப்பட்டு, துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இப்பட்டியல், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வௌியிடப்படும். மேலும், முதன் முறையாக, இம்முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அவர்களுக்குரிய பகுதிகளில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வீட்டில் இல்லாதவர்கள்; இடம் மாறியவர்கள்; இறந்து போனதால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள்; ஆகியோர் விவரங்களை, தனி பட்டியலாக, வௌியிட வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக, தேர்தல் கமிஷன், இப்புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என,தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
தீவிரம்:
மேலும், தமிழகத்தில் மக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக, 60,418 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்காளர் துணைப்பட்டியல் தயாரிக்கும்போது, ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்தால், கூடுதல் ஓட்டுச்சாவடி அமைக்கப்படும். இது குறித்து, மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்து, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், ஓட்டுச்சாவடிகளில், மின்வசதி, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல, சாய்தளப்பாதை வசதி, போன்றவற்றை ஏற்படுத்தவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்க, பறக்கும் படை, கண்காணிப்பு குழு, சோதனைச் சாவடி, போன்றவற்றை ஏற்படுத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. தேர்தல் பணியில், 3 லட்சம் அரசு ஊழியர்கள், ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வௌி மாநில போலீசார், மத்திய ரிசர்வ் போலீசாரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓட்டுச்சாவடியில், பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி வழங்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுப் போட வேண்டிய, அவசியம், ஓட்டுக்கு இலவச பொருட்கள் வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்தல் கமிஷன், நடவடிக்கை எடுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE