பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சராக பணியாற்றிய நாராயணசாமி, பிரதமருடன் பணியாற்றியது குறித்த
அனுபவங்களை 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். மேலும், புதுச்சேரியில் முதல்வர் ரங்க சாமியின் ஆட்சி பற்றியும் கடுமையாக விமர்சித்தார்.
காங்., கட்சியின் துணைத் தலைவர், ராகுல் பிரசாரம் செய்த மாநிலங்களில், உங்கள் கட்சிக்கு தோல்வியே கிடைத்துஉள்ளது. ராகுலுக்கு ராசி இல்லையா?
ராகுல் பிரசாரம் செய்த அசாம், இமாசலப் பிரதேசம், மகாராஷ்டிரா உட்பட, பல மாநிலங்களில் காங்., வெற்றி பெற்றுள்ளது; ஆட்சியும் அமைத்து உள்ளது. தேர்தலை பொறுத்தவரை வெற்றியும், தோல்வியும் சகஜம். இதற்கு, தலைவர் மட்டுமே பொறுப்பு அல்ல. அனைவருக்குமே பொறுப்பும், பங்கும் உள்ளது. பல மாநிலங்களில் காங்., வெற்றி பெற்றுள்ள நிலையில், ராகுலுக்கு ராசியில்லை என்பது சரியல்ல.
நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்பதை, கட்சிரீதியாக இல்லாவிடினும், தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொள்கிறீர்களா?
இதை, கட்சி ரீதியாக மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் ஏற்க மாட்டேன். மோடியின் ஆட்சியில், குஜராத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்படவில்லை. அடிப்படை வசதிஇல்லாத கிராமங்கள் குஜராத்தில் உள்ளன. ஊடகங்கள்தான், மோடி அலையை, நகர மக்களிடம் கொண்டு வந்துள்ளன. மோடி அலை வீசுவதாக எனக்குத் தெரியவில்லை.
கடந்த காலங்களில், தி.மு.க., தலைமைக்கு மிக நெருக்கமானவராக அடையாளம் காட்டிக் கொண்டீர்கள். சென்னைக்கு வரும்போது எல்லாம், கருணாநிதியை சந்தித்தீர்கள். சமீபகாலமாக எந்த சந்திப்பும் இல்லையே, ஏன்?
காங்., கூட்டணியில், தி.மு.க., இருந்தபோது, கூட்டணி கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், மரியாதை நிமித்தமாக அவரை சந்திப்பேன். தற்போது, கூட்டணி இல்லாவிட்டாலும், நட்பு உள்ளது. அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும், தனிப்பட்ட முறையில் கருணாநிதி மீது மதிப்பும், மரியாதையும் எனக்கு உண்டு. இப்போதுகூட, அவரை சந்திக்க விருப்பப்பட்டால், தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசுவேன். ஆனால், அரசியல் ரீதியாக சந்திக்க மாட்டேன்.
புதுச்சேரியில், முதல்வர் ரங்கசாமி யின் ஆட்சி எப்படி உள்ளது? நிறை, குறைகள் என்ன?
மக்களுக்கு தந்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட, ரங்கசாமி ஆட்சி நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சி மீது மக்கள் வெறுப்பு அடைந்துள்ளனர். மாநில வளர்ச்சி பின்தங்கி உள்ளது. வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, சுற்றுலா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தவறான வரி விதிப்பால், புதுச்சேரியின் பொருளாதாரம் தள்ளாட்டம் கண்டு, அனைத்து தரப்பினரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அரசு ஊழியர்கள் தினந்தோறும் போராட்டம் நடத்துகின்றனர். என்.ஆர்.காங்., அரசு, செயல்படாத அரசு என்பது தெளிவாகி விட்டது.
காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி, ரங்கசாமி கட்சிக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறதா?
எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை, எங்கள் கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். எங்களை பொறுத்தவரை, புதுச்சேரியில் காங்., கட்சியை வலுப்படுத்த பணியாற்றி வருகிறோம். கூட்டணி சம்பந்தமாக, தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.
'மத்திய அரசு நிதி தரவில்லை' என, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பழியை தூக்கி போடுகிறாரா? உண்மையில் நடப்பது என்ன?
முந்தைய ஆண்டில், 3,000 கோடி ரூபாய்க்கு, பட்ஜெட் போட்ட முதல்வர், தற்போது, 2,000 கோடி ரூபாயாக குறைத்து, பட்ஜெட் போட்டு உள்ளார். மத்திய அரசு ஒதுக்கிய தொகையை,
40 சதவீதம் கூட, அவரால் செலவு செய்ய முடியவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே, மத்திய அரசை, ரங்கசாமி குறை கூறுகிறார்.தன் செயல்படாத தன்மையை மறைப்பதற்காக, மத்திய அரசு மீது பழிபோடுகிறார். இந்தாண்டில் மட்டும், குடிநீர், மேம்பாலம், தொழிற்பயிற்சி மையம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை போன்றவற்றுக்கு, 920 கோடி ரூபாய் ஒதுக்கீடு பெற்றுத் தந்துள்ளேன். அதில் இருந்தே, மத்திய அரசை, அவர் குறை கூறுவது, உண்மைக்குப் புறம்பானது என, தெரிகிறது.
மத்திய அரசின் நிதியுதவியை, நீங்கள், தனிப்பட்ட முறையில் தடுப்பதாக, ரங்கசாமியின் என்.ஆர். காங்., குற்றச் சாட்டுகிறதே?
இதில், உண்மை இல்லை.
இலங்கை பிரச்னை குறித்து, பிரதமரின் தனிப்பட்ட கருத்து என்ன?
சமீபத்தில், மியான்மரில், இலங்கை அதிபரை, நம் பிரதமர் சந்தித்தபோது, இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும், அவர்களது நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும், ராணுவத்தை திரும்பப் பெற்று, அரசியல் அதிகாரம் தர வேண்டும், தமிழர்களுக்கு புனர்வாழ்வு திட்டங்களை செயல்படுத்த வேண்டும், சர்வதேச நல்லெண்ணக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும் என, கூறினார்.நமது மீனவர்களை சிறைபிடிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது போன்றவற்றை நிறுத்த வேண்டும், இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், பிரதமர் வலியுறுத்தி உள்ளார். இலங்கை தமிழர்களுக்கான புனர்வாழ்வு திட்டங்களை வேகப்படுத்த வேண்டும் என்பது, பிரதமரின் தனிப்பட்ட எண்ணமாகும்.
பிரதமருடன் நேரடியாக பணிபுரிந்து உள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?
பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிவது, புதிய அனுபவமாக இருந்தது. தென் மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமர் அலுவலக இணை அமைச்சராக பணிபுரிந்தது, நிர்வாகத்தை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. என்னால் முடிந்தவரை, தமிழக, புதுச்சேரி மக்களுக்கு என்னென்ன நல்லது செய்ய வேண்டுமோ, அதை செய்திருக்கிறேன்.கூடங்குளத்தில் இருந்து அதிக மின்சாரத்தை, தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என, பிரதமரிடம் கூறியுள்ளேன். பிரதமரின் நிர்வாகத் திறமையை புரிந்து, அவரது பாணியில் பணிபுரியவும் வாய்ப்பு கிடைத்தது.பொருளாதார மேதையும், மிகுந்த அனுபவமும் உடையவரான பிரதமர், பொறுமையும், நிதானமும் உள்ளவர். அவரது பார்வையில் செயல்படுவது பெருமையாக உள்ளது.
பிரதமருக்கு கோபம் வருமா? எப்போது எல்லாம், அதை எப்படி வெளிப்படுத்துவார்?
பிரதமருக்கு கோபம் வராது. அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை. அவர் விருப்பப்படாத நிகழ்வுகள் நடக்கும்போது, என்னிடம் மனம்விட்டு பலமுறை பேசி உள்ளார். அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
பிரதமருக்கு தனிப்பட்ட கருத்துக்கள் உண்டா?
நம் நாட்டின் வளர்ச்சியில்தான், அவர் கவனம் செலுத்தினார். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அவருக்கு கிடையாது. தன் பணியை, நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் அவர்.
ஒவ்வொரு மாநிலத்தின் நிலை குறித்தும், பிரதமர் அறிந்து கொள்வாரா? மாநிலங்கள் அளவில், மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பாரா?
ஒவ்வொரு மாநிலம் சம்பந்தப்பட்ட தகவல்களையும், உளவுத் துறையினர், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்வர். மேலும், தினமும், பல மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், விஞ்ஞானிகள் என, பல தரப்பினரையும் பிரதமர் சந்திக்கிறார். அப்போது, அனைத்து மாநிலங்கள் குறித்த விபரங்களையும் தெரிந்து கொள்வார். எதிர்க்கட்சி மாநிலம், ஆளுங்கட்சி மாநிலம் என, எந்த பாகுபாடும் பார்க்க மாட்டார். மாநிலங்களுக்கு நிதிஉதவி தருவதிலும், பாரபட்சம் காட்டமாட்டார். அதேபோல, அரசியல் காரணங்களுக்காக, எந்த மாநிலத்தையும் ஒதுக்கியதும் இல்லை.
ஒவ்வொருவருக்கும் தங்கள், 'சொந்த திட்டம்' என, சிலவற்றில் ஆர்வம் இருக்கும். அந்த வகையில், பிரதமர் ஆர்வம் கொண்டு செயல்படுத்திய திட்டம் எது?
அணுமின் நிலையங்கள் நிறைய வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம். மின்சார உற்பத்தி அதிகரித்தால்தான், நாடு வளர்ச்சியடையும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே, அணுமின் நிலைய திட்டங்களில் அதிக கவனம் செலுத்தினார். இதுதான், அவரது கனவு திட்டம் என, கூறலாம்.
ஜெயலலிதாவை ஒருசில சந்தர்ப்பங்களில், பிரதமர் பாராட்டி உள்ளார். அவருக்கு, தமிழக முதல்வர் மீது, அபிமானம் வருவதற்கான காரணம் என்ன?
பிரதமரை, மரியாதை நிமித்தமாக சந்திக்கும்போது, அனைத்து மாநில முதல்வர்களையும், பிரதமர் பாராட்டுவது வழக்கமானதே. இது, மரியாதை நிமித்தமாக சொல்வது; பிரதமரின் இயல்பு.
ஜெயலலிதாவும், கருணாநிதியும் மாறி, மாறி எழுதும் கடிதங்களை பிரதமர் உண்மையிலேயே படிப்பாரா?
பிரதமர், அனைத்து கடிதங்களையும் படித்து, பதில் கடிதம் எழுவார். பிரதமர் தான் எழுதும் கடிதங்களை, நாகரீகம் கருதி, ஊடகங்களுக்கு தருவதில்லை. ஆனால், ஜெயலலிதா அனுப்பும் கடிதம் பிரதமருக்கு வருவதற்குள்ளேயே, ஊடகங்களுக்கு போய் விடுகிறது. இதுதான், ஜெயலலிதாவுக்கும், பிரதமருக்கும் உள்ள வித்தியாசம்.
பிரதமர் அலுவலக அமைச்சராக பணியாற்றியதில், உங்கள் நினைவில் நிற்கும் சம்பவம் ஏதேனும் உண்டா?
சுவையான சம்பவம் ஒன்றை கூறுகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் செலுத்துவது, இரண்டு முறை தோல்வியடைந்தது. இதனால், நாட்டுக்கு இழப்பு ஏற்படுவது குறித்து பிரதமரிடம் கூறினேன். 'ஆராய்ச்சியில் வெற்றியும் கிடைக்கும்; தோல்வியும் வரும். நம் விஞ்ஞானிகள் நிறைய வெற்றிகளை தந்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்' என்றார். ஸ்ரீஹரிகோட்டா, பெங்களூரூ உட்பட, அனைத்து இடங்களுக்கும் சென்று விஞ்ஞானிகளை சந்தித்து பேசினேன். அதற்கு பிறகு, 10 ஜி.எஸ்.எல்.வி., - பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டன. இவை அனைத்தும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாயை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உள்நாட்டிலேயே, கிரையோஜெனிக் தொழில்நுட்ப இன்ஜின் தயாரித்து, உலகத்தில் மூன்றாவது நாடாக உயர்ந்துள்ளோம். இவை அனைத்தும், நம் விஞ்ஞானிகளை ஊக்குவித்ததால் செய்ய முடிந்தது. நம் பிரதமர் பெரிய தீர்க்கதரிசி என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இந்த சம்பவம், என் மனதில் நிற்கிறது.
'நான் கொண்டுவந்த திட்டங்கள்' :
*புதுச்சேரி மாநிலத்தின், காரைக்கால் பகுதியில், என்.ஐ.டி.,யை கொண்டு வந்துள்ளேன். கடல்சார் பல்கலைக்கழகத்தின் கிளை, தொழிற்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். புதுச்சேரி மாநிலத்தின் மாகி, ஏனாம் பகுதிகளில் புதிதாக சமுதாயக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளேன்.
*புதுச்சேரியில் நான்கு இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவதற்கும், குடிநீர் திட்டங்களுக்கும், 620 கோடி ரூபாய்க்கு, மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுத் தந்துள்ளேன். புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களுக்காக, பிரதமரிடம் கூறி, 125 கோடி ரூபாய் வழங்க ஏற்பாடு செய்துள்ளேன்.
*நாட்டின் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில், புதுச்சேரிக்கு, 11 ரயில் சேவைகள், காரைக்காலுக்கு, ஆறு ரயில் சேவைகளை கொண்டு வந்துள்ளேன். 2,000 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடும், புதுச்சேரிக்கு, இந்தாண்டு மட்டும், 1,000 கோடி ரூபாய் பெற்றுத் தந்துள்ளேன்.
*தமிழகத்துக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் கொண்டு வந்துள்ளோம். மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு, தனி இயக்குனர் நியமித்து, தன்னாட்சி அதிகாரம் பெற்ற மையமாக்கி உள்ளோம். இது, 20 ஆண்டு கால கோரிக்கை.
*மத்திய அமைச்சர் வாசனின் ஒத்துழைப்புடன், எண்ணூர் துறைமுக அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கித் தந்துள்ளோம். விழுப்புரத்தில் இருந்து, நாகப்பட்டினத்துக்கு, புதுச்சேரி, காரைக்கால் வழியாக, நான்குவழி சாலை அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வாங்கித் தந்துள்ளோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE