தெலுங்கர் பிடியில் கூட்டணி : பா.ம.க., லபோதிபோ!| PMK angry over alliance | Dinamalar

தெலுங்கர் பிடியில் கூட்டணி' : பா.ம.க., லபோதிபோ!

Updated : மார் 11, 2014 | Added : மார் 10, 2014 | கருத்துகள் (8)
Share
தெலுங்கர்  பிடியில் கூட்டணி' : பா.ம.க., லபோதிபோ!

பிற கட்சிகளோடும், சமூகங்களோடும், தாங்கள் எடுக்கும் உரசல் நிலைப்பாட்டால் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும் பா.ம.க., தற்போது, 'தமிழக பா.ஜ., கூட்டணி, தெலுங்கர்கள் பிடியில் சிக்கியுள்ளது. தெலுங்கர் அல்லாதவர்கள் தலைமை வகிக்கும் கட்சிகளுக்கு உரிய தொகுதிகள் கிடைக்குமா என்ற, சந்தேகம் ஏற்பட்டுள்ளது' என, பா.ஜ., கூட்டணி பேச்சுவார்த்தையில் புது தூபத்தை போட்டுள்ளது.

தமிழகத்தில், முதல்முறையாக, பா.ஜ., தலைமையில், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி - புதிய நீதிக்கட்சி - இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளோடு லோக்சபா தேர்தல் கூட்டணி அமையவுள்ளது. அதிலும், 'நாங்கள் தான் தலைமை வகிப்போம்' என, தே.மு.தி.க., முரண்டுபிடித்து வருவதால், பா.ஜ.,வினர் ஏற்கனவே விரக்தியில் உள்ளனர். இந்த நிலையில், பா.ம.க.,வும் முரண்டு பிடிப்பதற்கு ஒரு வழியை கண்டுபிடித்து உள்ளது. புதிய நீதிக் கட்சி, ஆரணி, வேலூர் தொகுதிகளை கேட்கிறது. இந்த தொகுதிகளை பெற, தே.மு.தி.க., - பா.ம.க., இடையே ஏற்கனவே போட்டி நிலவுகிறது.தே.மு.தி.க.,வை சமாதானப்படுத்தி, கூட்டணியில் சேர்க்கவே, இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது, தே.மு.தி.க.,விற்கு அந்த தொகுதிகளை ஒதுக்கவில்லை என்றால், கூட்டணியில் சிக்கல் வரும் என, பா.ஜ.,வினர் கருதுகின்றனர்.

பா.ஜ., கூட்டணயில், பா.ம.க., - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - புதிய நீதிக் கட்சி - இந்திய ஜனநாயக கட்சிகளின் தலைவர்கள் தமிழர்கள். அதே நேரத்தில், பா.ஜ., தமிழக பொறுப்பாளர்கள், வெங்கையா நாயுடு, முரளீதர் ராவ் ஆகியோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். தமிழக பா.ஜ., பொதுச் செயலரும், தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினருமான மோகன்ராஜுலு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தெலுங்கு மொழி பேசும், நாயுடு சமூகத்தை சேர்ந்த, தமிழ் நாட்டவர்.கூட்டணியில், இவர்களின் ஆதிக்கம் ஓங்கி இருப்பதாகவும், பா.ஜ.,வின் பொறுப்பாளர்கள் தெலுங்கு பற்றுடன் செயல்படுவதாகவும், பா.ம.க., தரப்பில் கருதப்படுகிறது. 'இதன் முதல் எதிரொலியாக தான், புதிய நீதிக் கட்சிக்கு, நெஞ்சில் இடம் உண்டு ஆனால், தொகுதிகள் ஒதுக்க சாத்தியமில்லை என, பா.ஜ.,வில் கூறிவருகின்றனர்' என, பா.ம.க.,வினர் புலம்புகின்றனர்.

பா.ம.க., ஏற்கனவே 10 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், கூட்டணிக்காக சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளது. இருந்தாலும், பா.ம.க.,வின் முக்கிய தொகுதிகளில், கை வைக்க, தே.மு.தி.க., முயற்சிப்பதாகவும், அதற்கு பா.ஜ., பொறுப்பாளர்கள் சாதகமாக இருப்பதாகவும், பா.ம.க.,வினர் குற்றம் சாட்டுகின்றனர்.இதற்கிடையில், அ.தி.மு.க., அணியில் 'சீட்' கிடைக்கும் என, எதிர்பார்த்திருந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தற்போது, அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் பரவி உள்ளன. அவரை வளைத்துப்போட, பா.ஜ., விரும்புவதாகவும், இதற்காக, அவரது மனைவி நடிகை ராதிகாவிற்கு 'சீட்' ஒதுக்க பேச்சு நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ராதிகா தெலுங்கர் என, பா.ஜ., கூட்டணி வட்டாரங்களில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

ஆனால், பா.ஜ., வட்டாரங்களில் இத்தகய தகவல்கள் மறுக்கப்படுகின்றன. 'என்னவாக இருந்தாலும் பா.ஜ., ஒரு தேசிய கட்சி, இத்தகைய பிராந்திய சிந்தனையோடு செயல்பட வாய்ப்பே இல்லை. இத்தகைய குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. பா.ஜ., கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கொடுப்பது, கட்சி தலைமை தான். அப்போது, உரிய முக்கியத்துவம் பரவலாக அளிக்கப்பட்டு உள்ளதா என்பது ஆய்வு செய்யப்பட்ட பின்பே, அனுமதி அளிக்கப்படும்' என, பா.ஜ.,வினர் தெரிவித்தனர். பா.ம.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போன்றவை குறிப்பிட்ட சமூகத்தவரை முன்னிறுத்தி அரசியல் நடத்துகின்றன. அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டால், கூட்டணியில் பெரும் நெருக்கடி ஏற்படும் என்று, தெரிகிறது. இந்த நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கடந்த மார்ச் 3ம் தேதி தான், தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சியை தொடங்கி வைத்து, தமிழ்நாடு வாழ் தெலுங்கர்கள் மீது அன்பொழுக பேசினார் என்பது, குறிப்பிடத்தக்கது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X