ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற கவர்னர் பதவியா?| Dinamalar

ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற கவர்னர் பதவியா?

Added : மார் 10, 2014 | கருத்துகள் (1) | |
ஷீலா தீட்சித், கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். டில்லி முதல்வராக இருந்த இவர் மீது, ஆம் ஆத்மி, கட்சி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. இதன் எதிரொலியால் டில்லியில் ஆட்சியை இழந்தது, காங்கிரஸ். 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தும் படுதோல்வி அடைந்தார். அவர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதிலிருந்து காப்பாற்றவே, அவருக்கு கவர்னர் பதவி
ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற கவர்னர் பதவியா?

ஷீலா தீட்சித், கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். டில்லி முதல்வராக இருந்த இவர் மீது, ஆம் ஆத்மி, கட்சி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. இதன் எதிரொலியால் டில்லியில் ஆட்சியை இழந்தது, காங்கிரஸ். 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தும் படுதோல்வி அடைந்தார். அவர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதிலிருந்து காப்பாற்றவே, அவருக்கு கவர்னர் பதவி என்கின்றனர். இது குறித்து இரு பிரபலங்களின் கருத்து மோதல் இங்கே:

ஒருவர் மீது, சட்ட ரீதியாக வழக்கு நடக்கும் போது, அவர் எந்தப் பதவி யிலிருந்தாலும், சட்டத்துக்கு உட்பட்டவர்களே. அவர்கள் வகிக்கும் பதவியால், அவர்களை காப்பாற்ற முடியாது. ஷீலா தீட்சித் மீது, அரசியல் ரீதியாக பழிவாங்கும் வழக்கை தொடர்ந்துள்ளனர். அதை சந்திக்க, அவர் பதில் மனுவை தாக்கல் செய்து, வழக்கை நடத்துகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்ற அடிப்படையில், அவருக்கு கேரள கவர்னர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 ஆண்டுகள், நாட்டின் தலைநகரில் முதல்வராக இருந்தவர். பல்வேறு வளர்ச்சியை டில்லியில் ஏற்படுத்தியவர். உலகில் உள்ள முதல் தர நகரங்களில், குறைந்த செலவில் வாழ்க்கை நடத்த முடியும் நகரங்களில், இரண்டாவது இடத்தை டில்லி பெற்றுள்ளது. இதற்கு, ஷீலா தீட்சித்தின் தொடர் ஆட்சி தான் காரணம். எனவே, அவரது அரசியல் வாழ்க்கைக்கு அளிக்கும் கவுரமாக, கவர்னர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்குக்கும் பதவிக்கும் தொடர்பில்லை. பல மாநிலங்களில் முதல்வராக உள்ளவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. தமிழக முதல்வர் மீது, 17 ஆண்டுகளாக வழக்கு நடக்கிறது. வழக்கை சந்திக்க முடியாமல், காலம் தாழ்த்த, வாய்தா வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், தன் மீது, அரசியல் நோக்கில் தொடரப்பட்ட வழக்கை, சந்திக்க தயாராக இருக்கும், தலைவரை கொச்சைப்படுத்தும் நோக்கில், கவர்னர் பதவி கொடுத்து, காங்கிரஸ் காப்பாற்ற நினைக்கிறது என, குற்றஞ்சாட்டுகின்றனர். டில்லியில், ஆட்சி செய்ய வேண்டும் என, மக்கள் விரும்பியவர்களுக்கு, போதிய ஆதரவு இல்லாமல் இருந்தாலும், அவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என, காங்கிரஸ் ஆதரவும் கொடுத்தது. சட்டத்துக்கு உட்பட்டு ஆட்சி செய்யாமல், அவர்கள் வெளியேறி விட்டனர்.
ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் மீது, அபாண்டமான புகாரைக் கூறி வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதை, சந்திக்கவும், நீதிமன்ற தீர்ப்புக்கு தலை வணங்கவும், காங்கிரஸ் தலைவர்கள் தயாராக உள்ளனர்.

செல்லகுமார், அகில இந்திய செயலர், காங்.,

ஒருவர் மீது, அவரால் பாதித்தவர் வழக்குத் தொடர்வது ஒருமுறை. பொது நல வழக்கு தொடர்வது மற்றொரு முறை. பொது நல வழக்கு சாதாரண குடிமகன் மீது தொடரலாம். கவர்னர் போன்ற உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீது, இதுபோன்ற வழக்கைத் தொடர வாய்ப்புகள் குறைவு. மேலும், கவர்னராக இருப்பவர் மீது, வழக்குத் தொடர வேண்டுமானால், அதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டும், போன்ற நடைமுறை கள் உள்ளது. இதனால், அவ்வளவு சீக்கிரம், கவர்னராக இருப்பவர் மீது, வழக்குத் தொடர முடியாது. "லோக் - அயுக்தா' சட்டம் மூலம், வழக்கு தொடரும் அதிகார வரம்புக்குள், கவர்னர் வரமாட்டார்.
இதுபோன்ற சட்ட பாதுகாப்புகள் இருக்கும் போது, டில்லியில் 15 ஆண்டுகள் ஆட்சி செய்து, மெகா ஊழல்களை செய்திருக்கும், ஷீலா தீட்சித்தை காப்பாற்ற, காங்கிரஸ் முயற்சிக்கிறது. அதற்காக, கவர்னர் பதவியை அவருக்கு அளித்துள்ளது. இதுதவிர, டில்லியில் படுதோல்வியை சந்தித்த, ஷீலா தீட்சித்தால், காங்கிரசுக்கு இனி பலனில்லை என்பதால், டில்லியிலிருந்து அவரை வெளியேற்ற காங்கிரஸ் முடிவு செய்து, கேரளாவுக்கு அனுப்பிவிட்டது. இதன்மூலம், டில்லி மக்கள் மனதிலிருந்து, ஷீலா தீட்சித்தை வெளியேற்ற நினைக்கின்றனர். ஆனால், டில்லி மக்கள் இந்த, சித்து விளையாட்டை அவ்வளவு சீக்கிரம் மறக்கமாட்டார்கள். ஊழல் குற்றச்சாட்டுகளை, ஷீலா தீட்சித் மீது சுமத்தி, டில்லியில் தேர்தல் பிரசாரத்தை செய்த, ஆம் ஆட்சி கட்சி, ஷீலா தீட்சித்துக்கு அளிக்கப் பட்டுள்ள கவர்னர் பதவி பற்றி, வாய் திறக்காமல் உள்ளது. காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பவர்கள். பா.ஜ., தான் அவர்களது பொது எதிரி என்பது வெளிப்பட்டுள்ளது. ஷீலா தீட்சித் மீது, ஆம் ஆத்மி கூறிய குற்றச்சாட்டுகள், தேர்தல் அரசியலுக்கு சொல்லப்பட்டவை. அதன் மீது, நடவடிக்கை எடுக்கும் தைரியம் ஆம் ஆத்மிக்கு இல்லை.

லலிதா குமாரமங்கலம், செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X