'பூ விலங்கு' திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமான, குயிலி, பல படங்களில், கதாநாயகியாகவும், குணசித்திர வேடத்திலும், கவர்ச்சி நடன கலைஞராகவும் நடித்திருக்கிறார். தற்போது, 'டிவி' சீரியல்களில் நடித்து வரும் இவர், அ.தி.மு.க., தேர்தல் பிரசார குழுவில் சேர்க்கப்பட்டு, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதி களிலும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
அரசியல் களத்தில் தன் அணுகுமுறை மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்து, குயிலி தெரிவித்த கருத்துக்கள்: தமிழகத்தில் பல கட்சிகள் இருந்தாலும், அ.தி.மு.க.,வின் செயல்பாடு, ஜெயலலிதாவின் தாராள மனசு. எந்த நேரமும், தமிழக மக்களின் முன்னேற்றம் குறித்து மட்டுமே நினைக்கும், பேசும், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த எதிர்ப்புகள் வந்தாலும், எதிர்கொண்டு வெற்றி பெறும், ஜெயலலிதாவின் மன உறுதி, வேகமான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டே நான் அ.தி.மு.க.,வில் சேர்ந்தேன். எம்.எல்.ஏ., - எம்.பி., பதவி கிடைக்கும் என, நான், அ.தி.மு.க.,வில் சேரவில்லை. தமிழக மக்களுக்கு நல்லது செய்யும், ஜெயலலிதாவின் மீதுள்ள மரியாதையில் சேர்ந்தேன்; சந்தோஷமாக இருக்கிறேன். கருணாநிதி குடும்ப அரசியல் நடத்துகிறார். தமிழக மக்களை விட, அவருக்கு அவரின் குடும்பமே முக்கியம். ஜெயலலிதா, தன் ஆட்சியில், தமிழகத்திற்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என, திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஜெயலலிதாவை ஹீரோவாகவும், கருணாநிதியை வில்லனாகவுமே நான் பார்க்கிறேன். லோக்சபா தேர்தலில், தி.மு.க., ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. தேர்தலுக்கு பின், 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க.,வே வெற்றிக்கொடி நாட்டும். எனக்கு நடிப்பு திறமை இருப்பது தெரியும், அ.தி.மு.க.,வில் சேர்ந்த பின், எனக்குள் இருக்கும் பேச்சு திறமை வெளிப்பட்டது. பல மேடைகளில் பேசியுள்ளேன். சினிமாவில் வாய்ப்பில்லாதவர்கள், தேர்தல் பிரசாரத்தில் குதிக்கின்றனர் என, பேசுகின்றனர். எனக்கு அந்த மாதிரி நிலை இல்லை. நடிப்பு தொழிலில் நான், 100 சதவீதம் ஈடுபாட்டுடன் இருப்பதால், வாய்ப்புகளுக்கு குறைவில்லை. வரும், வாய்ப்புகளை பயன்படுத்த நேரம் தான் போதவில்லை. இவ்வாறு, குயிலி கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE