தி.மு.க., தலைமையகமான, சென்னை அறிவாலயத்தில், அக்கட்சியின் தலைவர், கருணாநிதி நேற்று, 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை, அதிரடியாக வெளியிட்டு, தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு, 'ஷாக்' கொடுத்துள்ளார்.அதனால், கூட்டணிக்கு கட்சிகளே இல்லாமல், தமிழக காங்கிரஸ், தனிமரமாக பரிதாபமாக நிற்பதோடு, தனித்துப் போட்டியிடும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல், அடுத்த மாதம், 24ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதி களுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தையும் துவக்கி விட்டார், அ.தி.மு.க., பொதுச் செயலரான, முதல்வர் ஜெயலலிதா.
தொகுதி பங்கீடு:
அதேநேரத்தில், தமிழக பா.ஜ., தலைமையில், ம.தி.மு.க., - பா.ம.க., உட்பட சில கட்சிகள் அணி சேர்ந்து போட்டியிடத் தயாராகி வருகின்றன. அந்தக் கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தீவிரமாக நடைபெற்று வருகிறது.மத்தியில் ஆளும் காங்., உடன், 10 ஆண்டுகளாக, கூட்டணி வைத்திருந்த, தி.மு.க., ஓரிரு மாதங்களுக்கு முன், அந்தக் கூட்டணி முறிந்து விட்டதாக அறிவித்தது. விடுதலை சிறுத்தைகள் உட்பட, சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலை சந்திக்க தயாராகி வந்தது.இருப்பினும், தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க, தமிழக காங்கிரஸ் தலைவர்களும், டில்லியில் உள்ள, காங்., மேலிட தலைவர்களும், மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனாலும், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் உட்பட, பல விவகாரங்களில், கடந்த காலங்களில், காங்கிரஸ் தங்களுக்கு விரோதமாக நடந்து கொண்டதால், காங்., கட்சியுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் விரும்பவில்லை; அதை வெளிப்படையாகவே தெரிவித்தார்.
டில்லியில் முகாம்:
ஆனாலும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர், 'எப்படியும் கூட்டணி அமையும்' என, நம்பிக்கையுடன் கூறி வந்தனர்.இந்நிலையில், லோக்சபா தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள, 35
தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை, தி.மு.க., தலைவர், கருணாநிதி நேற்று வெளியிட்டார். அதனால், தி.மு.க., உடன் எப்படியும் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையில்இருந்த, தமிழக காங்., தலைவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். உடன், டில்லியில் முகாமிட்டுள்ள, தமிழக காங்., தலைவர், ஞானதேசிகன், மற்ற மேலிட தலைவர்களுடன் பேசினார்.அதற்கு பதில் அளித்த மேலிட தலைவர்கள், 'கூட்டணி தொடர்பாக, தி.மு.க., தரப்பிலிருந்து சாதகமான பதில்கள் வரவில்லை' என, கையை விரித்து விட்டனர். அத்துடன் டில்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த, காங்., பொதுச் செயலர், ஷகீல் அகமதுவும், ''தமிழகத்தில், தி.மு.க., - காங்., கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை,'' என, தெளிவாக தெரிவித்தார்.இதன் மூலம், தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் மேலிட தரப்பில் மேற்கொள்ளப்பட்ட, கடைசி கட்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளதாகவே நம்பப்படுகிறது.
தனித்து போட்டி:
தி.மு.க.,வின் அதிரடி முடிவால், கூட்டணிக்கு கட்சிகளே இல்லாமல், தனித்து விடப்பட்டு, தனியே தேர்தல் களம் காணும் பரிதாபமான நிலைக்கு, காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.தனித்துப் போட்டியிட வேண்டிய சூழ்நிலையில், தமிழக காங்., இருப்பதால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், தமிழக காங்., விவகாரங்களுக்கான, குலாம் நபி ஆசாத் தலைமையிலான குழுவினர் இன்று கூடி, தமிழகத்தில், காங்கிரஸ் சார்பில், போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்ய உள்ளனர்.அதன்பின், பட்டியல் ஒன்றுதயாரிக்கப்பட்டு, அது, காங்., தலைவர்
சோனியாவிடம் ஒப்படைக்கப்படும். அவர் இறுதியாக, தமிழக காங்., வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பார்.
ஆலோசனை கூட்டம்:
தமிழக காங்., தலைவர், ஞானதேசிகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:லோக்சபா தேர்தல் பணிக்கு, தமிழக காங்., தன்னை தயார்படுத்தி வைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் நண்பர்கள், தேர்தலை எதிர்கொள்ள உற்சாகமாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில், கூட்டணி குறித்து பல்வேறு தவறான செய்திகள், ஒரு வார காலமாக பரப்பப்பட்டன. யூகங்கள் இறக்கை கட்டி, தமிழக தெருக்களில் பவனி வந்தன. தேர்தல் பணி குறித்து ஆலோசனை செய்ய, வரும், 14ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, சத்தியமூர்த்தி பவனில், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெறும். இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -