தேர்தல் கமிஷன் சுதந்திரமான அமைப்பா?

Added : மார் 11, 2014
Share
Advertisement
'ஊழல் உலகளாவியது' என, திருவாய் மலர்ந்தருளி, ஊழலுக்கு வக்காலத்து வாங்கிய, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிரியதர்ஷினியின் சாதனைகளுள் குறிப்பிடத்தக்கவை, மன்னர் மானிய ஒழிப்பும், வங்கிகளை நாட்டுடைமையாக்கியதும் மட்டுமே. என்ன, ஏதோ ஒரு தலைப்பைக் கொடுத்து விட்டு, என்னமோ உளறுவது போல தோன்று கிறதா? 18 வயது பூர்த்தியாகி, வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்து, அடையாள அட்டையையும்
தேர்தல் கமிஷன் சுதந்திரமான அமைப்பா?

'ஊழல் உலகளாவியது' என, திருவாய் மலர்ந்தருளி, ஊழலுக்கு வக்காலத்து வாங்கிய, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிரியதர்ஷினியின் சாதனைகளுள் குறிப்பிடத்தக்கவை, மன்னர் மானிய ஒழிப்பும், வங்கிகளை நாட்டுடைமையாக்கியதும் மட்டுமே. என்ன, ஏதோ ஒரு தலைப்பைக் கொடுத்து விட்டு, என்னமோ உளறுவது போல தோன்று கிறதா? 18 வயது பூர்த்தியாகி, வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்து, அடையாள அட்டையையும் கையில் வைத்துக் கொண்டு, முதன் முதலாக ஓட்டுச் சாவடிக்குள் நுழைந்து, ஓட்டளிக்கப் போகும் இளஞ்சிங்கங்களே! நீங்கள் காங்கிரசின் வரலாற்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்திரா பிரியதர்ஷினியின் மகன் வயிற்றுப் பேரன் ராகுலை, ஏதோ, 'ரட்சகன்' போல காட்டி, இந்தியாவே, இனி அவரது நிர்வாகத்தில் தான், நிமிர்ந்து நிற்க போவது போல, விளம்பரங்களை காங்., கட்சி அள்ளி வீசி வருகிறது. ஆனால், இளைஞர்களே! 'கை' சின்னத்தின் அருகே அமைந்துள்ள பொத்தானில், விரலை வைப்பதற்கு முன், ராகுலின் பாட்டி பண்ணிய சேட்டைகளை அறிந்து கொண்டால், அதன்பின், எந்த ஒரு தேர்தலிலும், 'கை' சின்னம் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டீர்கள். இந்தியாவுடன் தங்களை இணைத்து, செலவுக்கு மானியம் பெற்று வந்த, மன்னர்களின் மானியத்தை, இந்திரா பிரியதர்ஷினி ஒழித்துக் கட்டினார். சூட்டோடு சூடாக, நாட்டிலிருந்த, 14 பெரிய வங்கிகளை நாட்டுடைமை ஆக்கினார். வங்கிகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. நீங்கள் வங்கிகளில் கணக்கு வைத்து இருக்கிறீர்கள். உங்கள் கணக்கில், தேவையான அளவு பணமும் உள்ளது. அதில், ஒரு தொகைக்கு காசோலையோ அல்லது 'வித்ட்ராயல் சிலிப்'போ பூர்த்தி செய்து கொடுத்து, டோக்கனை வாங்கிய பின், மணிக்கணக்காக காத்திருந்த பின்னரே, நீங்கள் கேட்ட தொகை உங்களுக்கு கிடைக்கும். ஆனால், கணக்கும் இல்லாமல், காசோலையும் இல்லாமல், கையெழுத்தும் இல்லாமல், 'நான் பிரைம் மினிஸ்டர் பேசுகிறேன். 60 லட்சம் ரூபாயுடன், 'ஸோ அண்ட் ஸோ பாயின்டில்' காத்திருக்கவும். என் ஆள் வந்து அதை வாங்கிக் கொள்வார்' என்று, டில்லியில், பாரத ஸ்டேட் வங்கி கேஷியருக்கு, ஒரு அனாமதேய தொலைபேசி அழைப்பு உத்தரவிடுகிறது. அந்த கேஷியர், தன் மேலதிகாரியிடமோ, வங்கியில் வேறு ஒருவரிடமோ கலந்து ஆலோசிக்கவும் இல்லை; தகவல் தரவும் இல்லை. இரும்புப் பெட்டியிலிருந்து, 60 லட்சம் ரூபாயை எடுத்து, பையில் அடுக்கி வைத்துக் கொண்டு, கல்லாவைப் பூட்டிவிட்டு, தொலைபேசியில் குறிப்பிடப்பட்ட இடத்திற்குச் சென்று, அங்கு காத்திருந்த வரிடம் பையைக் கொடுத்துவிட்டு, வேறு யாருக்கும் தெரியாமல், கமுக்கமாக திரும்பி வந்தார். 'நகர்வாலா' என்பது, அந்த கேஷியரின் பெயர். பிரதமரின் 'போன்' அழைப்புக்கு மதிப்பு கொடுத்து, 60 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்று, நடுத்தெருவில் நின்றிருந்தவரிடம் கையளித்தவருக்கு கிடைத்த வெகுமதி என்ன தெரியுமா? அடுத்த, ஆறு மாதங்களில், சாலை விபத்தொன்றில் சிக்கி, நகர்வாலா உயிரை விடுகிறார். விசுவாசத்தின் விலை, உயிர்.
சி.பி.ஐ., கூட, சுதந்திரமானதொரு அமைப்பு என்று தான், மத்திய அரசு கதைக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களைப் பகைத்துக் கொண்டால், அடுத்த கணம் அங்கே சி.பி.ஐ., ஆஜராகி விடுகிறது. தேர்தல் கமிஷனும், சுதந்திரமான அமைப்பே என்று, மத்திய அரசு, பகவத் கீதையின் மீது கை வைத்து, சத்தியம் செய்யாத குறையாக கூறி வருகிறது. தேர்தல் கமிஷனுக்கு, எவ்வளவு அதிகாரங்கள் உண்டு என்பது, தலைமை தேர்தல் கமிஷனராக, டி.என்.சேஷன் பதவி ஏற்கும் வரை, யாருக்குமே தெரியாது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள், நம்மை சந்தேகம் அடைய வைக்கின்றன. மத்திய அரசே அனுமதித்தாலும், தேர்தல் கமிஷன் சுதந்திரமாக செயல்பட தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம். சி.பி.ஐ.,யும், தேர்தல் கமிஷனும் காட்டும் எஜமான விசுவாசமும், பணிவும், பக்தியும் நம்மை நடுங்க வைக்கின்றன.
2014 மே மாதம், தேர்தல் நடத்த வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு. என்றைக்கு, 'டியூ டேட்டோ', அதன்படி தேதியை அறிவிக்க வேண்டியது தானே! பிரதமர் மன்மோகன் சிங், வங்கக்கடலை ஒட்டியுள்ள நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ள, மியான்மர் போகப் போகிறார். விமானம் ஏறுவதற்கு முன், தேர்தல் கமிஷனரை, பிரதமர் கூப்பிட்டாராம். இவரும் போய் பவ்யமாக, கை கட்டி, வாய் பொத்தி நின்றாராம். அவர், 'நான் திரும்பி வர்றது வரைக்கும், தேர்தல் பத்தி எதுவும் 'மூச்' விடாதீங்க' என்று, சொல்ல, 'உத்தரவு மன்னா'ன்னு இவரும் திரும்பி வந்தாராம். இப்படிப்பட்ட விசுவாச கலாசாரத்தை, மத்திய அரசின் இயந்திரங்களில் உருவாக்கியதும், வளர்த்ததும் வேறு யாரும் இல்லை, இன்று, 'அனைத்தையும் மாற்ற வேண்டும்' என, பிதற்றும், ராகுலின் பாட்டி இந்திரா பிரியதர்ஷினி தான். என் மகன், 'ஜானீ'ன்னு வாலாட்டுகிற பிராணி ஒண்ணை வளர்த்துட்டு இருந்தான். அவன் பேச்சுக்கு மட்டும் தான், அது கட்டுப்படும். நானோ, என் மனைவியோ அதுக்கு ஆகாரம் கொடுத்தாக்கூட சாப்பிடாது.

என் மகன் முகத்தையும், நாங்க கொடுத்த ஆகாரத்தையும் பரிதாபமா பாத்துட்டே இருக்கும். அவன், 'சாப்பிடு ஜானீ'ன்னு சொன்னாத்தான் சாப்பிடும். 'சாப்பிடு'ன்னு சொல்லிட்டு, அதுவாயில கவ்வின பிறகு, முறைத்து, 'கீழேபோடு'ன்னா போட்டுரும்.ஜானீக்கு என் மகன் மேல அவ்வளவு எஜமான விசுவாசம்; அவ்வளவு பக்தி. தேர்தல் கமிஷன் சர்வ சுதந்திரமான அமைப்பாம்; மத்திய அரசு சொல்கிறது; நம்பித் தொலைப்போம்; வேறு வழி?

எஸ்.ராமசுப்ரமணியன், எழுத்தாளர், சிந்தனையாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X