தொகுதி நிலவரம்: கன்னியாகுமரி

Added : மார் 11, 2014
Advertisement

பிரச்னைகள், எதிர்பார்ப்பு

* குமரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தால், பத்மனாபபுரம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சட்டத்தால், முக்கிய தேவைகளுக்காக கூட, நிலத்தை விற்க முடியவில்லை. இதனால், இந்த இரண்டு தொகுதிகளிலும், தேர்தலை புறக்கணிக்கும் குரல்கள் அதிகரித்து வருகின்றன


* கன்னியாகுமரி -- திருவனந்தபுரம் நான்கு வழி சாலைக்காக, ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். இருந்தும் அந்த சாலைக்கான பணிகள் துவங்காதது, முக்கிய பிரச்னையாக உள்ளது


* கன்னியாகுமரியில், சுற்றுலா வளர்ச்சிக்கு போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில், விமான நிலையம் அமைய வேண்டும் என்பது, இங்குள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்


* நெய்யாறு அணை நீரை, விளவங்கோடு தாலுகா விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். சில ஆண்டுகளாக, கேரள அரசு, முழுமையாக தண்ணீர் திறந்து விடுவதில்லை; இதனால், இங்கு விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது


* ரப்பர் அதிகமாக உற்பத்தியாகும், குமரி மாவட்டத்தில், ரப்பர் பூங்கா அமைக்கப்படும் என்ற, அறிவிப்பும், காற்றில் கரைந்து விட்டது


* மீனவர்களை பொறுத்தவரை, கடல் நடுவில், மிதக்கும் 'பிளாட்பார்ம்' அமைக்க வேண்டும், மீனவர்களை தேட ஹெலிகாப்டர் வசதி வேண்டும் என்ற கோரிக்கைகள், நிலுவையில் உள்ளன


* குளச்சலில் வர்த்தக துறைமுகம், தேர்தல் நேரங்களில் மட்டும் பேசப்படுகிறது

எம்.பி., பேட்டி

* ஐந்து ஆண்டுகளில், தொகுதி மக்களை சந்தித்தது எத்தனை முறை?


தொகுதிக்குள் மட்டும், 2.50 லட்சம் கி.மீ., சுற்றி வந்து, மக்களை சந்தித்துள்ளேன். பார்லிமென்ட் கூட்ட நாட்களை தவிர்த்து, ஊரில் இருக்கும் எல்லா நாட்களிலும், பொதுமக்களை, எந்நேரத்திலும் சந்தித்து வந்துள்ளேன்.

* உங்கள் தொகுதிக்கு, நீங்கள் கொண்டுவந்த திட்டங்கள்?


முந்திரி ஆலை, மீன் வலை பின்னும் ஆலை, தும்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக நாகர்கோவிலில், 100 கோடி ரூபாய் செலவில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை கொண்டு வந்தேன். அதற்கான, இடம் தேர்வு பணி நடைபெற்று வருகிறது. புதிதாக, ஏழு ரயில்கள், நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு கொண்டு வந்தேன்.

* எத்தனை மசோதாக்களுக்கு ஆதரவாக, நீங்கள், ஓட்டு அளித்து உள்ளீர்கள்?


மசோதாக்களுக்கு, தி.மு.க., எடுத்துள்ள நிலைபாட்டுக்கு ஏற்ப ஆதரவு அளித்துள்ளேன். எண்ணிக்கையைச் சொல்ல முடியவில்லை.

* ஐந்து ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்களில், எது மிக முக்கியமானது?


பெண்கள் பாதுகாப்பு சட்டம், கட்டாய கல்வி சட்டம் ஆகியவை, என்னை கவர்ந்தன; பெண்களுக்கான, 33 சதவீத ஒதுக்கீடு மசோதா, நிறைவேறாதது வருத்தத்தை தந்தது.

* உங்கள் செயல்பாடுகளால், தொகுதி மக்களிடையே, உங்கள் கட்சிக்கு நற்பெயர் ஏற்பட்டு உள்ளதா?


அதை நீங்கள்தான் விசாரிக்க வேண்டும். என்னால் முடிந்த வரை, கட்சியின் நற்பெயருக்காக உழைத்துள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியில், 19 கோடி ரூபாய் செலவு செய்த போது, அதிலிருந்து ஒரு காசு கூட, கமிஷன் வாங்கியது கிடையாது.

* உங்கள் தொகுதியில், உங்கள் கட்சி, இந்த முறை வெற்றிபெறுமா?


நான் செய்த, விருப்பு வெறுப்பற்ற பணிகள், கண்டிப்பாக தி.மு.க.,வை வெற்றி பெற செய்யும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X