கடந்த சில மாதங்களாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று, பள்ளி குழந்தைகளின் வாசிப்பு திறன் எப்படி உள்ளது என்பதை, ஆராய்ந்து வருகிறேன். எளிய கதை புத்தகங்களை சிறுவர்களிடம் கொடுத்து, அவர்கள் படிப்பதை வீடியோ எடுத்து வைக்கிறேன்.
இந்த சிறுவர்கள் பலரும், வண்ண கதை புத்தகங்களை முன்பின் பார்த்ததே கிடையாது என்று, தெரிந்தது. பள்ளிக்கூட புத்தகத்துக்கு மேலாக அவர்கள் வேறெங்கும் எழுத்துக்களையே பார்ப்பதில்லை. சினிமா, அரசியல் போஸ்டர்களில் உள்ள எழுத்துக்களையாவது வாசிக்கிறார்களா என்பதும் கேள்விக்குறி தான். சிறுவர்கள், எளிமையான புத்தகங்களை வாசிக்க தடுமாறுவதை பார்க்கும்போது, நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதை உணர்கிறேன். ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு எம்மாதிரியான வாசிக்கும் திறன் இருக்க வேண்டுமோ அது நிச்சயமாக இருப்பதில்லை. ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களால் கூட பாடத்தை எழுத்து கூட்டி படிக்க முடிவதில்லை. ஆனால், வருடா வருடம் பாஸ் போடப்பட்டு, பள்ளி இறுதி பரீட்சையையும் எப்படியோ எழுதி, வெளியே வந்துவிடுகின்றனர். வாசிப்பு திறன் குறித்த பிரச்னை ஆரம்ப கல்வியிலேயே துவங்கிவிடுகிறது. எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் இருந்தே எக்கச்சக்கமான பாடங்களை குழந்தைகள் மீது திணிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். ஆரம்பக் கல்வியில், மூன்றாம் வகுப்புவரை;
* எழுத்துக்களை சொல்லித்தருவது
* வார்த்தைகளை பயில்விப்பது
* எழுத்து கூட்டி படிக்க வைப்பது
* செயல்பாட்டு இலக்கணத்தை சொல்லித்தருவது
* பிழையின்றி எழுத சொல்லித்தருவது ஆகியவற்றில், கவனம் செலுத்தப்பட வேண்டும். மாறாக, இவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், பொது அறிவியல், சமூக அறிவியல் என்று, கன்னாபின்னாவென்று எதையெல்லாமோ சொல்லித்தருகின்றனர். இதன் விளைவு, நான்காம் வகுப்பு வரும்போதும் பெரும்பாலான குழந்தைகளால் எழுத்து கூட்டி படிக்க முடிவதில்லை. அதற்கு மேற்பட்ட வகுப்பின் ஆசிரியர்களோ, எழுத படிக்க சொல்லித்தருவது தங்கள் வேலை அல்ல என்று, விட்டுவிடுகிறார்கள். 'பிரதம்' என்ற, தொண்டு அமைப்பின் ஆதரவில் 'அசர் அறிக்கை' (ASER Report) என்ற, பள்ளி கல்வியின் நிலை குறித்த ஆய்வறிக்கை, ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிக் கல்வியின் நிலை என்ன என்பதை, இந்த அறிக்கை, விரிவான கள ஆராய்ச்சிகளின் அடிப்படையில் எடுத்துவைக்கிறது. கடந்த 2013ம் ஆண்டிற்கான 'அசர் அறிக்கை'யின்படி, தமிழக கிராமப்புறங்களில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 31.9 சதவீதம் பேரால் தான் கீழ்க்கண்ட எளிமையான தமிழ் பத்தியைப் படித்துப் புரிந்துகொள்ள முடிகிறது.
அந்த பத்தி:
அன்று விடுமுறை நாள். தேவியும் ராமுவும் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். மரத்திலிருந்து ஒரு அணில்குட்டி தொப்பென்று கீழே விழுந்தது. இருவரும் அணில் குட்டியை மெதுவாக எடுத்து அப்பாவிடம் கொடுத்தனர். அப்பா அதற்கு பஞ்சால் பால் ஊட்டினார். ஒரு அட்டைப் பெட்டியில் வைத்தார். சிறிது நேரம்கழித்து அணில்குட்டி அங்கும் இங்கும் ஓடியது. தேவியும் ராமுவும் அணில் குட்டியை வளர்க்க விரும்பினர். ஆனால், அப்பா அணில்குட்டியை அதே மரத்தடியில் விட்டுவிட்டார்.
அதாவது, 68 சதவீதம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்களை கூட்டி மேலே உள்ள பத்தியை வாசிக்க தெரிவதில்லை. எட்டாம் வகுப்பை எட்டும்போது, 68.3 சதவீதம் பேரால் மட்டுமே இதனைப் படிக்க முடிகிறது. அதேபோல், எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 39.1 சதவீதம் பேருக்குத்தான் எளிமையான வகுத்தல் கணக்கை போடத் தெரிகிறது. அதாவது, '513 என்ற, எண்ணை 4 என்ற எண்ணால் வகு' என்ற கணக்கை, 61 சதவீத எட்டாம் வகுப்பு மாணவர்களால் கணிக்க முடியவில்லை. இவ்வளவு மோசமான கல்வி நிலையை வைத்துக்கொண்டு, நாம் ஆங்கிலவழி கல்விக்கு தாவ முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம். தமிழை படிப்பதிலேயே இதுதான் நிலை என்றால், நாளை தமிழகத்தில் பாதிப் பேர் ஆங்கிலவழியில் படிக்க தொடங்கிவிட்டால் என்ன ஆகும் என்று, யோசித்துப் பாருங்கள். ஆங்கிலம்தான் வேலை வாய்ப்புக்கான ஒரே வழி என்ற, மாயப் பரப்புரையில் நம் மக்கள் சிக்கி உள்ளனர். உண்மையில், நல்ல வேலை வேண்டும் என்றால், ஏதோ ஒரு மொழியில் நன்றாகப் படிக்க, பேச, புரிந்துகொள்ள, எழுத தெரியவேண்டும். அது ஆங்கிலமாக இருக்கலாம் அல்லது தமிழாக இருக்கலாம். ஆனால், நம் மாணவர்கள், இந்த தகுதிகளை வளர்த்துக்கொள்வதே இல்லை.
அவற்றை வளர்த்துக்கொண்டே ஆகவேண்டும் என்று, பள்ளி ஆசிரியர்களும் ஊக்குவிப்பது இல்லை. எழுத படிக்க சொல்லித்தருவது தான் கல்வியின் முக்கியமான நோக்கம் என்று, அரசின் கல்வி துறையும் பள்ளிக்கூடங்களுக்கு அறிவுறுத்துவது கிடையாது. அதன் விளைவுதான் இன்று நாம் காணும் இந்தக் கடுமையான வீழ்ச்சி. இந்த சிக்கல் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஏனெனில் தமிழக அரசு, 'அசர் அறிக்கை'யை பற்றிக் கண்டுகொள்வது கிடையாது. சமச்சீர் கல்வி தேவையா, கூடாதா என்று, பெரும் விவாதமே நடந்தது. நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்தன. சமச்சீர் கல்வி மட்டும் வந்துவிட்டால், தமிழகத்தில் கல்வியின் தரம் ஒரேயடியாக உயர்ந்துவிடும் என்று, சொல்லப்பட்டது. ஆனால், சமச்சீர் கல்வி அறிமுகப் படுத்தப்பட்ட பின், 'அசர் அறிக்கை'யின் படி மாணவர்களின் நிலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. சொல்லப்போனால், வீழ்ச்சிதான் ஏற்பட்டு உள்ளது. ஐந்தாம் வகுப்பு படிப்பவர்களில் மேலே கொடுத்தது போன்ற எளிமையான பத்தியை படிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை, 2009-ல் - 35.3 சதவீதம், 2010-ல் - 30.5 சதவீதம் என்று, கடும் வீழ்ச்சி அடைந்தது. அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில், 32.3 சதவீதம், 30.3 சதவீதம், 31.9 சதவீதம் என்று, உள்ளது. அதாவது இன்னமும் 2009ல் இருந்த நிலையைக்கூட நாம் எட்டவில்லை. பெற்றோர்களும், கல்வியாளர்களும், அரசியல் வாதிகளும் அதி அவசர வேகத்தில் இந்தச் சிக்கலைச் சரிசெய்ய முற்படவேண்டும்.
பத்ரி சேஷாத்ரி, நிறுவனர், கிழக்கு பதிப்பகம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE