உத்தர பிரதேச மாநிலத்தில், காங்கிரசும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும், எதிரெதிர் அணிகளாக இருந்தாலும், சோனியா மற்றும் முலாயம் சிங் குடும்பத்தினர் போட்டியிடும் தொகுதிகள் விஷயத்தில், இரு கட்சியினரும் நண்பர்களாகவே உள்ளனர்.
அதாவது, முலாயம் சிங் போட்டியிடும், மெயின்புரி மற்றும் அவரின் மருமகளும், முதல்வர், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் வெற்றி பெற்ற, கன்னவ்ஜி தொகுதியிலும்; ராகுலின் அமேதி மற்றும் சோனியாவின் ரேபரேலி தொகுதியிலும், இரு குடும்பத்தினரும் ஒருபோதும், நேருக்கு நேர் மோதிக் கொண்டதே இல்லை.குறிப்பாக, சோனியா மற்றும் ராகுலை எதிர்த்து, முலாயம் சிங் குடும்பத்தினரோ அல்லது முலாயம் சிங் குடும்பத்தினரை எதிர்த்து, சோனியாவோ, ராகுலோ நேரடியாக களம் இறங்கியதில்லை. அதற்குப் பதிலாக, இரு கட்சியினரும், 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்தி, ஒரு குடும்பத்தின் வெற்றிக்கு, மற்றொரு குடும்பத்தினர் உதவியாகவே இருந்துள்ளனர்.உ.பி., முன்னாள் முதல்வரான, முலாயம் சிங், 1992ம் ஆண்டில், சமாஜ்வாதி கட்சியை துவக்கினார். அது முதல், அவருக்கு எதிராகவோ அல்லது அவரின் மகன், அகிலேஷ் யாதவிற்கு எதிராகவோ, காங்கிரஸ் கட்சி, வேட்பாளரை நிறுத்தியதில்லை. சமாஜ்வாதி கட்சியை துவக்கும் முன், லோக்தளத்தின் மாநில தலைவராக, 1980 முதல், முலாயம் சிங் பதவி வகித்தார். அப்போதும், இந்திராவுக்கு எதிராக, எந்த வேட்பாளரையும், அவர் நிறுத்தியதில்லை.
கடந்த, 2009ல், ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியாவிற்கு எதிராக, முலாயம் சிங், தன் கட்சி சார்பில், எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை. அதற்கு முன், 2004ல் நடந்த லோக்சபா தேர்தலிலும், 2006ல் நடந்த இடைத் தேர்தலிலும், சோனியாவிற்கு எதிராக, அவர் 'டம்மி' வேட்பாளர்களையே நிறுத்தி, சோனியா வெற்றி பெற உதவியாக இருந்தார். அதுவும் தேர்தல் போட்டியில் இருந்து விலகவில்லை என்பதை காட்டத்தான் டம்மி வேட்பாளர்களை நிறுத்தினார்.அதேபோல், 2009 லோக்சபா தேர்தலில், அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுலுக்கு எதிராகவும், சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. 2012ம் ஆண்டில், கன்னவ்ஜி லோக்சபா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி, டிம்பிள் போட்டியிட்டார். அப்போது, அவருக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை.
இருந்தாலும், 2009 லோக்சபா தேர்தலின் போது மட்டும், காங்கிரஸ் இந்த விவகாரத்தில் மரபு மீறி செயல்பட்டது. டிம்பிளுக்கு எதிராக, முலாயம் சிங்கின் எதிர்ப்பாளரான, நடிகர் ராஜ் பப்பரை போட்டியிட வைத்து, டிம்பிளை தோற்கடிக்க வைத்தது.வரும் லோக்சபா தேர்தலுக்கான, சமாஜ்வாதி வேட்பாளர் பட்டியலை, முலாயம் சிங் சமீபத்தில் வெளியிட்டார். அதில், சோனியாவின் ரேபரேலி மற்றும் ராகுலின் அமேதி தொகுதிகளை தவிர, மற்ற தொகுதிகள் அனைத்துக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார். அதேபோல், முலாயம் சிங் குடும்பத்திற்கு சாதகமான தொகுதிகளான, மெயின்புரி மற்றும் கன்னவ்ஜி தொகுதிகளுக்கு, காங்கிரஸ் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பது, குறிப்பிடத்தக்கது.சமீபத்தில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த, முலாயம் சிங்கிடம், ''சோனியா, ராகுலுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லையா'' என, கேட்ட போது, ''2012 இடைத்தேர்தலிலும், தற்போதும் கன்னவ்ஜி தொகுதிக்கு ஏன் வேட்பாளரை அறிவிக்கவில்லை என, சோனியா, ராகுலிடம் கேட்க வேண்டியது தானே,'' என, எதிர்கேள்வி கேட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE