சேலம், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கொங்கு நாடு முன்னேற்ற கழகம்; கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி(ஈஸ்வரன்), கொங்கு நாடு ஜனநாயக கட்சி (நாகராஜ்) என, மூன்றாக பிரிந்தது. இந்த மூன்று கட்சிகளும், பா.ஜ., கூட்டணியில் தான் இடம்பெற துடித்தன. ஆனால், பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கொங்கு நாடு முன்னேற்ற கழகம், நேற்று முன்தினம், கூட்டணியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தது. இந்த சூழ்நிலையில், கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த, சிறப்பு பேட்டி:
லோக்சபா தேர்தலில், உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
இத்தேர்தலை பொறுத்த வரை, முதலில், பா.ஜ., வுக்கு ஆதரவளிக்க விரும்பினோம். எனினும், கடந்த, இரண்டு நாட்களாக அக்கட்சி எங்களுடன் தொடர்பை துண்டித்துக் கொண்டது. மறுபுறம், தே.மு.தி.க., - ஐ.ஜே.கே., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் கூட்டணி பேச்சு நடத்துகிறது. தற்போதைய, சூழலில் பா.ஜ.,வுடன் கூட்டணி ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகின்றனர். கூட்டணி குறித்து, வரும் புதன்கிழமை, மார்ச் 12க்குள், அறிவிப்பு வெளியிடுவோம்.
கொ.மு.க., மூன்றாக உடைந்த பிறகு, தொண்டர்கள் உங்களிடம் இருக்கின்றனரா?
எனக்கு 35 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. கிராமப்புற மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். கொ.ம.தே.க., ஈஸ்வரனுக்கு ஆதரவு உள்ளதை ஏற்றுக் கொள்ளலாம். அதேவேளையில், எமது மாநில நிர்வாகிகள் 17 பேரில் யாரும் மூன்றாவது கட்சியை துவக்கிய நாகராஜிடம் இல்லை. இதிலிருந்து, அவருக்கு சுத்தமாக யார் ஆதரவும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கட்சி உடைந்ததற்கு யார் காரணம்?
கட்சி தலைமைக்கு ஈஸ்வரன் கட்டுப்படாமல் பிரிந்து சென்றது ஒரு காரணம். நாகராஜ் பிரிந்து சென்றதால் எந்த பாதிப்பும் இல்லை.
லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு உங்களை யாரும் அழைக்கவில்லையா?
பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் அழைத்தன.
கடந்த தேர்தலில், கணிசமான ஓட்டுகளை பெற்ற கொ.மு.க., இப்போது, மூன்றாக உடைந்து சிதறிய பின், இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிட்டால், 'டெபாசிட்' கூட கிடைக்காது என, சிலர் விமர்சிக்கின்றனரே?
உண்மை தான். தனித்து நின்றால் அப்படியொரு நிலைமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும், கட்சி வளர்ச்சிக்காக தனித்து போட்டியிட வேண்டிய நிலை வந்தால் தனித்து போட்டியிடுவோம். 'டெபாசிட்' பெறுவது, பெறாதது குறித்து கவலையில்லை.
தலித் சமுதாயத்துக்கு எதிரான கட்சி என்ற 'இமேஜ்' கொ.மு.க., மீது இன்னும் உள்ளதா?
'இருக்கு' என்பது தான் என் பதில். எனினும், எங்கள் கட்சி, கொங்கு நாட்டில் வாழும் அனைத்து சமுதாய மக்களுக்காக பாடுபடும் கட்சி என்பதை, மக்களிடம் கொண்டு செல்ல, எதிர்வரும் காலங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்வோம்.
'கள்' இறக்கும் கோரிக்கையும், போராட்டங்களும் என்னாச்சு?
தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளுக்கு, 'டாஸ்மாக்' வருமானத்தை அதிகரிப்பதே முக்கிய நோக்கம். எங்கள் கோரிக்கை, இதுவரை நிறைவேறாதது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து போராடுவோம்.
கட்சி துவங்கியபோது இருந்த பலம் மற்றும் செல்வாக்கு சரிந்ததற்கு என்ன காரணம்?
கட்சி துவங்கி, 13 ஆண்டுகளாகின்றன. பாதியில் வந்து பாதியில் சென்ற ஈஸ்வரன், நாகராஜ் போன்றவர்களே காரணம்.
கட்சியின் பலம், பலவீனம் என்ன?
ஒட்டுமொத்த கொங்குநாட்டு மக்கள் நலன் காக்க போராட துடிக்கும் தொண்டர்களே எங்கள் பலம். தலித் சமுதாயத்துக்கு எதிரான கட்சி என, தவறாக மக்கள் கருதுவது பலவீனம்.
பா.ம.க., உருவாக்கி உள்ள சமுதாய கூட்டணியில் உங்கள் கட்சி பங்கு என்ன?
அந்த கூட்டணிக்கு எங்கள் ஆதரவு இல்லை. இத்தகைய கூட்டணி, இடஒதுக்கீடு பெறுவதற்கு மட்டுமே பயன்படும், ஆட்சி அமைக்க அல்ல.
மற்ற கட்சிகள் போல், உங்கள் கட்சி செல்வாக்கு பெற முடியாததற்கு என்ன காரணம்?
'கவுண்டர்கள் கட்சி' என, பிற சமுதாய மக்கள் தவறாக புரிந்து கொண்டதே காரணம்.
குறிப்பிட்ட சமுதாய ஓட்டுகள் மட்டும் தேர்தலில் வெற்றி பெற வைக்குமா?
வாய்ப்பே இல்லை.இதுவரை போட்டியிட்ட எந்த தேர்தலிலும், நீங்கள் வெற்றி பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம்? எங்கள் சமுதாய மக்களின் ஓட்டுகளை மட்டும் வைத்து எப்படி வெற்றி பெற முடியும்?
'என் மக்கள் என்னுடன் இருக்கின்றனர்'
"மோடி பிரதமராக, யார் ஆதரித்தாலும், நான் வரவேற்கிறேன்,” என, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர், ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார். 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:.
2009 லோக் சபா தேர்தலில் கொ.மு.க., ஏழு லட்சம் ஓட்டுக்களை பெற்றது. தற்போது, இக்கட்சி மூன்றாக பிரிந்த நிலையில், உங்கள் ஓட்டு வங்கி, பலம் எப்படி?
யார் பிரிந்து சென்றபோதும், கட்சியினர் என்னுடன் உள்ளதற்கு, கருமத்தம்பட்டி மாநாடே சாட்சி. தமிழகத்தில், 14 மாவட்டங்களில், 13 லட்சம் தொண்டர்கள் உள்ளனர்.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்துவிட்டு, தற்போது, பா.ஜ.,வுக்கு தாவ என்ன காரணம்?
சட்டசபை தேர்தலில், மாநில கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தோம். இது லோக்சபா தேர்தல் என்பதால், மத்தியில் ஆட்சி அமைப்பவருடன் கூட்டணி அமைக்கிறோம்.
நதி நீர் இணைப்புக்கு, பா.ஜ., என்ன செய்ய வேண்டும், என எதிர்பார்க்கிறீர்கள்?
குஜராத் மாநிலத்தில் நதிகளை இணைத்துள்ளார். தேர்தலுக்கு பின், நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் வழங்குவதாக தெரிவித்து உள்ளனர். கங்கை, காவிரியுடன் இணையும்போது, கர்நாடகா, முல்லை பெரியாறு உள்ளிட்ட சிறிய பிரச்னைகள் காணாமல் போய்விடும்.
கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை மட்டுமே பிரதிபலிக்கிறீர்கள். மற்ற சமூகத்தின் ஓட்டுக்களை பெற என்ன செய்ய உள்ளீர்கள்?
நாங்கள் மக்களுக்கான நல்ல திட்டங்களுக்காக கட்சியை துவக்கி, பாடுபட்டு வருகிறோம்; ஜாதிக்காக இல்லை. இதுபோன்ற முத்திரைகளை குத்தி, வட்டத்துக்குள் சிக்க வைக்க பார்க்கின்றனர். மாநிலம் முழுவதுமாக வாழும் மக்களுக்கான, நல்ல திட்டங்களை கொண்டுவர பாடுபடுவோம்.
பா.ஜ., ஆட்சி அமைத்தால், அமைச்சரவையில் இடம் பெறுவீர்களா?
இது போன்ற பேச்சு தேவையில்லை. எங்களுக்கு, தமிழகத்துக்கு தேவையான தொழில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவதே நோக்கம். மோடி அதற்கான உதவிகளை செய்வார். அப்படி இருக்க, அமைச்சரவையில் இடம்பெற தேவையில்லை.
'முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க, 40 தொகுதிகளையும் பெறுவோம்' என, அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து குரல் எழுப்புகின்றனர். இதில் உங்கள் கருத்து, நிலைப்பாடு என்ன?
கடந்த, 2009 தேர்தலில் கோவை தொகுதியில், கொ.மு.க., 1.30 லட்சம் ஒட்டும், தே.மு.தி.க., 70,000 ஓட்டும், பா.ஜ., 40,000 ஓட்டுக்களை பெற்றன. அப்போது மோடி அலை இல்லை. எனவே, எங்கள் வெற்றியை மட்டுமே நாங்கள் தேடுகிறோம்.
பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், அ.தி.மு.க., ஆதரவுடன் ஆட்சி அமைக்க கோரினால், அப்போது உங்கள் நிலைப்பாடு என்ன?
மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, ஆட்சி அமைப்பார். காங்கிரஸ், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற இருதலை கொள்ளி எறும்பு போல செயல்படுகின்றனர். மதத்தை மறந்து, மக்களுக்கு திட்டங்கள் வேண்டும் என, அவர்களே முடிவு செய்து, மோடிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். வேஷம் போட்டவர்கள் முகத்திரை தேர்தலில் கிழியும். அதையும் மீறி, மோடி பிரதமர் ஆக ஆதரவு தெரிவிப்பவர்களை வரவேற்கிறேன். மோடிக்காகத்தான் எங்கள் கூட்டணி. அவர்களை பற்றி கவலை இல்லை.
பா.ஜ.,வின், மூன்று முக்கிய அம்சங்களாக கருதப்படும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல், பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது விதி நீக்கம் ஆகியவற்றில் உங்கள் நிலைப்பாடு என்ன?
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அயோத்தியில் பிரச்னை வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தான் பிரச்னை வந்தது. யூகங்களை பற்றி கவலைப்படவில்லை.
சசிகலா நடராஜனுடன் இணக்கமாக இருந்து, அவரது பொங்கல் விழாக்களில் பங்கேற்ற நிலையில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர முயற்சிக்கவில்லையா?
நாகரீகமான அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டும். தி.மு.க.,வினர், அ.தி.மு.க.,வினரை எதிரிகளாகவே பார்க்கின்றனர். அரசியல் வேறு, குடும்ப உறவுகள் வேறு. இரண்டையும் இணைத்து அரசியலாக்கிவிடாதீர்கள். அரசியலுக்காக, குடும்ப உறவுகளை விடாதீர்கள்.
'கொ.மு.க., உடைய, ஈஸ்வரனே காரணம்' என, பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
அவர் என்ன சொன்னாலும் கவலையில்லை. என் மக்கள், என்னுடன் இருக்கின்றனர். கட்சியினர் என்னை புரிந்து, என்னுடன் இருக்கும் போது, அவரது பேச்சுக்களுக்கு பதில் இல்லை. இது நடந்து முடிந்த மாநாட்டில் மக்கள் அறிந்துவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE