கூட்டணியில் இடம் பெற்றிருந்தபோது, கம்யூனிஸ்ட் தோழர்களும், அ.தி.மு.க., தொண்டர்களும், கூட்டாஞ்சோறு சாப்பிடாத குறையாக தோளோடு தோள் உரசி பணியாற்றினர். இவர்களது மன்றங்களில் அவர்களும், அவர்களின் மன்றங்களில் இவர்களும் என, கொஞ்சி பேசி மகிழ்ந்தனர். 'நாளும் நமதே; 40ம் நமதே' கோஷத்துடன் வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, கையோடு பிரசாரத்தையும் காஞ்சிபுரத்தில் துவக்கினார். அன்றைய தினமே தொண்டர்களும், தோழர்களும் முறைத்து கொண்டனர். மன்றங்களில் பறக்க விடப்பட்ட, கூட்டணி கட்சிக் கொடிகளை அப்புறப்படுத்தினர். அடுத்தடுத்து நடந்த, அ.தி.மு.க., தேர்தல் ஆலோசனை கூட்டங்களில் பேசியவர்களும், 'கம்யூனிஸ்ட்டுகளை நம்புவது, மண் குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்குவதற்கு சமம்' என, தாக்கிப் பேசினர். விரக்தியின் விளிம்பிற்கு சென்ற கம்யூனிஸ்ட்டுகள், 'தி.மு.க., எவ்வளவோ மேல்' என, அக்கட்சியினரிடம் தோழமை பாராட்டி வருகின்றனர். 'கம்யூனிஸ்ட் போட்டியிடாத தொகுதிகளில் தி.மு.க.,விற்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்' என, மேலிடம் முடிவெடுத்திருப்பதால், 'வந்தாரை வரவேற்போம்,' என்ற கட்சித் தலைவர் கருணாநிதி பாணியில், தி.மு.க., தொண்டர்களும், கம்யூனிஸ்ட்டுகள் மீது, தோழமை காட்டி வருகின்றனர். இப்போது, தி.மு.க., மன்றங்களில் தோழர்களின் தலைகள் தென்படுகின்றன.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE