சென்னை:''நாங்கள் வேறு யாரையும் எதிர்பார்க்கவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை, அறிவாலயத்தில், நேற்று, தி.மு.க., தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியிட்ட பின், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
'உங்கள் கூட்டணிக்கு வர மாட்டோம்' என, இடதுசாரிகள் தெரிவித்துள்ளது பற்றி?அதைப் பற்றி எனக்கு தெரியாது.
'ஜெயலலிதா தன்னைப் பிரதமராக்க முயற்சி செய்வதால், தமிழக மக்கள் அவருக்குத் தான் ஓட்டு போடுவர்' என, சொல்கின்றனரே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?அவர்கள் முயற்சி செய்வதும் தெரியாது. தமிழக மக்கள், அவருக்கு ஓட்டு போட தயாராக இருப்பர் என்பதும் தெரியாது.
பா.ஜ., சார்பில், புதிய கூட்டணி தமிழகத்தில் உருவாகியுள்ளது. அது திராவிட கட்சிகளுக்கு, எந்த அளவிற்கு சாதக, பாதகங்களை ஏற்படுத்தும்?ஏற்கனவே, எப்படி அமைந்ததோ, அப்படித்தான் இப்போது அமையும்.
'மோடி தான்' பிரதமர் என, பா.ஜ., தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர். 'ராகுல் பிரதமர்' என, காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க., பிரதமராக யாரை முன்னிறுத்தி பிரசாரம் செய்யும்?இவர்கள் அல்லாத ஒருவரை.
தி.மு.க., வேட்பாளர் ஒருவரை எதிர்த்து, தஞ்சாவூரில், புதுக்கோட்டையில் கொடும்பாவி எரித்ததைப் பற்றி?அதைப்பற்றி எனக்கு தெரியாது.
தமிழகத்தில், இந்த முறை பலமுனை போட்டி இருப்பது பற்றி, உங்கள் கருத்து என்ன?மக்களுக்கு நல்லது தான்.
'காங்கிரஸ், உங்கள் அணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது' என, அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனரே?இவை எல்லாம் உங்கள் யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி. ஆனால், நீங்கள் ஏன் காங்கிரஸ் கட்சியை இந்த அளவுக்கு குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என, எனக்கு தெரியவில்லை.
உங்கள் தேர்தல் அறிக்கையில், 100 தலைப்புகளில், மிக விரிவாக அனைத்துத் தரப்பினரின் பிரச்னையையும் உள்ளடக்கி வெளியிட்டிருக்கிறீர்களே?நன்றி.
'இளைஞர்களுக்கு, 30 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படும்' என, முன்பு சொல்லியிருந்தீர்கள். ஆனால், 30 சதவீதம் தரப்படவில்லை என சொல்கின்றனரே?இப்போது, 30 சதவீதத்திற்கு மேலாகவே, இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
உங்கள் கூட்டணிக்கு, மேலும் கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் வேறு யாரையும் எதிர்பார்க்கவில்லை. எனவே, எந்தக் கட்சியினர் வருவர் என, காத்திருக்கவில்லை.
இந்தத் தேர்தலில் எந்த ஒரு தேசியக் கட்சியுடனும், கூட்டணி இல்லாமல் போட்டிஇடுகிறீர்கள். இது உங்களுக்கு பின்னடைவு இல்லையா?எந்த பின்னடைவும் எங்களுக்கு ஏற்படாது.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE