'நாட்டின் பொருளாதார சரிவு நிலை, நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு போன்றவற்றிற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் காரணம்,'' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.வின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்கா 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.
பேட்டியின் விவரம் வருமாறு:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி உள்ளது? நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படுமா?
நடப்பு 2013-14ம் நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 4.9 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த இலக்கு எட்டப்பட வாய்ப்பில்லை.கடந்த 2003-04ல், பா.ஜ.அரசின் பல்வேறு தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் என்ற, அளவில் நிலை நிறுத்தப்பட்டது. ஆனால், கடந்த 2012-13ல் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5 சதவீதத்திற்கும் கீழ் சரிவடைந்தது.நிலையற்ற கொள்கை திட்டங்கள், உற்பத்தியை அதிகரிக்க வழிவகை செய்யாமல், வங்கிகளுக்கான 'ரெப்போ' வட்டி விகிதங்களை மட்டும் அதிகரித்தது போன்றவற்றால், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தது.தற்போது, ஒரு சில வேளாண் பொருட்களின் உற்பத்தி இயற்கையாகவே அதிகரித்து உள்ளதை அடுத்து, பணவீக்கம் குறைந்து உள்ளது. ஆனால், இது நிலையானது இல்லை.மத்திய அரசு, பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி போன்றவை குறித்து, முதலில் சாதகமான புள்ளிவிவரத்தை அளித்துவிட்டு, பின்பு, மறுமதிப்பீடு என்ற, பெயரில் புள்ளிவிவரங்களை குறைத்து காண்பிக்கிறது. இது, ஒரு மோசடி செயல்.
தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளால் தான் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது என்று கூறப்படுவது குறித்து...
நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு, தங்கம் இறக்குமதி மட்டும் காரணம் இல்லை. இதன் இறக்குமதி மீது அதிக சுங்க வரி விதிக்கப்பட்டு உள்ளதால், தங்க கடத்தல் அதிகரித்து உள்ளது.உள்நாட்டில் அபரிமிதமான நிலக்கரி வளம் உள்ள நிலையில், அதன் உற்பத்தியை அதிகரிக்க வழி செய்யாமல், நிலக்கரியை அதிகளவில் இறக்குமதி செய்வதும், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு வழிவகுத்து உள்ளது.குறிப்பாக, நம் நாடு, ஆண்டுக்கு 2,000 கோடி டாலர் (1.20 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. அரசின் பல்வேறு அமைப்புகள் உரிய காலத்தில் அனுமதி அளிக்காததால் நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு இயற்கை வளங்களின் மூலமான உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மின் உற்பத்தியும் சரிவடைந்து உள்ளது. தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாட்டால், நாடு தழுவிய அளவில் தங்க ஆபரண துறை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. பா.ஜ. ஆட்சிக்கு வரும் நிலையில், தங்கம் இறக்குமதி மீதான கொள்கை திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் குறித்து உங்களுடைய கருத்து?
வரும் ஏப்ரல் முதல், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு 10 லட்சம் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் எரிவாயுவின் விலையும், தற்போதைய, 4.20 டாலரிலிருந்து, 8.4 டாலராக அதிகரிக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது, மிகவும் அதிகம்.எனது தலைமையிலான பார்லிமென்ட் நிலைக்குழு, இந்த விலை உயர்வு மிகவும் அதிகம் என, தெரிவித்து இருந்தது. ஆனால், இதர குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு, எரிவாயுவின் விலையை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது. பா.ஜ. கட்சி ஆட்சிக்கு வரும் நிலையில், நிச்சயமாக, எரிவாயுவின் விலை குறைக்கப்படும்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பயனளிப்பதாக உள்ளதா?
'மன்ரேகா' என்று சுருக்கமாக அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால், மக்கள் பயனடைவதை விட, அரசின் திட்டமிடப்படாத செலவினம் அதிகரித்து, அது நாட்டின் நிதி பற்றாக்குறை உயர்விற்கு வழிவகுத்து உள்ளது. இந்த திட்டத்தால் கிடைக்கும் பயனை விட, இடர்பாடுகளே அதிகமாக உள்ளன. எனவே, இந்த திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வலுவடைந்து வருகிறது. இது, நிலையானதா?
இது நிலையற்றது. ரிசர்வ் வங்கி மூன்று ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் 3,400 கோடி டாலரை வெளிநாடுகளில் இருந்து கடனாகப் பெற்றுள்ளது. இதனை திரும்ப செலுத்தும்போது, அன்னியச் செலாவணி கையிருப்பு குறைய வாய்ப்பு உள்ளது (அதனால், டாலர் விலை மீண்டும் உயரும்). பங்குச் சந்தையின் தற்போதைய எழுச்சி நிலை மற்றும் ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது போன்றவற்றிற்கு, மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைக்கும் என்ற, செய்திகள் தான் முக்கிய காரணம்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை மக்களை பாதிப்பதாக உள்ளது? இது குறித்து, உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்விற்கு, காங்கிரஸ் அரசின் மோசமான கொள்கை தான் காரணம். மக்களுக்கும், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், இவற்றின் விலை கொள்கை வகுக்கப்பட வேண்டும். குறிப்பாக, வரி விகிதங்களை மாற்றி அமைத்து, எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படாத வகையிலும், அதேசமயம், இந்த நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டாத முறையிலும் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும்.
நிதி பற்றாக்குறை அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன?
அரசின் வருவாயை விட, செலவினங்கள் அதிகரிப்பதால் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்கு, காங்கிரஸ் அரசின் திட்டமிடப்படாத செலவினங்கள் அதிகரித்து வருவது தான் முக்கிய காரணம்.வருவாயை அதிகரித்து காட்டும் வகையில், தற்போதைய அரசு, முன்கூட்டிய வரி வசூலை அதிகரித்து காட்டுகிறது. இதனால், கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப அளிக்கும் போது, ஆட்சிக்கு வரும் புதிய அரசுக்கு, அது வருவாய் பற்றாக்குறையை அதிகரிக்க செய்யும்.மேலும், நிதி பற்றாக்குறையை குறைப்பதற்காக, காங்கிரஸ் அரசு, பொது துறை நிறுவனங்களை அதிக 'டிவிடெண்டு' வழங்கும்படி வற்புறுத்தி வருகிறது. அரசின் மோசமான கொள்கையால், பொது துறை வங்கிகளின் வசூலாகாத கடன், வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து உள்ளது.
பா.ஜ. ஆட்சி அமைக்கும் நிலையில் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள் ஏதும் உள்ளதா?
நாட்டில் அபரிமிதமான வளங்கள் உள்ளன. சர்வதேச பொருளாதார நிலை நன்கு இல்லாததால் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மோசமாக உள்ளது என, காங்கிரஸ் அரசு கூறி வருகிறது.ஆனால், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கு, எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவில்லை. சாலைகள் மேம்பாடு, வர்த்தக வளாகங்கள், மின்சாரம், துறைமுகம் என, எண்ணிலடங்காத 17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அரசின் பல்வேறு அமைப்புகள் அனுமதி அளிக்கும் நிலையில், நாட்டின் பொருளாதாரம், வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி காணும்.
சரக்கு மற்றும் சேவைகள் வரி திட்டம் அமல்படுத்தப்படுமா?
ஜி.எஸ்.டி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி திட்டம், அமல்படுத்தப்படும். இதனால், நாடு தழுவிய அளவில் அனைவருக்கும் பயன்கிடைக்கும். பா.ஜ., ஆட்சிக்கு வரும் போது, இந்த திட்டம் விரைந்து அமல்படுத்தப்படும்.
வரும் பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜ.வின் வெற்றி வாய்ப்பு எப்படி?
நாடு தழுவிய அளவில், பா.ஜ.,வுக்கு மக்களின் அமோக ஆதரவு உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ., கூட்டணி, 272க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE