அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., தலைவர்களுக்கான, தேர்தல் பிரசார வாகனங்கள், அதிநவீன வசதிகளுடன் கோவை, சிவானந்தா காலனியிலுள்ள, தனியார் நிறுவனத்தில் தயாராகி வருகின்றன.
இதுகுறித்து, அந்நிறுவன ஊழியர்கள் கூறியதாவது: முக்கிய கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், தங்களுக்கான பிரசார வாகனங்களை, அதிநவீன முறையில் வடிவமைத்து தர கோரியுள்ளனர். அதன்படி, சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. கட்சி பிரமுகர்களின் விருப்பம், பொருளாதார வசதிக்கு ஏற்ப, வாகனங்களை வடிவமைக்கிறோம். முதல்வர் ஜெயலலிதாவுக்கான பிரசார வாகனத்தில், நவீன ஹைட்ராலிக் கிரேன், படுக்கை வசதி, கழிவறை, குளியல் அறை, வாஷ் பேசின் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். பிரத்யேகமாக, 'ரெஸ்ட் ரூம்' வாகனம் ஒன்றும், பின்தொடர்ந்து செல்ல, தயாராகி வருகிறது. இதேபோன்று, மேலும் சில கட்சி பிரமுகருக்கும் இங்கிருந்துதான் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. நவீன இருக்கைகள், மின் விளக்குகள், ஸ்டிக்கரிங் உள்ளிட்ட வடிவமைப்புகளை செய்து தருகிறோம். கடந்த ஆண்டு, 25க்கும் மேற்பட்ட வாகனங்களை வழங்கினோம். இந்தாண்டு, 10 வாகனங்களுக்கு மட்டுமே, 'ஆர்டர்' வந்துள்ளது. வசதிகளுக்கேற்ப செலவுத்தொகையும் அதிகரிக்கும். வாகனத்தின் நிறம், அமைப்பு உள்ளிட்டவற்றை பொறுத்து போக்குவரத்து அலுவலர்களால் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு, ஊழியர்கள் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE