சென்னை: தி.மு.க., அழைப்பு விடுத்தும், அதன் தலைமையிலான கூட்டணியில் ஏன் இடம் பெற முடியவில்லை, என, மார்க்சிஸ்ட் மாநில செயலர், ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
திருவாரூரில், அவர் அளித்த பேட்டி:
காங்.,- - பா.ஜ., என, இரண்டுமே, மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடாது. மக்களுக்கான போராட்டத்தை, இடதுசாரி கட்சியினர் நடத்தியுள்ளனர். மாற்று பொருளாதார கொள்கை, ஊழலை, மக்கள் முன் வைத்து, தேர்தலை சந்திக்கிறோம். 'சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு மசோதாவை பார்லிமென்டில் எதிர்ப்போம்' என, தி.மு.க., கூறியது. ஆனால், அதற்கு ஆதரவாக ஓட்டெடுப்பில் பங்கேற்றது. மக்களுக்காக எந்த போராட்டத்தையும், தி.மு.க., பல ஆண்டாக நடத்தவில்லை. பா.ஜ., மற்றும் காங்., மத்திய கூட்டணியில், மாறி மாறி, அங்கம் வகித்து, தி.மு.க., ஊழல் புரிந்துள்ளது. அதனால், தான், தி.மு.க., அழைப்பு விடுத்தாலும், அவர்களது கூட்டணியில் இடம்பெற முடியவில்லை. மாறாக, இரு கம்யூ., கட்சியினரும் இணைந்து தேர்தலை சந்திக்கிறோம். திருச்சியில், 15ம் தேதி நடக்கும், இந்திய கம்யூ., மாநில கூட்டத்தில், அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். மறுநாள், 16ம் தேதி சென்னையில் நடக்கும், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில கூட்டத்தில், எங்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். கம்யூனிஸ்ட் கட்சியினர் போட்டியிடாத தொகுதிகளில், யாருக்கு ஆதரவு என, பிறகு அறிவிக்கப்படும். எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை, இன்னும் இரண்டு நாட்களில் மத்திய கமிட்டி மூலம் வெளியிடப்படும். பின், மாநில தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு, ராமகிருஷ்ணன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE