நம் நாட்டுக்கு உடனடி தேவை கழிப்பறைகள்!

Added : மார் 13, 2014 | கருத்துகள் (1)
Share
Advertisement
திறந்த வெளியில் மலம் கழிப்பது, நமக்கு சகஜமான ஒரு விஷயம். ஆனால், அதனால், மிகப்பெரிய பிரச்னையையும் நமது நாடு சந்தித்துக்கொண்டு இருக்கிறது என, சொன்னால் அதை நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். ஆனால், போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும், 2.4 லட்சம் கோடி ரூபாயை இந்திய பொருாளாதாரம் இழந்து வருகிறது என்று, உலக வங்கியின் அங்கமான, நீர் மற்றும்
நம் நாட்டுக்கு உடனடி தேவை கழிப்பறைகள்!

திறந்த வெளியில் மலம் கழிப்பது, நமக்கு சகஜமான ஒரு விஷயம். ஆனால், அதனால், மிகப்பெரிய பிரச்னையையும் நமது நாடு சந்தித்துக்கொண்டு இருக்கிறது என, சொன்னால் அதை நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். ஆனால், போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும், 2.4 லட்சம் கோடி ரூபாயை இந்திய பொருாளாதாரம் இழந்து வருகிறது என்று, உலக வங்கியின் அங்கமான, நீர் மற்றும் சுகாதாரத்திற்கான இயக்கம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, ஐ.நா.,வின் அங்கமான 'யூனிசெப்', உலக சுகாதார அமைப்போடு இணைந்து வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில், 'திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா தான், முதல் இடத்தில் உள்ளது' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. 13 நாடுகள் இடம் பெற்றுள்ள அந்த 'திறந்த வெளி' பட்டியலில், சீனா, நைஜிரியா, பிரேசில், பங்களாதேஷ், நேபாளம், சூடான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்று உள்ளன. 'ஆஹா, இந்த விஷயத்தில் நாம் தனித்து விடப்படவில்லை' என்ற, நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு இல்லை. நம்மைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, உகாண்டா, தான்சானியா போன்றவை, இந்தியாவைவிட மேம்பட்ட சுகாதார வசதியோடு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது, நமக்கு பெரும் அவமானம் அல்லாமல் வேறென்ன?
இந்தியாவின் தற்போதைய கழிப்பறை சூழல்;
* 28 சதவீதம் மக்களுக்கு மட்டும் தான் சுத்தமான கழிப்பறை வசதி உள்ளது
* 65 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை
* 50 சதவீதம் மக்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்
* தினமும், 7.5 கோடி கிலோ மலம் திறந்தவெளியில் கழிக்கப்படுகிறது
இவ்வாறு உள்ள சூழலை வரும் 2020க்குள் முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று, ஐ.நா.,வின் 'மில்லெனியம் டெவலப்மென்ட் கோல்ஸ்' திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இலக்கை இந்திய அரசும் ஒப்புக்கொண்டு உள்ளது. இதை நோக்கித்தான், கடந்த 1999ல், 'நிர்மல் பாரத் அபியான்' என்ற, திட்டத்தை மத்திய அரசு துவங்கியது. கழிப்பறை கட்டுவதற்கு மானியம் அளிப்பதும், கழிப்பறைகளின் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கம். இதுவரை, இந்த திட்டத்தில் 11,749 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. ஆனால், இன்று வரை, மேலே குறிப்பிடப்பட்டு உள்ள புள்ளிவிவரங்கள் வரைதான் எட்டி உள்ளோம். இன்னும் ஆறு ஆண்டுகளில், 2020க்குள் இலக்கை எட்டுவோமா என்பது, சந்தேகம் தான். நிலை இப்படி இருக்க, கழிப்பறை இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளால், இந்தியாவில்;
* ஏறத்தாழ ஆறு கோடி குழந்தைகளின் வளர்ச்சி குன்றியுள்ளது. இவர்களை தான் நாம் எதிர்கால சொத்தாக, இந்தியாவின் பலமாக கொண்டாடுகிறோம்
* ஒவ்வொரு ஆண்டும், ஏறத்தாழ இரண்டு லட்சம் இந்திய குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறக்கின்றனர். கழிப்பறைகள் இருந்தால் இது, சுலபமாக தடுக்கப்படலாம்
* சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பதால், ஒவ்வொரு ஆண்டும் 1,200 கோடி ரூபாய் அளவிற்கு சுற்றுலா துறையில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது
* பாதுகாப்பான குடிநீர் கிடைக்காததால், பாட்டில் குடிநீரை மக்கள் வாங்குவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 600 கோடி ரூபாய் வீண் கூடுதல் செலவாகிறது
* நீர்நிலைகளின் அருகே மலம் கழிக்கப்படுவதால், குடிநீரை சுத்திகரிப்பதற்கு செலவு அதிகரிக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும், 11,200 கோடி ரூபாய் இழக்கப்படுகிறது.
* சுகாதாரமற்ற குடிநீர், கழிப்பிடங்களால் ஏற்படும் உடல்நல குறைவால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் 21,700 கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
* அரசுக்கு கூடுதல் மருத்துவ செலவாக 21,200 கோடி ரூபாய் ஏற்படுகிறது
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். நல்ல கழிப்பறை வசதி இல்லாதுபோனால் தனிமனித ஆரோக்கியம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அதனால் மிகப்பெரும் சேதம் நாட்டுக்கு உண்டாகிறது. ஆரோக்கியமற்ற குடிமக்கள் பொருளாதார இழப்புக்கு வழி வகுக்கின்றனர்.
இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிக்காட்டுவேன் என்று, இப்போதைய முதல்வர் சூளுரைத்தார். ஒருமாநிலத்தின் வளர்ச்சி என்பது தொழிற்சாலைகளைத் திறப்பதோடு நின்று போவதில்லை. 2020க்குள் தமிழகத்தை முழுமையான கழிப்பறை வசதி கொண்ட மாநிலமாக மாற்றினால், அதுவே உண்மையான கவுரவமான வளர்ச்சி. அரசு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும், அதை பயன்படுத்துகிற, பராமரிக்கிற பொறுப்பு பொதுமக்களைச் சார்ந்ததுதான். தற்போது அரசாங்கம் ஏற்படுத்தித் தருகின்ற பொது சுகாதார வளாகங்களை, பொதுமக்கள் எவ்வளவு மோசமாகப் பராமரிக்கின்றனர் என்பதை கிராமங்களுக்கு சென்று பார்ப்பவர்கள் அறிந்திருக்கக்கூடும். ஒரு கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டால், ஒருசில வாரங்களிலேயே யாரும் அணுக முடியாத, ஒரு பகுதியாக அந்த இடம் மாறிவிடுகிறது. அந்த அளவுக்கு மோசமாக அவற்றை பொதுமக்கள் வைத்திருப்பது வேதனையளிக்கும் உண்மையாகும். 'நிர்மல் பாரத் அபியான்' திட்டத்தில், 2012ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங் களிலும் முழு சுகாதாரம் ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கு இருந்தது. அந்த ஆண்டும் வந்து, சென்றுவிட்டது, ஆனால், சில மாநிலங்கள் மட்டும் தான், இந்த திட்டத்தில், நல்ல முன்னேற்றம் கண்டு உள்ளன. இந்த திட்டத்தில், சிக்கிம் மாநிலம் 100 சதவீதம் வெற்றி கண்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிலேயே சுகாதாரமான மாநிலம், தற்போது, சிக்கிம் தான். ஆனால், தமிழகம் இன்னும் பின்தங்கி உள்ளது. குட்டி மாநிலங்கள் சாதித்ததை நாம் சாதிக்க முடியாமல் இருப்பதற்கு, நம் மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததும், நம் அரசு போதிய முயற்சி எடுக்காததும் தான் காரணங்கள். இது தேர்தல் காலம். ஒவ்வொரு கட்சியும் ஏதேதோ வாக்குறுதிகளைத் தருகிறது. 2020க்குள் அனைவருக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தருவோம் என, எந்தக் கட்சியாவது வாக்குறுதி அளிக்குமா?
ரவிக்குமார், பொதுச்செயலர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
27-மார்-201406:10:50 IST Report Abuse
Mohan Sundarrajarao பொதுமக்கள் மீது பழி போடுவதில் அர்த்தம் இல்லை. முதலில் வசதிகளையும் வாய்ப்புகளையும் உண்டாக்கி தாருங்கள். பராமரிப்புக்கு ஏற்பாடு பண்ணுங்கள். பிர்லா மந்திரிலும் இஸ்கான் கோயில்களிலும் பாருங்கள். நீங்கள் குறிப்பிடும் இதே மனிதர்கள்தான் அங்கு செல்லும்போது சுத்தமாக வைத்துக்கொள்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X