அரசியல்வாதிகளே உஷார்! சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், லோக்சபா தேர்தலில், 160 தொகுதிகளில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள், வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை கணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றன என, தெரியவந்துள்ளது.
ஏப்ரல் மாதம் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், 4.8 கோடி இளைஞர்கள் ஓட்டளிக்க தயாராக உள்ளனர். இவர்கள் அனைவரும் 18ல் இருந்து 23 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒரு தொகுதிக்கு, 90 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களாக பரிணமித்துள்ளனர். இந்திய இணையம் மற்றும் அலைபேசி கூட்டமைப்பு (ஐ.ஏ.எம்.ஏ.ஐ.,) சமீபத்தில் நடத்திய ஆய்வில், நாட்டின் 80 கோடி வாக்காளர்களில், 17 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களில், 29 சதவீதத்தினர், கல்லூரிக்கு செல்லும் இந்த 4.8 கோடி இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களை அடுத்து, 30 வயதுக்கு மேற்பட்டோர் 26 சதவீதமும், பணிக்கு செல்லும் பெண்கள் 10 சதவீதமும், இணையத்தை பயன்படுத்துகின்றனர். நாட்டின் 80 கோடி வாக்காளர்களில், 17 கோடி பேர், இணையத்தை பயன்படுத்துகின்றனர். மொத்தமுள்ள 542 லோக்சபா தொகுதி களில், 160 தொகுதிகளில், வேட்பாளரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போவது, இந்த, 4.8 கோடி இளைஞர்கள் என்பதையும், ஐ.ஏ.எம்.ஏ.ஐ.,யின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,'இது, வெறும், லைக், கமென்ட், ஷேர் மட்டுமல்ல; சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது. அதேநேரம், வேட்பாளர், இந்த சமூக வலை தளங்கள் மூலம் வாக்காளர்களுடன் நெருங்க முடியும்' என, தெரிவித்துள்ளது. இந்த 160 தொகுதிகளுமே, பா.ஜ., காங்., ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கிய தொகுதிகளாக உள்ளன. கடந்த, 2013ல், 108 நகர்ப்புற லோக்சபா தொகுதிகளில், 'கூகுள்' நடத்திய கணக்கெடுப்பில், 37 சதவீதத்தினர், இணையத்தை எப்போதும் பயன்படுத்துவோர் என்பதும், அவர்களில், ஆய்வில் பங்கேற்றோரில், 94 சதவீதத்தினர், 2014 லோக்சபா தேர்தலில், ஓட்டுப் போட உறுதியாக தீர்மானித்திருப்பதும் தெரியவந்தது. அவர்களில், 35 சதவீதத்தினர் கட்சி அடிப்படையிலும், 36 சதவீதத்தினர் உள்ளூர் வேட்பாளர்கள் அடிப்படையிலும், 11 சதவீதத்தினர், பிரதமர் வேட்பாளர் அடிப்படையிலும் ஓட்டளிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். சமீபத்தில், ஐ.ஏ.எம்.ஏ.ஐ., நடத்திய ஆய்வின்படி, தமிழகத்தில், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, கோவை, விழுப்புரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய 11 தொகுதிகளில், இளைஞர்கள், இணையத்தை தீவிரமாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தொகுதிகளில், சமூக வலை தளங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பட்டியலை, அந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. ஒட்டுமொத்தத்தில், நெல்லை முதல் ஜம்மு வரை, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்றவை, விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. அதனால் தான் அரசியல்வாதிகளும் தங்கள் பிரசாரத்தை, அந்த தளங்கள் மூலம், சமூகத்திடையே எடுத்து செல்ல முயல்கின்றனர். குறிப்பாக, காங்., பா.ஜ., ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளும், இதில் மிக தீவிரமாக உள்ளன என்பது சொல்லாமலே தெரிகிறது.
- பிசினஸ் ஸ்டாண்டர்டு உடன் இணைந்து -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE