தொகுதி நிலவரம் திருநெல்வேலி| Dinamalar

தொகுதி நிலவரம் திருநெல்வேலி

Added : மார் 13, 2014
Share
பிரச்னைகள், எதிர்பார்ப்பு* தென்மாவட்டங்களில் முக்கிய விவசாய மையமாக, திருநெல்வேலி இன்னமும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. ஐந்து ஆண்டுகளில் புதிய அணைகளோ, புதிய நீர்ப்பாசன திட்டங்களோ நிறைவேற்றப்படவில்லை * தாமிரபரணி ஆற்றில், உபரியாக செல்லும் மழை நீரை, வறட்சி பகுதிக்கு திருப்பி விடும் திட்டம், பல ஆண்டுகளாக நடந்து வருகிறது; இன்னமும் முடிந்தபாடில்லை * மாவட்டத்தின்
தொகுதி நிலவரம் திருநெல்வேலி

பிரச்னைகள், எதிர்பார்ப்பு

* தென்மாவட்டங்களில் முக்கிய விவசாய மையமாக, திருநெல்வேலி இன்னமும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. ஐந்து ஆண்டுகளில் புதிய அணைகளோ, புதிய நீர்ப்பாசன திட்டங்களோ நிறைவேற்றப்படவில்லை
* தாமிரபரணி ஆற்றில், உபரியாக செல்லும் மழை நீரை, வறட்சி பகுதிக்கு திருப்பி விடும் திட்டம், பல ஆண்டுகளாக நடந்து வருகிறது; இன்னமும் முடிந்தபாடில்லை
* மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலியில், வேலை வாய்ப்பிற்கான தொழிற்சாலைகள் இல்லை. ஒன்றிரண்டு வந்தாலும், கோககோலா, பெப்சி என, தாமிரபரணி தண்ணீரை உறிஞ்சி குடிக்கும், நிறுவனங்கள் தான் வருகின்றன
* தண்ணீர், உயரழுத்த மின்சாரம் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் வராததாலும், தொழில் நிறுவனங்களுக்கு, வரி விதிப்பில் சலுகை இல்லாததாலும், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் தூங்கியபடியே இருக்கிறது
* கங்கைகொண்டான் தொழிற்நுட்ப பூங்காவும், எப்போதும் பூட்டிக்கிடப்பது போலவே ஒரு நிலை உள்ளது
* ஒவ்வொரு தேர்தலின் போதும், 'செயல்படாமல் உள்ள, நெல்லை பேட்டை கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் செயல்படுத்தி காட்டுவோம்' என, கூறுவதற்காகவே, இன்னமும், அந்த மில்லை மூடி வைத்துள்ளனர். 1958ல் காமராஜரால் துவக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்ட மில் களையிழந்து காணப்படுகிறது. இங்குள்ள இயந்திரங்களையும் களவாடிவிட்டனர்
* எம்.பி., நிதியை, பெயரளவிற்கான திட்டங்களுக்கு வழங்கி வீணடித்தனர். ஏற்கனவே உள்ள, பஸ் ஸ்டாண்டை இடித்து விட்டு, நான்குபேர் மட்டும் நிற்க எட்டு லட்சம் ரூபாயை வீணடிக்கின்றனர்
* தாமிரபரணி ஆற்றின் பல்வேறு கால்வாய்கள் நெடுங்காலமாக தூர்வாரப்படாமல், குப்பை அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன
* திருநெல்வேலி மாவட்டத்தில், ராஜ்யசபா எம்.பி.,க்கள் நான்கு பேரை சேர்த்தால், மொத்தம், ஆறு எம்,பிக்கள் உள்ளனர். ஆனாலும், தொகுதி போதுமான வளர்ச்சியை எட்டவில்லை
* நெல்லையில் இருந்து, ஆலங்குளம், சுரண்டை வழியாக, சங்கரன் கோவில் வரையிலான, புதிய ரயில்பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும், கண்டுகொள்ளப்படாமல் உள்ளது
எம்.பி., பேட்டி

* ஐந்து ஆண்டுகளில், தொகுதி மக்களை சந்தித்தது எத்தனை முறை?
நெல்லையிலும், ஆலங்குளத்திலும் அலுவலகங்கள் அமைத்து, மனுக்கள் பெற்றுள்ளேன். சாலைகள், மேம்பாட்டு நிதி திட்டங்களை, ஆய்வு செய்வதற்காக செல்லும் போதும், மக்களை சந்தித்துள்ளேன்.

* தொகுதி குறித்து, பார்லிமென்டில் என்னென்ன பேசியுள்ளீர்கள்?
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை, 150 நாட்களாக அதிகப்படுத்தி கேட்டு, நெல்லை மாவட்டத்தில் ஒரு முறை அமல்படுத்தினோம். பார்லி.,யில் நடந்த 187 விவாதங்களில் பங்கெடுத்து பேசியுள்ளேன். 1,110 கேள்விகள் கேட்டுள்ளேன். அதிக விவாதங்களில் பங்கெடுத்ததற்காக, தமிழகத்தின் சிறந்த எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டேன்.

* தொகுதிக்கு நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன?
நெல்லையில், 50 கோடி ரூபாயில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 40 கோடி ரூபாயில், பணிகள் நடந்துள்ளன. பீடி தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி, வாங்கி கொடுத்துள்ளேன். மகேந்திரகிரி ராக்கெட் மையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

* இயற்றப்பட்ட சட்டங்களில், எது மிக முக்கியமானது?
லோக்பால், உணவு பாதுகாப்பு மசோதா, தெலுங்கானா ஆகியவற்றை கூறலாம். தவிர தமிழக அரசில் மீன்வள துறை இருப்பது போல, மத்திய அரசில் மீன்வள துறை கிடையாது. மீன் வளத்திற்காக, தனியாக துறை ஏற்படுத்த வலியுறுத்தி தனிநபர் மசோதா கொண்டு வந்து பேசினேன்.

* காங்கிரஸ், இந்த முறை வெற்றிபெறுமா?
ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, திருப்திகரமாக செயல்பட்டுள்ளேன். கட்சிக்கும், எனக்கும் நல்ல பெயர் உள்ளது. நிச்சயமாக, வெற்றி பெறுவோம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X