தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு கட்சியிலும் குழப்பங்கள் இருப்பது, வழக்கமான ஒன்றுதான். எதிர் எதிர் நிலையில் இருக்கும் இரு கட்சிகள், கூட்டணியாக ஒன்று சேர்வதும், தொகுதிகளைப் பிரித்துக் கொண்டு தேர்தலை சந்திப்பதும்கூட வாடிக்கைதான். ஆனால், கேட்ட தொகுதியில், 'சீட்' கிடைக்கவில்லை என்பதால், கட்சி மாறுவது, நடந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கட்சி மாறிய உடன், புதிய கட்சியில், தான் விரும்பும் தொகுதியையே கேட்டு பெற்றிருக்கின்றனர். இது வட மாநிலங்களில், குறிப்பாக பீகாரில் நடந்திருக்கிறது. இந்த நடைமுறை சரியானதா என்பது குறித்து அரசியல் பிரபலங்கள் இருவர் நடத்திய கருத்து மோதல் இங்கே:
அரசியல் கட்சிகள், தேர்தல் நேரத்தில் நேர் எதிர் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறது. அதேபோல், அக்கட்சியில் இருப்பவர்களும், எதிரி கட்சிக்கு தாவுகின்றனர். இந்த தாவல், ஆதாயத்துக்காகவும் இருக்கலாம். பொது நலனுக்காகவும் இருக்கலாம். பொதுவாக, தற்போது நடக்கும் கட்சி தாவல் என்பது ஆரோக்கியமான அரசியலாக இல்லை. ஒரு கட்சியோ, ஒரு தனி நபரோ, ஒரே இரவில், எதிர் அணிக்கு செல்வ தில்லை. அணி மாறி செல்ல வேண்டும் என, முடிவும் செய்யும் கட்சி, அதற்காக பல மாதங்களுக்கு முன்பே, காரணங்களையும், அடிப்படையையும் தயார் செய்து விடுகிறது. அதுபோலவே, தனி நபர் ஒருவர் கட்சி மாறுகிறார் என்றால், அவரின் நீண்ட கால அதிருப்தி தான் அதற்குக் காரணமாக உள்ளது. கட்சித் தலைமை தன்னை வெளியேற்றிவிடும் எனத் தெரிந்து சிலர் கட்சி தாவுவர். சிலர், கட்சி வெளியேற்றும் வரை, காத்திருந்து கட்சி மாறுகின்றனர். இந்த கட்சி தாவல் சரியா, தவறா? அதன்மூலம் அவர்கள் ஆதாயம் அடைகிறார்களா என்பது முக்கியமல்ல. அவர்கள் மேற்கொள்ளும் முடிவை, மக்கள் ஏற்கிறார்களா என்பதே முக்கியம். அணி மாறும் கட்சியையும் சரி, தனி நபரையும் சரி, மக்கள் எப்படி பார்க்கின்றனர் என்பது முக்கியம். அணி மாறுவதை மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வது இல்லை. அதற்கான பதிலை தேர்தலில் தெரிவித்து விடுகின்றனர். பல கட்சிகளும், தனி நபர்களும் எடுக்கும் தாவல் முடிவுகளுக்கு, மக்கள் தக்க பதிலை தெரிவித்துள்ளனர். இதற்கு, தமிழகத்தில் அமைந்த கூட்டணிகள் மற்றும் தனி நபர்களின் வெற்றி, தோல்விகளே உதாரணமாக உள்ளன. நியாயமாக இல்லாத அணி மாற்றங்களை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தனி நபர்களுக்கும் இதே கதி தான். அணி மாற்றங்களை முற்றிலும் தவறு என்றும் சொல்லிவிட முடியாது. புதிய அணிகள் பல வேளைகளில், பெரும் அரசியல் மாற்றங்களை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
திருநாவுக்கரசர், மூத்த தலைவர், தமிழக காங்கிரஸ்
தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளை போற்றும் பண்பாடு இருந்தது. தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காமராஜர், ராஜாஜி, சி.சுப்ரமணியன், பக்தவத்சலம் போன்றவர்களின் கருத்துக்களை அறிய வேண்டும் என, அவர்களை நேரில் சந்தித்துக் கருத்துக் கேட்டுள்ளோம். கட்சித் தலைமையும் இப்படித் தான் செய்ய வேண்டும் என, பணித்துள்ளது. ஆனால், அந்த பண்பாடு இன்று முற்றிலும் மாறிவிட்டது. அன்றைய காலங்களில், கொள்கை, கோட்பாடுகள், குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை சந்தித்தோம். இதன்மூலமே, பஸ் முதலாளிகள், மில் உரிமையாளர்கள், ஜாதி தலைவர்களை எதிர்த்து நின்று வெற்றி பெற்றோம். சூழ்நிலைக்கு ஏற்ப, சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, கட்சிகள் முடிவெடுக்கின்றன. இந்த முடிவால் வென்றுவிடலாம் என, எண்ணுகின்றனர். களத்தில் நிலவும் அரசியலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும்போது, கட்சியின் கொள்கை, கோட்பாடுகளில் சமரசம் செய்து கொள்கின்றனர். சமரசம் செய்வதால், அடிப்படை கொள்கையிலிருந்து, எதிர் நிலைக்கு கட்சியை கொண்டு செல்கின்றனர். மக்கள் இவற்றை ஆதரிக்கிறார்களா, எதிர்க்கிறார்களா என்பதை விட, வேறு வழியில்லாமல் மக்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனவே, நேர் எதிர் முடிவுகளை அவர்கள் ஏற்கிறார்கள் என, பொருள் கொள்ள முடியாது. விருப்பு, வெறுப்பு என்பதை விட, சூழ்நிலை தான் முடிவுகளை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட அரசியல், பெரும் எதிர் விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும். இந்த பாதிப்பை விரைவில் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் அரசியல் நடத்தாமல், நேர்மையான அரசியலை நடத்த கட்சிகளும், அதில் உள்ள தனி நபர்களும் முன் வரவேண்டும். அப்போது தான், அரசியல் மாற்றங்களை உருவாக்க முடியும். இதற்கு, அரசியல்வாதிகள் தான் மாற வேண்டும்.
செ.மாதவன், மூத்த தலைவர், தி.மு.க.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE