காங்கிரசுடன் கூட்டணி இல்லையேல் தி.மு.க., தோற்கும்: பேராயர் எஸ்றா.சற்குணம் பரபரப்பு பேட்டி| No win without congress: Esra sargunam to DMK | Dinamalar

காங்கிரசுடன் கூட்டணி இல்லையேல் தி.மு.க., தோற்கும்: பேராயர் எஸ்றா.சற்குணம் பரபரப்பு பேட்டி

Updated : மார் 14, 2014 | Added : மார் 14, 2014 | கருத்துகள் (32)
Share
''தி.மு.க., கூட்டணியில், கிறிஸ்தவர்களுக்கு போதிய பிரதிநித்துவம் அளிக்காதது அதிருப்தி அளிக்கிறது. காங்கிரசுடன், தி.மு.க., கூட்டணி அமைக்காவிட்டால், குறைவான ஓட்டுக்களில் தோற்கும் நிலை ஏற்படும்,'' என, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவரும், கிறிஸ்தவ பேராயருமான எஸ்றா.சற்குணம் கூறினார்.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நீண்ட நாள் நண்பரும், தி.மு.க.,வின் ஆசிபெற்ற கிறிஸ்தவ பேராயருமான
win, without, congress,Esra sargunam, DMK, காங்கிரஸ், கூட்டணி, தி.மு.க., தோற்கும், பேராயர் எஸ்றா.சற்குணம், பரபரப்பு, பேட்டி

''தி.மு.க., கூட்டணியில், கிறிஸ்தவர்களுக்கு போதிய பிரதிநித்துவம் அளிக்காதது அதிருப்தி அளிக்கிறது. காங்கிரசுடன், தி.மு.க., கூட்டணி அமைக்காவிட்டால், குறைவான ஓட்டுக்களில் தோற்கும் நிலை ஏற்படும்,'' என, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவரும், கிறிஸ்தவ பேராயருமான எஸ்றா.சற்குணம் கூறினார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நீண்ட நாள் நண்பரும், தி.மு.க.,வின் ஆசிபெற்ற கிறிஸ்தவ பேராயருமான எஸ்றா.சற்குணம், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

முன்னாள் பிரதமர் இந்திரா, அவசரநிலையை பிரகடனம் செய்த போது, தி.மு.க.,வினர், கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதற்கு எதிராக, பெரும் போராட்டங்களையும் நடத்தினர். ஆனால், அவசரநிலை பிரகடனம் முடிந்த மூன்று ஆண்டுகளில், காங்கிரஸ் உடன், தி.மு.க., கூட்டணி அமைத்தது.
சிங்களர்களை விட:

இப்போது, காங்கிரசுடன் கூட்டணியை முறிக்க, தி.மு.க., கூறும் காரணங்கள் சரியாக இல்லை. ஈழ மக்களுக்கு, காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என்கின்றனர். விடுதலை புலிகளால், சிங்களர்களை விட, ஈழத் தமிழர்கள் தான் அதிகம் கொல்லப்பட்டனர். புலிகள் இயக்கம் கொலைகார இயக்கமாக செயல்பட்டது. நாடு தாண்டி வந்து, ராஜிவையும் கொன்றது; இச்செயலை யாரும் ஏற்கமாட்டார்கள். அதேநேரத்தில், ராஜிவ் கொலையாளிகள் விடுதலையைத் தடுக்க, காங்கிரஸ் இவ்வளவு ஆர்வம் காட்டக் கூடாது. இரு கட்சிகளும் விட்டுக் கொடுத்து, கூட்டணியை உருவாக்க வேண்டும். காங்கிரஸ் தனித்து நின்றால், தி.மு.க., மிக குறைவான ஓட்டுக்களில் தோற்கும் நிலை ஏற்படும். இதை, மனதில் வைத்து, தி.மு.க., லோக்சபா தேர்தலை சந்திக்கவேண்டும். வேட்பாளர்களை, தி.மு.க., அறிவித்திருந்தாலும், 'அது மாறுதலுக்கு உட்பட்டது; திருத்தங்கள் வரும்' என, கருணாநிதி கூறியுள்ளார். அந்த திருத்தங்கள், காங்கிரசுடன் ஏற்படும் கூட்டணியால் இருக்கும் என, நம்புகிறேன். மோடி பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரசும், பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில், லோக்சபா சபாநாயகர் மீராகுமாரை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். தி.மு.க.,வின் வேட்பாளர்கள் பட்டியலில், கிறிஸ்தவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. இது வருத்தம் அளிக்கிறது. கிறிஸ்தவர்களுக்காக வாதாட யாரும் இல்லை. முஸ்லிம்களைப் போல அவர்களை ஒன்று திரட்ட முடியவில்லை. அரசியல் விழிப்புணர்வும் கிறிஸ்தவர்களுக்கு போதவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கை, அழகிரி சந்தித்தது, துருதிஷ்டவசமானது. தி.மு.க., தலைவர் கருணாநிதி வீட்டு குடும்ப சண்டையை, அவர்கள் வீட்டுக்குள் தீர்த்துக் கொள்ளவேண்டும். அதை மையமாக வைத்து, அரசியல் நடத்தினால், அது, தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தி.மு.க.,வுடன் தே.மு.தி.க.,வை கூட்டணி சேர்க்க முயற்சித்தேன். விஜயகாந்த் முதல்வர் ஆக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதால், தன் முதல்வர் இலக்கு பாதிக்கப்படுமோ என, அவர் கருதுகிறார். அதனால், தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
யோசிக்க வேண்டும்:

பா.ஜ., கூட்டணியில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி குறித்து, இரு தரப்பினரும் பரஸ்பரம் யோசிக்க வேண்டும். இன்னும் கால அவகாசம் உள்ளது. பா.ஜ., தலைமையில் மத்தியில் ஆட்சி ஏற்பட்டால், சிறுபான்மையினருக்கு அது பாதிப்பாகவே முடியும். எனவே, மத்தியில் பா.ஜ., அல்லாத அரசு உருவாக வேண்டும். அதற்கு, தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தி.மு.க., போட்டியிட வேண்டும். இவ்வாறு, எஸ்றா.சற்குணம் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X