ஈரோடு: தமிழகத்தில், பல முனை போட்டி ஏற்பட்டுள்ள சூழலில், முதல்வர் ஜெயலலிதா, தன் பிரசார உரையில், மாற்றம் செய்துள்ளார். நேற்று, பேசும் போது, தி.மு.க.,வில், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ராசா, தயாநிதி, ஆகியோர் மீண்டும் போட்டியிட, வாய்ப்பு வழங்கி உள்ளதை, கடுமையாக சாடினார்.
ஈரோடு தொகுதியில், ஜெயலலிதா பேசியதாவது:
மத்திய காங்கிரஸ் அரசு செய்த ஊழல்களில், மிகப் பெரியது, 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல். இது தொடர்பாக, ராசா மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது; நீதிமன்ற விசாரணை, நடந்து வருகிறது. 'குற்றம் சாட்டப்பட்டவர்களை, தேர்தலில் போட்டியிட, அனுமதிக்கக் கூடாது' என்பது, பொதுமக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. அதற்கு முரணான வகையில், ஊழல் வழக்கில் சிக்கிய ராசாவை, நீலகிரி வேட்பாளராக, கருணாநிதி அறிவித்துள்ளார். அதேபோல், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான, தயாநிதி, மத்திய சென்னை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, பத்திரிகையாளர்கள் கருணாநிதியை கேட்டபோது, 'அவர்கள் ஊழல் செய்யவில்லை' என, கருணாநிதி கூறவில்லை. 'சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது' எனக் கூறியுள்ளார். ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட, அனுமதி கொடுத்ததை, நியாயப்படுத்தி பேசி, மக்களை ஏமாற்ற நினைக்கும் கருணாநிதிக்கு, வரும் தேர்தலில், பாடம் கற்பியுங்கள். இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.
திருப்பூரில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது. 'கெய்ல்' நிறுவனம் மூலம் விவசாய நிலங்களில், எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தியது. ஆனால், கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல உத்தரவிட்டோம். அவர்கள் நீதிமன்றம் சென்றனர். தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அதேபோன்று, மரபணு மாற்ற விதைகளுக்கு அனுமதியளித்து, விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. எனவே, மத்திய அரசை அகற்றவும், விவசாயத்தை பாதுகாக்கவும், அ.தி.மு.க., பங்கேற்கும் அரசு, மத்தியில் அமைய வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE