சென்னை: முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, வேலுவின் வாரிசுகளுக்கு, 'சீட்' கொடுக்க முடியாதது ஏன் என்பதற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
அவரது அறிக்கை:
துரைமுருகன் என்னுடன், 24 மணி நேரம் இருப்பவர். அவர் மகனுக்கு வேலூர் தொகுதியை கேட்டு, தி.மு.க., வினர் விருப்பம் தெரிவித்தனர். 'அத்தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து போட்டியிட்ட தொகுதி; தற்போது எம்.பி.,யாக இருப்பவரே, மீண்டும் போட்டியிட விரும்புகிறார்' என, காதர்மொய்தீன், கேட்டபோது, மறுக்க முடியவில்லை. தஞ்சாவூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்த, டி.ஆர்.பாலு, பழனி மாணிக்கம், அழகு திருநாவுக்கரசு ஆகிய, மூவரில் ஒருவரை, நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில், ஒருவரை தேர்ந்தெடுத்தால், மற்ற இருவரையும் எப்படி சந்திப்பது, எவ்வாறு சமாதானம் கூறுவது? ஆனால், வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும், டி.ஆர்.பாலு தஞ்சாவூருக்கு சென்றதும், நேராக பழனி மாணிக்கம் வீட்டிற்கு சென்று, பொன்னாடை அணிவித்திருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டச் செயலர் சுப.தங்கவேலனின் மகன் சம்பத்திற்கும், திருவண்ணாமலையில் பிச்சாண்டியின் தம்பி கருணாநிதிக்குக்கும், கோவையில் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரிக்கும்,' சீட்' கேட்டனர். திண்டுக்கல் ஐ.பெரியசாமியும், விழுப்புரம் பொன்முடியும், திருவண்ணாமலை வேலுவும், தங்களின் மகன்கள் போட்டியிடுவதற்காகத் தயாராக இருந்த போதிலும், என் உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு, விருப்ப மனுக்களை தாக்கல் செய்யவில்லை. 'புதிய முகங்களாக இருக்க வேண்டும்; இளைஞர்களாக இருக்க வேண்டும்' என்றெல்லாம் பலரும் விருப்பம் தெரிவித்தனர். மகளிருக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என, யோசித்தோம். இரவு முழுவதும் தூங்காமல், மிகுந்த கவனத்தோடு ஒவ்வொரு தொகுதியாக அலசி ஆராய்ந்து, வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளோம். அவர்களையெல்லாம் வெற்றி வேட்பாளர்களாக ஆக்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE