கடந்த சில ஆண்டுகளாக மோடிக்கு, இந்து மக்கள் கட்சி (இ.ம.க), தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியின் குட்டி கட்சி அணிவகுப்பில் இ.ம.க.,வும் இடம் பெறும் என்ற, எதிர்பார்ப்பு, அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அந்த கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து, 'தினமலர்' நாளிதழுக்கு இ.ம.க., தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த சிறப்பு பேட்டி:
* சமீப காலமாக உங்களை அரசியல் களத்தில் காணவில்லையே, என்ன காரணம்?
இந்து மக்கள் கட்சி தேசியம், தெய்வீகம் ஆகிய கொள்கைகளை இரு கண்களாக கொண்டது. அரசியல் களத்தில் இரு ஆண்டுகளாக, மோடியை பிரதமராக்க வேண்டும் என்று, நாங்கள் தொடர் பிரசாரம் செய்து வருகிறோம். பா.ஜ., யோசித்தபோது கூட, இ.ம.க., மோடியை பிரதமராக்க வேண்டும் என்று, அழுத்தம் கொடுத்தது.
* லோக்சபா தேர்தலில் போட்டியிடுவீர்களா?
பா.ஜ., கூட்டணியில், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டால், அவர்கள் போட்டியிடும் தொகுதியில், நாங்கள் எதிர்ப்போம். பிற அரசியல் கட்சிகள், முஸ்லிம், கிறிஸ்தவ வேட்பாளர்களை நிறுத்தி, இந்துக்களை புறக்கணித்தால், அந்த தொகுதியில் நாங்கள் நேரடியாக போட்டியிடுவோம்.
* 'பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அமைதி சீர்குலையும்' என்ற குற்றச்சாட்டு உள்ளதே...
பா.ஜ., ஏழு மாநிலங்களில் ஆட்சி நடத்துகிறது. அந்த மாநிலங்களில் எல்லாம் சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லையே; அமைதியாகத்தானே உள்ளன. குஜராத்தில், கடந்த 12 ஆண்டுகளாக எந்த மதக் கலவரங்களும் நிகழவில்லையே. தான் இந்து தேசியவாதி என்று, மோடி வெளிப்படையாக அறிவித்துள்ளதால் நாட்டின் அமைதியிலும், வளர்ச்சியிலும் எந்த பாதிப்பும் இருக்காது. பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், அமைதி சீர்குலையும் என்பது, போலி மதச்சார்பின்மை வாதிகளின் குற்றச்சாட்டு.
* பா.ஜ., கூட்டணிக்கு, உங்களை ஏன் அழைக்கவில்லை?
பா.ஜ.,வின் தமிழக தலைமை, சங் பரிவார் அமைப்புகளுக்கு வெளியே இந்துத்துவா பணி செய்யும் தலைவர்களை புறக்கணித்து உள்ளது என்பது, கண்கூடான உண்மை. தமிழக பா.ஜ., முஸ்லிம் அமைப்புகளை, கிறிஸ்தவ அமைப்புகளை, ஜாதி அமைப்புகளை கூட்டணியில் இணைத்துக் கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. ஆனால், இந்து இயக்கங்களையும், கட்சிகளையும் இணைக்க மறுத்து வருகிறது. ஏனென்றால், தமிழக பா.ஜ.,வினர் தங்களை மதச்சார்பற்றவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். இது மோடியின் கொள்கைகளுக்கு எதிரானது.
* இந்து அமைப்புகளை, பா.ஜ.,வில் மதிப்பதில்லை, என்று சொல்கிறீர்களா?
உண்மை. இந்துக்களின் கோரிக்கைகளை ஏற்கவும், அவர்கள் தயாராக இல்லை. கடந்த பல ஆண்டுகளாக இந்து இயக்க தொண்டர்களின் செயல்பாடு, பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. அதை அவர்கள் மதிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
* தமிழகத்தில் பா.ஜ., ஓட்டு வங்கியின் நிலை என்ன?
தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் ரத்தம் சிந்தி, தியாகம் செய்து பல போராட்டங்களில் சிறை சென்று, பா.ஜ.,வுக்கு என, ஓட்டு வங்கியை ஏற்படுத்தி வைத்துள்ளனர். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது நடந்த தேர்தலில், அகில இந்திய அளவில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கு, தமிழகத்தில் இந்து இயக்கத் தொண்டர்கள் செய்த தியாகம்தான் முக்கிய காரணம்.
* பா.ஜ,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா?
அழையா வீட்டில் விருந்தாளியாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யமாட்டோம். ஆனால், மோடி பிரதமராக வேண்டும் என்ற, அடிப்படையில், இந்து கொள்கைகளுக்கும், தமிழக மக்களின் நலனுக்கும், உரிமைக்கும் ஆதரவாக செயல்படும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம்.
* சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த கோருவது குறித்து, உங்களின் கருத்து...
மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம். சிறுபான்மை, பெரும்பான்மை என்று, மக்களை பிரிக்கக்கூடாது. அனைவருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் வரவேண்டும் என்பதே, எங்கள் கொள்கை.
* இந்து தலைவர்கள், தமிழகத்தில் தொடர்ந்து தாக்கப்படுகின்றனரா? மாநில அரசு போதுமான நடவடிக்கை எடுத்து உள்ளதாக கருதுகிறீர்களா? இத்தகைய தாக்குதல்கள் அதிகரிப்பதற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் தொடர்ந்து ஒரு பிரிவினர், இந்து இயக்க தலைவர்களை தாக்கி வருவதற்கு காரணம், இங்குள்ள அரசியல் கட்சிகள் தான். பிரச்னைக்குரிய குறிப்பிட்ட சில இயக்கங்களை, ஏதாவது ஒரு வகையில் ஆதரிக்கின்றனர். இந்த பிரச்னையில் மாநில அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மாறாக ஆளுங்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுமே, இஸ்லாமிய அமைப்புகளோடு, தேர்தல் உறவு வைத்துக் கொண்டு ஊக்கப்படுத்துகின்றன. அதனால் தான் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.
* இலங்கை தமிழர் பிரச்னையை பிரதானமாக வைத்து செயல்படுகிறீர்கள், தேர்தலில் எதிரொலிக்குமா?
இலங்கை தமிழர் பிரச்னையை, உலகம் முழுவதும் உள்ள தமிழர் பிரச்னையாகவே பார்க்கிறோம். இது, நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும். இதன் காரணமாக தான், காங்கிரஸ் கட்சி தனிமைப் படுத்தப்பட்டு உள்ளது என்பதை, அனைவரும் அறிவார்கள்.
* கடந்த சட்டசபை தேர்தலின் போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'வீரமங்கை' பட்டம் கொடுத்தீர்கள். இருந்தும், அவர்கள் தரப்பில், இந்த தேர்தலுக்காக உங்களை கண்டுகொள்ளவில்லையே?
சட்டசபை தேர்தலுக்கு முன், மதமாற்ற தடை சட்டத்தை தமிழக முதல்வர் கொண்டுவந்த காரணத்தால், அவரை பாராட்டி பட்டம் கொடுத்ததோடு, அவரை பிரதமராக்க வேண்டும் என்று, இ.ம.க., அப்போதே வலியுறுத்தியது. இந்த லோக்சபா தேர்தலில், எங்களை அ.தி.மு.க., கண்டுகொள்ளாதது பற்றி கவலையில்லை. எங்களது கடமையை செய்வோம்.
* இந்து மக்கள் கட்சி, தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக செய்திகள் வந்ததே?
உண்மைதான். அதற்கு காரணம், அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களது கூட்டணியில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர். இந்து அமைப்புகளை சேர்ந்த ஒரு தலைவரைக் கூட எந்த அரசியல் கட்சியும் சந்தித்துபேசவில்லை. அதனால்தான், நாங்கள் 39 தொகுதிகளிலும் போட்டியிட ஆயத்தப்படுத்திக்கொண்டோம்.
* தமிழகத்தில் மூன்றாண்டுகால ஜெ., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எப்படி உள்ளது?
மற்றவர்களுக்கு எப்படியோ; இந்து இயக்கத் தலைவர்களுக்கு திருப்தியாக இல்லை.
* நரேந்திர மோடி என் நண்பர் என்று சொல்லும் கருணாநிதி, மோடி பிரதமர் ஆக ஆதரவளிக்கமாட்டேன் என்றும் சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதியின் நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும். இவர் ஏற்கனவே பா.ஜ., அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள்தானே. தேர்தலுக்கு பின் மோடியை ஆதரிக்க இவர், ஜெயலலிதாவுடன் போட்டி போடுவார் என்பதில் சந்தேகமில்லை.
* உங்கள் கட்சி மூலம் இதுவரை சாதித்தது என்ன?
இருபது ஆண்டுகளாக தமிழகத்தில் ஜாதி, சினிமா, பணபலம் படைத்த மற்ற அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், இந்துக்களுக்காக கட்சியை நடத்தி வருவது சாதனையாகவும், பெருமையாகவும் உள்ளது. தமிழகத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவர்களை தாய்மதத்துக்கு திருப்பியுள்ளோம். கோவை குண்டுவெடிப்பின் போது, இந்துக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தோம். இலங்கை தமிழர் பிரச்னையை வெறும் தமிழர் பிரச்னையாக அணுகிவந்தனர். அதை உலகம் முழுக்க உள்ள தமிழர் பிரச்னை என்பதை தெரிவிக்க, லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த உலக தமிழர் மாநாட்டில் பங்கேற்று, பதிவு செய்தோம். எமது அமைப்பு மற்றும் அறக்கட்டளை வாயிலாக, இந்துக்களுக்கு நிதி மற்றும் நிவாரணம் வழங்கி வருகிறோம். வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் எங்களது பணி தொடரும்.
பயோடேட்டா
பெயர்: அர்ஜுன் சம்பத்
வயது: 49
கட்சி: நிறுவனர், இந்து மக்கள் கட்சி
பிறந்த ஊர்: பொள்ளாச்சி, கோவை மாவட்டம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE