தி.மு.க., தன்னுடைய இருப்பையும், இயல்பையும் இழந்துவிடும்| Nanjil Sambath interview to Dinamalar | Dinamalar

'தி.மு.க., தன்னுடைய இருப்பையும், இயல்பையும் இழந்துவிடும்'

Updated : மார் 16, 2014 | Added : மார் 15, 2014 | கருத்துகள் (15)
Share
எல்லோருக்கும் முன், லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்துக்கும் கிளம்பி விட்டார் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில், பல மூலைகளிலும், அ.தி.மு.க., தரப்பில் பிரசாரம் முழு வேகத்தில் நடக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசியல் நிலைமைகள் குறித்து, அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணைச் செயலரான நாஞ்சில் சம்பத், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:பா.ஜ.,
 'தி.மு.க., தன்னுடைய  இருப்பையும், இயல்பையும் இழந்துவிடும்'

எல்லோருக்கும் முன், லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்துக்கும் கிளம்பி விட்டார் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில், பல மூலைகளிலும், அ.தி.மு.க., தரப்பில் பிரசாரம் முழு வேகத்தில் நடக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசியல் நிலைமைகள் குறித்து, அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணைச் செயலரான நாஞ்சில் சம்பத், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

பா.ஜ., கூட்டணியில் வைகோ. அந்த கூட்டணி எப்படி இருக்கும்?
பா.ஜ., கூட்டணி, தமிழகத்தில் தேறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல, ஆண்டிகளும், போண்டியானவர்களும் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்திருக்கின்றனர். பா.ஜ., கூட்டணி அமைவதிலும், தொகுதி பங்கீடு போன்ற விஷயங்களிலும், இழுபறியான நிலையிலேயே சென்று கொண்டிருக்கிறது என்கிற தகவல்களையெல்லாம் பார்க்கும் போதே, பா.ஜ., கூட்டணி எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை, எல்லோரும் அறிந்து கொள்ளலாம். தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. அதற்குள், பா.ஜ., கூட்டணியில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை எல்லாம் கூட நீங்களும், நானும் பார்க்கத்தான் போகிறோம். பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றிருக்கும், ஒவ்வொருவரின் பின்புலத்தையும் பற்றி நன்றாக யோசித்தால், தானாகவே அவர்களை மக்கள் புறக்கணித்து விடுவர்.

பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க.,வும் இடம் பெற்றிருக்கிறதே...
அதனாலும் தான் சொன்னேன். பா.ஜ., கூட்டணியில் போண்டியானவர்கள் எல்லாம் இணைந்திருக்கின்றனர் என்று. தனித்தனியாக யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு, அவர்கள் எல்லாம் பலம் வாய்ந்தவர்கள் இல்லை. தேர்தல் முடியட்டும், எத்தனை பேர், அரசியலில் இருந்து காணாமல் போகின்றனர் என்பது, தெரிந்துவிடும். அடுத்தவர் ஓட்டில், தன்னை பிரதானமானவராக காட்டிக் கொள்ள முயன்றவர்கள், முயலுகிறவர்களின் முகவரி கண்டிப்பாக இந்த தேர்தலோடு தொலைந்து போகும். எப்படியோ தொலையட்டும், சமூகத்துக்கு வேண்டாத சக்திகள்.

தி.மு.க.,வை காங்கிரஸ் ஒதுக்கியதா? காங்கிரசை தி.மு.க., ஒதுக்கியதா?
இரண்டு தீய சக்திகள், நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் வரை கொள்ளையடித்துவிட்டன. தேர்தல் நெருங்குகிறது என்றதும், 'அவன்தான் திருடன்' என்று சொல்லி, தன்னை புனித ஆத்மாவாக காட்டிக் கொள்ள தி.மு.க., முயன்று, காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்டு விட்டது. அதனால், அவர்கள் ஒரே நாளில் சுத்த சுயம்பிரகாசமாகி விட முடியாது. ஊழலின் மொத்த உருவமாக இருந்த தி.மு.க., இப்போது, காங்கிரசில் இருந்து விலகி விட்டால், தங்களுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்பது போல காட்டிவிடலாம் என்று, நினைத்துத்தான், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியது. குற்றம் செய்யவில்லை என்றாலும், குற்றத்துக்கு துணை போனவனும் குற்றவாளிதானே. அந்த வகையில், இரண்டு தரப்பும் குற்றவாளிகள்தான்.இதில், தி.மு.க., காங்கிரசை ஒதுக்கினால் என்ன, காங்கிரஸ் தி.மு.க.,வை ஒதுக்கினால் என்ன, இரண்டு திருடர்கள் தேர்தலுக்காக பிரிகின்றனர், மக்களை ஏமாற்ற. தி.மு.க.,வைப் பொறுத்தவரையில் இப்போது கட்சியில் எல்லாமே மு.க.ஸ்டாலின்தான். அவர்தான் பவர் சென்டராக இருக்கிறார். கட்சியில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் சொல்வதுதான் நீதி. இப்படியெல்லாம் ஆனபிறகு, அவர்தானே கூட்டணியை முடிவு செய்ய முடியும். தி.மு.க.,வின் ஹிட்லராக ஸ்டாலின் உருவெடுத்துவிட்டார். அதனால், அவர் நினைத்ததுதான் இனி அங்கே நிறைவேறும்.காங்கிரசோடு யாரெல்லாம் சேருகின்றனரோ, அவர்களுக்கு கட்டாயம் கேடு காத்திருக்கிறது என்பது எல்லோருக்குமே அப்பட்டமாக தெரிந்து விட்டது. இனியும் அவர்களோடு சேர்ந்தால், சேருகிறவர்களை மக்கள் காணாமல் செய்து விடுவர். அதை ஸ்டாலினும் உணர்ந்து விட்டார். அதனால்தான் அவர், காங்கிரசே வேண்டாம் என, ஒதுங்க முடிவெடுத்திருக்கிறார்.


இப்போது இருப்பது கருணாநிதி தி.மு.க.,வா... ஸ்டாலின் தி.மு.க.,வா?

இதில் என்ன சந்தேகம். கருணாநிதிக்கு அங்கே சுத்தமாக செல்வாக்கு இல்லை. அங்கே, வாரிசு அரசியல் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. மொத்த கட்சியையும் இப்போது ஸ்டாலின் கபளீகரம் செய்து விட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் தி.மு.க., தமிழகத்தில் தன்னுடைய இருப்பையும், இயல்பையும் முழுமையாக இழந்துவிடும். விரைவிலேயே, தி.மு.க.,வினர் அவ்வளவு பேரும் தங்களுக்கு பாதுகாப்பான இடம்தேடி ஓடிவிடுவர். தங்களுக்கு பாதுகாப்பான இடமாக அ.தி.மு.க., இருக்கும் என, நினைப்பவர்கள் பலரும், எங்கள் பக்கம் வந்துவிடுவர்.
உங்களுக்குப் பிறகு, அ.தி.மு.க.,வில் இணைந்த பிரபலம் என்றால், அது பண்ருட்டி ராமச்சந்திரன் தான்.

தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அ.தி.மு.க.,வில் யாரும் இணையவில்லையே?
நீங்கள் சொல்லவரும் பிரபலம் யார் என்று புரியவில்லை. அ.தி.மு.க.,வைப் பொறுத்த வரையில், ஒரே பிரபலம் அது முதல்வர் மட்டும்தான். அப்படி இருக்கும்போது, எந்த பிரபலமும் அ.தி.மு.க.,வுக்குத் தேவையில்லை. முதல்வரைத் தவிர, இங்கே எல்லோருமே தொண்டர்கள் தான்.

கன்னியாகுமரியில் முதல்வர் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தில், முஸ்லிம் இட ஒதுக்கீடு குறித்து பேசினார். கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் தானே பிரதானமாக இருக்கின்றனர்?

சிறுபான்மையின மக்களுக்கு, பாதுகாப்பு அரணாக முதல்வர்தான் இருந்து வருகிறார். அவருக்கு எங்கே, எப்படி பேச வேண்டும் என்பது குறித்தெல்லாம் யாரும் சொல்லித்தர தேவையில்லை. சிறுபான்மையின மக்கள் எல்லோரும் ஓரினம்தான். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அ.தி.மு.க., ஆட்சியில்தான், கிறிஸ்தவர்கள் புனிதப் பயணமாக ஜெருசலேம் சென்று வருவதற்கு அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினத்தவர்களுக்கு செய்தவைகளை, இந்த இடத்தில் வைத்துதான் பட்டியலிட வேண்டும், பேச வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லாத வாதம்.

தி.மு.க., வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் குடும்பத்தினரே, தயாரித்திருப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறதே?
முழுக்க முழுக்க ஸ்டாலினும், குடும்பத்தினரும் இணைந்து தயாரித்த வேட்பாளர் பட்டியல் அது என்பதை, தி.மு.க.,வினரே தங்கள் ஆதங்கங்கள் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஏன், அந்த பட்டியல் எப்படி ரெடியானது என்பதை, ஸ்டாலினின் சகோதரர் அழகிரியே, வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். பணம் வாங்கிக் கொண்டு 'சீட்' கொடுத்திருக்கின்றனர் என்பதை, வேறு யார் வந்து நிரூபிக்க முடியும். வேட்பாளர் பட்டியலால் ஏற்பட்ட அதிருப்தியில் பலரும் குமுறிக் கொண்டிருக்கின்றனர். அந்த குமுறல்கள் விரைவில் வெடிக்கலாம். அப்போது, தி.மு.க.,வில் பெரிய பிளவு இருக்கும்.

தி.மு.க.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் மு.க. அழகிரி, பிரதமர் மன்மோகனை சந்தித்திருக்கிறாரே?
காங்கிரஸ் கட்சி புதைந்து கொண்டிருக்கிறது. அந்த புதை குழிக்குள், இப்போது அழகிரியும் விழுந்து, புதைந்து போகப் போகிறார். தி.மு.க.,விலேயே ஒன்றும் செய்ய முடியாதவர், பேசா மனிதர் மன்மோகன் சிங்கை மட்டும் சந்தித்துப் பேசி, என்ன செய்துவிடப் போகிறார்.

அழகிரி, காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக செய்திகள் வருகிறதே?

தி.மு.க.,வின் வண்டவாளங்களை சொல்ல, காங்கிரஸ் மேடை. மொத்தத்தில், எங்கள் வேலை எளிதாகிறது. திருட்டுக்கு உடந்தையாக இருந்தவர்களும், கூடவே இருந்து திருட்டைப் பார்த்தவர்களும்தான், திருட்டு குறித்து தெளிவாகச் சொல்ல முடியும். மக்களுக்கு, நன்றாகப் பொழுது போகும்னு சொல்லுங்க.

கம்யூனிஸ்ட்களை கடைசி வரையில் காக்க வைத்துவிட்டு, 'நண்பர்களாக சேர்ந்தோம். நண்பர்களாக பிரிவோம்' என, சொல்லி அனுப்பியது சரியா?
அந்த விஷயத்தில், என்ன நடந்தது என்பதெல்லாம் எனக்குத் தெளிவாக தெரியாது. அதனால், அது குறித்து நான் பேசுவது சரியாக இருக்காது.

தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.,வோடு கைகோர்க்கும் சூழ்நிலையில், கம்யூனிஸ்ட்கள் இடைஞ்சலாக இருப்பார்கள் என்பதாலேயே முன்கூட்டியே திட்டமிட்டு, அவர்களை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டீர்களா? அல்லது அ.தி.மு.க., மேடையில் இருந்து கொண்டு, பா.ஜ.,வை கம்யூனிஸ்ட்கள் விமர்சித்தால், அது நெருடலாக இருக்கும் என்பதாலும், கம்யூனிஸ்ட்களை கழற்றிவிட்டீர்களா?
அப்படியெல்லாம், திட்டமிட்டு செய்ய வேண்டிய எந்த அவசியமும் அ.தி.மு.க.,வுக்கு இல்லை. இருந்தாலும், எனக்கு முழுமையாகத் தெரியாத விஷயங்கள் குறித்து நான் பேசுவதில்லை.

வைகோவிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்?
வைகோவிடம் நிறைய விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக பேச்சு, கடின உழைப்பு, விவாதத் திறமை, இதெல்லாம் நான் அவரிடம் வியந்து பார்த்தவை, ரசித்தவை. ஆனால், அவர் நான் இயக்கத்தில் இருந்து வெளியேறும் அளவுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தார். என் பயணத்தின் முயற்சிகளை முடக்கினார். என் பாதையில் முள்ளை வீசினார். நான் உயிரோடு இருப்பதை அவர் விரும்பவில்லை என்கிற அளவுக்கு வெறுப்பையும், கடுப்பையும் ஏற்படுத்தினார். அதன்பிறகுதான், என்னுடைய தற்காப்புக்காக பேசி வந்த கொள்கைகளையெல்லாம், அப்படியே போட்டுவிட்டு, சிபி சக்கரவர்த்தியாக இருக்கும் முதல்வரைத் தேடிப் போனேன். உயிர் பிச்சைக் கொடுத்து என்னை வாழ வைத்திருக்கிறார் மகராசி.

அ.தி.மு.க., ஆட்சியில் உங்கள் மீது போடப்பட்ட வழக்குகளின் நிலை என்ன?
அந்த வழக்குகள் அனைத்துமே, பெருந்தன்மையோடு வாபஸ் பெறப்பட்டுவிட்டன.

ஆரம்பத்தில், பிரதமர் கோஷத்தை உயர்த்திப் பிடித்த ஜெயலலிதா, இப்போது அ.தி.மு.க., தீர்மானிக்கும் ஆட்சி மத்தியில் அமையும் என்று மட்டும் பேசி வருகிறாரே?
இதிலிருந்து அவருடைய பெருந்தன்மை, நம்பகத்தன்மை, நாகரிகத்தை, பண்பாட்டை தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு மத்திய சென்னை தொகுதியை ஒதுக்காதது ஏன்?
நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என, எண்ணியதே கிடையாது. அப்படிப்பட்ட பொறுப்புகளை நான் சுமக்கவும் விரும்பியதில்லை. அதனால்தான், நான் எப்போதும், எங்கும் 'சீட்' கேட்டு நின்றது கிடையாது. அதனால் நான், எப்போதும் எந்தத் தொகுதிக்கும் விருப்ப மனு போட்டது கிடையாது. என்னுடைய இயல்புக்கு தேர்தல் அரசியல் ஒத்து வராது. அதனால், நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அப்படியிருக்கையில், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட மட்டும், என்ன ஈர்ப்பு வந்துவிடப் போகிறது. முதல்வரின் அனுசரணையில் வாழ்வதே, பெரிய பேறாக நினைக்கும்போது, இந்த எம்.பி., பதவியெல்லாம் எனக்கு ரொம்ப சாதாரணம்.

கிருஷ்ணசாமி ஓட்டுகளை சரிகட்டவே, ஜான் பாண்டியனை உங்கள் பக்கம் திருப்பியிருக்கிறீர்களா?
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், முதல்வர் மீது நம்பிக்கையோடும், நன்றியுணர்வோடும் இருக்கின்றனர். அந்த வகையில், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஜான் பாண்டியன் நன்றியுணர்வில்தான் முதல்வரைத் தேடி வந்தார். அதற்காக, கிருஷ்ணசாமியின் ஓட்டுகளை ஈடுகட்ட, ஜான் பாண்டியனை எங்கள் பக்கம் திருப்பினோம், என்றெல்லாம் புதுப் புது காரணங்களையும், அர்த்தங்களையும் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. எந்த கிருஷ்ணசாமியும் முதல்வருக்கு முன், சாதாரணமானவர்தான்.

இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாக சொல்கின்றனரே?
அப்படி எந்த அலையும், தமிழகத்தில் வீசவில்லை. எங்களுக்கு தெரிந்த வரையில், தமிழகம் முழுவதும் இலைக்கான அலைதான் வீசுவதை உணர்கிறோம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X