பிரதமர் போட்டியில் இருக்கும் குஜராத் முதல்வர் மோடிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் அவர்களின் ஆட்சி குறித்து, மதிப்பெண் கொடுக்க கள ஆய்வில் இறங்கி இருக்கிறார், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால். அவரும், பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக பேசப்படுகிறது. மற்ற அரசியல் தலைவர்களை குற்றம்சாட்ட புறப்பட்டு இருக்கும் இவரைப் பற்றி, அனேக மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்திவரும் இவரைப் பற்றி, மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது, ஜனநாயகத்தின் அடிப்படை.
அந்த வகையில், அவர் சில கேள்விகளுக்கு பதில் அளித்தால், அவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம். அந்த கேள்விகள் வருமாறு:
1 அரசு பணியில் இருந்து கொண்டே 'சம்பூர்ண பரிவர்தன்' என்ற, என்ஜி.ஓ.,வை எப்போது துவக்கினீர்கள்? அதன், பதிவு எண் மற்றும் பிற விவரங்களை கூற முடியுமா?
2 சம்பூர்ண பரிவர்தனில் இருந்து இன்னும் மொரு என்.ஜி.ஓ.,வாக, 'பரிவர்தன்' என்ற, பெயரில் எப்போது துவக்கினீர்கள்? 2002ல், போர்ட் அறக்கட்டளை அளித்த 85,000 டாலர்களுக்காக (46 லட்சம் ரூபாய்), பல, என்.ஜி.ஓ.,க்கள் துவக்கப்பட்டதாக கூறப்படுகிறதே...
3 'பரிவர்தன்' என்ற அமைப்பு, ஒரு சங்கமாகவோ, ஒரு அறக்கட்டளை யாகவோ, ஒரு நிறுவனமாகவோ, எந்த சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை. அது ஒரு, மக்கள் இயக்கம். வருமான வரியை பொறுத்தவரை, அது 'ஒரு சில நபர்களின் சங்கமம்' என்று தொடர்ந்து கூறி வந்த நீங்கள், 2002-,ல் பல ஊடகங்களிலும் கொடுத்த விளம்பரங்களில், 'பரிவர்தன், வருமான வரிச் சட்டம் 12ஏல் பதிவு செய்யப்பட்ட அமைப்பு. அதற்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு, 80ஜி விதியின் கீழ் வரிவிலக்கு உண்டு' என்று மாற்றிக் கூறியது, மக்களை ஏமாற்றுவது ஆகாதா?
4 2002-ல் உலக வங்கி கொடுத்த நிதியை, பதிவு செய்யப் படாத அமைப்பான 'பரிவர்தன்' மூலமாக சட்டப் படி பெற முடியாது. வேறு எந்த அமைப்பின் மூலம், உலக வங்கி நிதியை பெற்றீர்கள் ?
5 'ரமோன் மகசேசே' விருது வழங்கிய ரமோன் மகசேசே அறக்கட்டளை, உங்கள் பற்றிய குறிப்புகளில், உங்களைப் பரிந்துரைத்தவர்களாக, அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வை குறிப்பிடுவது ஏன்?
6 வெளிப்படை தன்மை பற்றி பேசும் நீங்கள், ஏன் உங்களின், என்.ஜி.ஓ., 'கபீர்' மற்றும் 'பரிவர்தன்' ஆகியவற்றின், 'வெப் சைட்'களை மூடி விட்டீர்கள்?
7 'டில்லியில், நீங்கள், ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாக அரசு பணியில் இருந்த போது, 'உங்களை, டில்லியில் இருந்து இட மாற்றம் செய்யக் கூடாது' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் அனுப்பினார்' என, திக் விஜய் சிங் கூறியதை நீங்கள் மறுக்கவில்லையே? சோனியாவுக்கு உங்கள் மேல் ஏன் இந்த அக்கறை என்ற, கேள்வி எழுகிறதே?
8 உங்களை ஆதரிக்கும், அருணா ராய், உங்கள் கட்சியில் இருக்கும் யோகேந்திர யாதவ், கோபால் ராய் போன்று அனைவரும் சோனியாவின் தேசிய ஆலோசனை கவுன்சிலில், உறுப்பினர்களாக இருப்பதும், இருந்ததும், உங்களின் முந்தைய காங்கிரஸ் எதிர்ப்பே போலியானது தானா என்ற, சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே?
9 'ஊடகங்களுக்கு, 1,400 கோடி ரூபாய் அளவிற்கு கொடுத்து அரசியல் சார்பு செய்திகள் வெளியிடப்படுகின்றன' என, வழக்கம் போல, பிற கட்சிகளை குற்றம் சாட்டினீர்கள். ஆனால், நீங்கள், நேரடியாக, 'ஆஜ் தக்' சேனலை சேர்ந்த புண்ய பிரசுன் பாஜ்பாயிடம், பேட்டியில், என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும்; எந்தெந்த கேள்விகள் பெரும்பான்மை ஓட்டுகள் கொண்ட மக்களுக்கு பிடித்த மானதாக இருக்கும்; எப்படி பதில் சொன்னால் ஓட்டுகள் கிடைக்கும்; எந்தெந்த பிரச்னை களைப் பற்றி பேசவே கூடாது என்றெல்லாம் திட்டம் போடும் வீடியோ வெளியாகி உங்களின் நேர்மையற்ற தன்மையை, அம்பலப்படுத்தி உள்ளதே?
10 டில்லி முதல்வருக்காக என்று, அரசால் கொடுக்கப்பட்ட வீட்டில், டில்லி முதல்வர் பதவியை தூக்கி எறிந்த பின்னரும், வீட்டை மட்டும், காலி செய்யாமல் இருப்பது என்ன மாதிரியான நேர்மை? இதை தானே பல மந்திரிகளும் காலம் காலமாக, அழிச்சாட்டியமாக செய்து கொண்டிருக்கின்றனர்!
கேள்விகள் தொடரும்...
பானு கோம்ஸ், சமூக ஆர்வலர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE