தமிழகத்தில், பிரதான திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சியில் அமர்வது, அவற்றின் மீது மக்கள் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயத்தினால் என, கூற முடியாது. மாறாக, ஒரு கட்சியின் ஐந்தாண்டு கூத்துகளைக் கண்டு, மறு கட்சி அவ்வாறு செய்யாது என்ற விரக்தி கலந்த எதிர்பார்ப்பில் தான், அனேகமாக, அவை ஆட்சியில் அமர்த்தப்படுகின்றன.
எம்.ஜி.ஆர்., காலத்திற்கு பின், தி.முக.,வாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க.,வாக இருந்தாலும் சரி, ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் மக்களிடம் இருந்த நம்பிக்கையை தொலைத்துவிடும். அதற்காக காத்திருக்கும் எதிரணியில் உள்ள திராவிட கட்சி, போராட்டங்கள் உள்ளிட்டவை வாயிலாக, அதிலிருந்து தனது அரசியலை மீண்டும் தொடங்கும். இப்படியாக, ஆட்சி காலம் முடிவதற்குள், உருவாகி இருக்கும் அதிருப்தி எதிரணியில் இருக்கும் திராவிட கட்சிக்கு ஆதரவாகவும் மாறி இருக்கும். கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மீதான அதிருப்தி, வழக்கத்தைவிட அதிகமாகி, விம்மி வெடித்ததால் தான், அ.தி.மு.க., கூட்டணியால் அமோக வெற்றிபெற முடிந்தது. ஆனால், 2006-11 தி.மு.க., கூட்டணி ஆட்சி காலத்தில், அ.தி.மு.க., எந்த விதமான பெரிய போராட்டங்களையோ, மாநாடுகளையோ நடத்தவில்லை. தி.மு.க., ஆட்சி அதுவாகவே அதிருப்தி அலையை ஏற்படுத்திக் கொண்டது. அந்த கால கட்டத்தில் அ.தி.மு.க., செய்ததை போலவே, கடந்த மூன்று ஆண்டுகளாக, தி.மு.க., தரப்பில் எந்த பெரிய போராட்டங்களும் நடத்தப்படவில்லை. ஆட்சிக்கு எதிரான கருத்துகள் வலுவாக உருவாக்கப்படவில்லை. அதனால், நாடு முழுவதும் தேர்தல் பிரச்னைகள் தலைவிரித்து ஆடும் இந்த வேளையில், தமிழகத்தில் மட்டும் 'தேர்தல் பிரச்னை' என்று, அரசியல் கட்சிகள் முன்வைப்பதற்கு எதுவுமே இல்லை. அதனால்தானோ என்னவோ, 'அம்மா' பெயர், இரட்டை இலை சின்னம், சின்னத்தை மறைப்பது என்பது போன்ற சில்லறை விஷயங்கள் தேர்தல் பிரச்னையாக முன்வைக்கப்படுகின்றன. அதே போல், தமிழகத்தில், காங்கிரஸ் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டதால், மத்தியில் ஆட்சி செய்த கட்சி மற்றும் அதனுடைய மாநில கூட்டணி கட்சிகள் மீதான அலுப்பை தேர்தல் பிரச்னையாக முன்வைக்க முடியாத விஷயமாக உள்ளது.
தற்போதைய நிலையில்,
* 2011 சட்டசபை தேர்தலில் இருந்த அதே அளவில், அதே வேகத்தில் 'தி.மு.க., எதிர்ப்பு' அலை தற்போது இல்லை
* ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், "மூன்று மாதங்களில் மின்சார தட்டுப்பாட்டை இல்லாது ஆக்குவேன்,” என்று சூளுரைத்தார். ஆனால், இன்று வரை தீர்வு காணப்படவில்லை. இதில் மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும், அது, அரசிற்கு எதிரான வாக்குகளாக மாறிவிடுமா என்பது, சந்தேகம் தான்
* இந்த முறை, புதிய தலைமுறை வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க உள்ளனர். அவர்கள் அனைவரும் திராவிட கட்சிகளுக்கு எதிராக வாக்களித்தாலும், திராவிட கட்சிகளுக்கு பெரிதாக பாதகம் இருக்காது. ஏனெனில் தற்போது, தமிழகத்தில் பலமுனை போட்டி நடக்கிறது. இவர்கள் அனைவருமே, திராவிட கட்சிகளுக்கு எதிராக ஏதாவது ஒரே அணிக்கு வாக்களித்தால் மட்டுமே திராவிட கட்சிகளின் நிலை கவலைக்கிடமாக மாறும்
* 'மோடி ஆதரவு வாக்குகள்' உருவாகி இருந்தாலும், பழைய மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களில், இன்னும் தங்கள் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்காத வாக்காளர்களில் ஒரு பகுதியினர் ஏதாவது காரணங்களுக்காக, ஆம் ஆத்மி கட்சிக்கும் வாக்களிக்க வாய்ப்பு உள்ளது அல்லது 'நோட்டா'வை பயன்படுத்தலாம்
* மொத்தத்தில், அரசியல் சூழலில் அதிரடி மாற்றங்கள் ஏதும் ஏற்படாத நிலையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணியை ஒட்டியே தேர்தலின் போக்கு இருக்கும் இது போன்ற 'எதிர்ப்பு அலை' இல்லாத தேர்தலில், ஜாதி உட்பட்ட அடிப்படை அரசியலே பெரும்பாலும் தேர்தல் வெற்றி, -தோல்வியை முடிவு செய்யும் வல்லமை பெற்றது. அத்தகைய முடிவுகளும் தொகுதிவாரியாக அமையுமே தவிர, மாநிலம் முழுமைக்கும் பொருந்தாது.
என். சத்தியமூர்த்தி, இயக்குனர், அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன், சென்னை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE