'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பழமொழியை, மீண்டும் மீண்டும் குஜராத் நிரூபித்து வருகிறது. தேர்தலை வைத்து நமது அரசியல்வாதிகள் பணம் பண்ணும் கலையை கற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், குஜராத் மாநிலத்தில் இருப்போர், தங்கள் மாநிலத்திற்கு வெளிநாட்டவர்களை ஈர்ப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர்.
குஜராத், ஆமதாபாத்தில் இயங்கி வரும் அக் ஷர் டிராவல்ஸ் நிறுவனம், இந்த முறை, விரிவான அளவில், தேர்தல் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. கடந்த, 2012 சட்டசபை தேர்தலில், இதுபோல் சிறிய அளவில் ஏற்பாடு செய்த அந்த நிறுவனம் தற்போது நாட்டின் பெரிய கட்சிகளுடனும், வெளிநாட்டு சுற்றுலா நிறுவனங்களுடனும் பேசி, வெளிநாட்டவரை ஈர்த்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தற்போதைய திட்டப்படி, ஒரு வெளிநாட்டவருக்கு 1,200 முதல் 1,800 அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, டில்லி - ஆக்ரா - ஜெய்ப்பூர் பயணத் திட்டத்தின் கீழ் ஒரு வெளிநாட்டவர் பங்கேற்றால், அந்த நகரங்களில் நடக்கும், தேர்தல் தொடர்பான அனைத்து கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றில் அவர் கலந்து கொள்ளலாம். மாலை நேரங்களில், கட்சிகளின் பெரிய தலைவர்களுடன் கலந்துரையாடல் செய்யலாம்.
டில்லி - பிகானீர் - ஜெய்சல்மார் - ஜோத்பூர்; ஆமதாபாத் - ராஜ்கோட் - கோண்டால்; துவாரகா - போர்பந்தர் - சாசன் - கிர்; லக்னோ - அயோத்தி - வாரணாசி -; டில்லி - சிம்லா - மணாலி - சண்டிகர்; மதுரா - ஆக்ரா - ஹரித்வார் - ரிஷிகேஷ் - டில்லி; கொச்சி - மூணாறு - தேக்கடி - கவுகாத்தி - காசிரங்கா - ஷில்லாங் என, மற்ற இடங்களுக்கும், அந்த நிறுவனம் தேர்தல் மற்றும் இன்பச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. கடந்த, 2012 சட்டசபை தேர்தலில், 90 வெளிநாட்டவர்களை அக் ஷர் டிராவல்ஸ் நிறுவனம், தேர்தல் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தது. தற்போது, லோக்சபா தேர்தலில், 2,000 வெளிநாட்டவர்கள், சுற்றுலாவில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனராம்.
இதுகுறித்து, அக் ஷர் டிராவல்ஸ் நிறுவன தலைவர் மணீஷ் சர்மா கூறுகையில், ''இந்த முறை, எகிப்து உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து தான் அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஜனநாயக முறையில் தேர்தல் என்பது அவர்களுக்கு புதிது என்பதால், நமது தேர்தலை நேரில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றனர்,'' என்றார். மேலும் அவர்,'மிகப் பெரிய பொதுக்கூட்டங்கள், பேனர்கள், தென் மாநில தலைவர்களின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் உள்ளிட்டவை, வெளிநாட்டவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தருகின்றன. அனேகமாக பல வெளிநாட்டவர்களுக்கு இது வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்க கூடியதாக இருக்கும்,'' என, தெரிவித்தார். தேர்தல் சுற்றுலாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, சுற்றுலாவை, தென் மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த, அக் ஷர் டிராவல்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்டு உடன் இணைந்து -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE