'கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய, இரண்டு தொகுதிகளை ஒதுக்காவிட்டால், பா.ஜ.,வுடனான உறவை, மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்' என, இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.,) எச்சரித்துள்ளது.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் உள்ள, இந்திய ஜனநாயக கட்சியான - ஐ.கே.கே.,யின் மாநில செயலர், லட்சுமணன் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி தொகுதி, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர், பாரிவேந்தரின் சொந்த தொகுதி. அமோக வெற்றி வாய்ப்புள்ள தொகுதி. கள்ளக்குறிச்சியை எங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என, ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பா.ஜ., தலைமைக்கு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், பா.ஜ.,வை, யாரும் கண்டு கொள்ளாத நேரத்தில், நாங்கள் தான் கைகோர்த்தோம். வண்டலூரில், மோடி கலந்து கொண்ட மாபெரும் கூட்டத்தை, இந்திய ஜனநாயக கட்சி, பா.ஜ., பெயரில் நடத்தி காட்டியதை, மாநிலத் தலைவர், பொன். ராதாகிருஷ்ணன் மறந்திருக்க மாட்டார். ஆரம்பத்தில், ஏழு தொகுதி கேட்டோம். பின், கூட்டணி கட்சிகளை மதித்து, கடைசியில், இரண்டு தொகுதியான கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஒதுக்கப்பட வேண்டும், என்றோம். கள்ளக்குறிச்சி, பெரம்பலூரை, பா.ஜ., தலைமை ஒதுக்காவிட்டால், பா.ஜ.,வுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும். இது தொடர்பாக, திருச்சியில் வரும், 17ம் தேதி இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட, மாநில நிர்வாகிகள் அவசரக்கூட்டம் நடக்கிறது. கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு நிறுவனத் தலைவர் இறுதி முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், புதுச்சேரியின், ஒரு தொகுதிக்கும், அடுத்த மாதம், 24ல் தேர்தல் நடக்கிறது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE