சென்னை: ''தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதி களில், 18 தொகுதிகளில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும், தலா, ஒன்பது தொகுதிகளில், வேட்பாளர்களை நிறுத்துகின்றன,'' என, அக்கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேற்றப்பட்டதும், இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது என, அறிவித்தன. தமிழகத்தில், கம்யூனிஸ்ட்கள் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிடும், முதல் தேர்தல் இது என்பதால், கூடுதல் இடங்களில் போட்டியிடுவார்கள் என, எதிர்பார்க்கப்பட்டது. இரு கட்சிகளும், அவரவர் போட்டியிடும் தொகுதிகள் பற்றி ஆலோசித்தன.
ஆலோசனையின் முடிவில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர், தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளில், 18 இடங்களில் போட்டியிடுகிறோம். இவற்றில், தென்காசி (தனி), நாகப்பட்டினம் (தனி), புதுச்சேரி, திருப்பூர், சிவகங்கை, தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் (தனி), தூத்துக்குடி ஆகிய, ஒன்பது தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. கோவை, மதுரை, கன்னியாகுமரி, வடசென்னை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், விழுப்புரம் (தனி) மற்றும் தஞ்சாவூர் என, ஒன்பது தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. நாங்கள் போட்டி யிடாத தொகுதிகளில், அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் தி.மு.க., அணிகளுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம். இக்கூட்டணியினர் அல்லாமல், வேறு கட்சியினர் எங்கள் ஆதரவை கேட்டால், அதுகுறித்து ஆலோசிப்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 17ம் தேதியும், இந்திய கம்யூனிஸ்ட், 16ம் தேதியும், வேட்பாளர்களை அறிவிக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர். தி.மு.க.,வோடு கூட்டணி சேராமல் இருப்பதற்கு, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை, முக்கிய காரணமாக கூறிய கம்யூ னிஸ்ட்கள், அக்குற்றச்சாட்டுக்கு ஆளான, மத்திய முன்னாள் அமைச்சர்கள், ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளான, நீலகிரி, மத்திய சென்னை தொகுதிகளில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE