பா.ஜ., கூட்டணியில், ஈரோடு லோக்சபா தொகுதி, ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டு, தற்போதைய, எம்.பி., கணேசமூர்த்தி நிறுத்தப்பட்டால், பலமில்லா கூட்டணி மற்றும் கணேசமூர்த்தி, எம்.பி.,யின் செயல்பாடு காரணமாக, ம.தி.மு.க.,வுக்கு வெற்றி, எட்டாக்கனியாகும் என்ற நிலை, அங்கு காணப்படுகிறது.
கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், ஜெ., தலைமையிலான, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த, ம.தி.மு.க.,வுக்கு, ஈரோடு லோக்சபா தொகுதி வழங்கப்பட்டு, கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். அப்போது, இலங்கையில் நடந்த உள்நாட்டு போரால், காங்கிரஸ் மற்றும் தி.மு.க., மீது அதிருப்தி இருந்தது. அது போல், ஈரோட்டில், ம.தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட்ட, இளங்கோவன் மீது இருந்த அதிருப்தியால், ம.தி.மு.க., வேட்பாளர், கணேசமூர்த்தி, 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், தற்போது, அ.தி.மு.க., தனித்து நிற்பதால், அறிமுகம் இல்லாத, செல்வகுமார் சின்னையனை களத்தில் இறக்கி உள்ளது.
வெற்றி வாய்ப்பு:
ஈரோடு கிழக்கு தொகுதி (தே.மு.தி.க.,) தவிர, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம், குமாரபாளையம் ஆகிய தொகுதிகளும், 95 சதவீத உள்ளாட்சி அமைப்புகளும், அ.தி.மு.க., வசம் உள்ளன. எனவே, அ.தி.மு.க.,வுக்கு வெற்றிக்கான வாய்ப்பு, இங்கு அதிகம் உள்ளது. தவிர, தி.மு.க., வேட்பாளர், பவித்ரவள்ளி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ராஜா, முத்துசாமி, வெள்ளகோவில் சாமிநாதன் ஆகியோருக்குள் நிலவும் கோஷ்டி பூசலால், பவித்ரவள்ளி கணிசமான ஓட்டு பெற முடியாத நிலை உள்ளது. அதே நேரம், பா.ஜ., கூட்டணியில், பா.ஜ.,- - ம.தி.மு.க.,- - பா.ம.க., ஆகிய கட்சிகளுக்கு இத்தொகுதியில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே ஓட்டு வங்கி உள்ளது. ஈஸ்வரன் தலைமையிலான, 'கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி'க்கு, அந்த, ஜாதிரீதியான ஓட்டு உள்ளது. ஆனால், கொங்கு கட்சிகள், ஈஸ்வரன், பெஸ்ட் ராமசாமி, நாகராஜ் ஆகியோர் தலைமையில், மூன்றாக பிரிந்து கிடப்பதும், தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களும், அதே ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதாலும், இந்த ஜாதியை சேர்ந்த, ஓட்டும் முழுமையாக பிரியும்.
'கெயில்' காஸ் பைப் லைன்:
தவிர, தற்போதைய, எம்.பி., கணேசமூர்த்தி, மத்திய அரசின் மூலம், சொல்லிக்கொள்ளும் வகையில், எந்தவொரு திட்டத்தையும், ஈரோட்டுக்கு கொண்டு வரவில்லை. 'கெயில்' காஸ் பைப் லைன் பதிக்கும் பிரச்னையில், விவசாயிகளுடன் இருந்தார் என்றும், மஞ்சளுக்கு விலை கிடைக்க போராடினார் என்றும், அவருக்கு ஆதரவாக கூறினாலும், அதில், பிற கட்சியினர் பங்களிப்பும் உள்ளது. மேலும், ஈரோட்டில், 80 அடி சாலை பிரச்னையில், நில ஆக்கிரமிப்பு, கீழ்பவானி பாசன வாய்க்காலில், கான்கிரீட் தளம் அமைப்பதற்கான, விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்காதது போன்ற, பல அதிருப்திகள், கணேசமூர்த்தி மீது உள்ளன.
மிகக்குறைந்த ஓட்டுகளே:
எனவே, பா.ஜ., கூட்டணியில் உள்ளவர்கள் உழைத்தாலும், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு அடுத்து, மிகக்குறைந்த ஓட்டுகளே பெறும் இடத்தில், ம.தி.மு.க., இருக்கும் என்பது நிதர்சனம். தமிழகத்தில், ஈரோடு உட்பட, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஏப்ரல், 24ல் தேர்தல் நடக்க உள்ளது. ம.தி.மு.க.,வின் பொதுச் செயலராக, வைகோ உள்ளார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE