''விஜயகாந்த் தனித்து போகும் முடிவில் செயல்பட்டுள்ளார். கூட்டணி தர்மத்தை மீறி அவர், வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளார்,'' என, ஐ.ஜே.கே., தலைவர் பச்சமுத்து குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: பல மாதங்களாக விஜயகாந்திடம் பேச்சு என, அறிவித்து நீண்ட காலத்தை விரயமாக்கி விட்டனர். அவருக்காக, மற்ற கட்சிகள் காத்திருந்தன. தொகுதிகளையும் விட்டுக் கொடுத்தனர். ஆனால், ஒப்புக் கொண்டபடி அவர் நடந்துகொள்வில்லை. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் இரு தொகுதிகளை, ஐ.ஜே.கே., கேட்டது. கள்ளக்குறிச்சியை தே.மு.தி.க., வேண்டும் என்றதால், அதை விட்டுக் கொடுத்துவிட்டு, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட நாங்கள் ஒப்புக்கொண்டோம். இப்போது, பெரம்பலூர் தொகுதியில், அம்மாவட்டத்தின் செயலரை களமிறக்க, தே.மு.தி.க., முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் வியாழக்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில், '40 தொகுதியிலும் போட்டியிட தயாராகுங்கள்' என, விஜயகாந்த் கூறியுள்ளார். எனவே, அவர் தனியாகப் போகும் முடிவை எடுத்துவிட்டார். கூட்டணியில், பெரியண்ணன் மனப்பான்மையில் அவர் செயல்படுகிறார்.
கோவை, சேலம், கிருஷ்ணகிரி தொகுதிகளில், பா.ஜ., போட்டியிட முடிவு செய்தது. ஆனால், அந்தத் தொகுதிகளையும் எங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதோடு, பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளையும் கேட்டு, கூட்டணியில் சமரசம் ஏற்படாமல், சீர்குலைக்கும் வகையில், விஜயகாந்த் பிடிவாதமாக இருக்கிறார். கூட்டணிக்கு வர விரும்பும் கட்சிகள், இந்த தேதிக்குள் வர முடிவு செய்து, உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல், நாங்கள் கூட்டணியை முடிவு செய்துவிடுவோம் என, பா.ஜ., திட்டவட்டமாக செயல்பட்டிருந்தால், இந்தப் பிரச்னை எழுந்திருக்காது. ஏற்கனவே, திருமணம் செய்து வாழ்பவன், மேலும் ஒரு மனைவியைத் தேடுவது போல, பா.ஜ., கூட்டணிக்கு வந்த பின்பும், வேறு கட்சியின் கூட்டணியை நாடிக் கொண்டுள்ளார் விஜயகாந்த். தே.மு.தி.க., தொண்டர்கள் மத்தியிலும், தெளிவு இல்லாமல் இருக்கின்றனர். எனவே, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி ஒத்துவராது. விஜயகாந்த், பா.ஜ., கூட்டணி பற்றி நேற்று பேசவில்லை. உள்ளூர் தேர்தல் பிரசாரம் போல் பேசுகிறார். லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை, விஜயகாந்த் மேற்கொள்ளவில்லை. அவரது போக்கு கூட்டணிக்காக இல்லை.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE