பெரம்பலூர் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் சீமானூர் பிரபுவை கட்சியினருக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம், துறையூரில் ரகசியமாக நடந்தது. கூட்டத்தில், வேட்பாளரை அறிமுகப்படுத்தி, திருச்சி மாவட்ட தி.மு.க., செயலாளர் நேரு பேசியதாவது: சீமானூர் பிரபு பணக்காரர் அல்ல. நம்மை போல சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவர். நெப்போலியனுக்கு நேர் எதிரானவர் இவர். அடிக்கடி வந்து உங்களை பார்ப்பார். மக்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பார். நெப்போலியன் மக்களுக்கு எதுவும் செய்யாமல் சென்று விட்டார். அவர் இனி, அமெரிக்காவில், ஜப்பானில் போய் நடிப்பார். நெப்போலியன் செயல்படாததற்கு, நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் உங்கள் உறவினர் தானே, அவரை பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்குமா என, பேசுவார்கள். நான் அவருக்கு 'சீட்' வாங்கி தரவில்லை. இனி அதை பற்றி பேச வேண்டாம். இவ்வாறு, முன்னாள் அமைச்சர் நேரு பேசினார்.
- நமது நிருபர் -