கசாப் பிடிபட்டது எப்படி?

Added : மார் 16, 2014 | கருத்துகள் (3)
Advertisement
கசாப் பிடிபட்டது எப்படி?

தெருவுக்கு வந்தபின், வலப்பக்கமாகச் சுவற்றில் ஒட்டிக்கொண்டே வந்து சேர்ந்தனர். அவர்களை நோக்கி ஒரு போலீஸ்காரர் வருவதைப் பார்த்தனர். கசாப் அவனது ஏகே47ஐ அவனை நோக்கிக் குறிபார்த்துச் சுட்டுக் கொன்றுவிட்டான். அதே நேரத்தில் எதிர்புறத்திலிருந்து போலீசார் வருவதைக் கண்டு பதில் தாக்குதல் நடத்தி ஒரு சந்துக்குள் புகுந்துவிட்டனர். அங்கு சிவப்புவிளக்கு பொருத்தப்பட்ட வெள்ளை கார் பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்தது. கசாப் அதை நோக்கிச் சுட்டான். கார் சிறிது நகர்ந்து பின்னர் நின்றுவிட்டது. இஸ்மாயில் கார் மீது கைக்குண்டை எறிய, கசாப் மீண்டும் சுட்டான். அந்தக் கார் அங்கிருந்து சென்றுவிடவே அவ்வாறு செய்தார்கள். ஆனால் அவர்கள் காரை நெருங்கியதும் ஜன்னல் கண்ணாடிகள் உயர்த்தப்பட்டு, உட்புறம் பூட்டப்பட்டிருந்ததையும் டிரைவர் இறந்து கிடந்ததையும் கண்டனர். எவ்வளவு முயன்றும் கதவுகளைத் திறக்கமுடியவில்லை.
மஞ்சள் விளக்கு பொருத்தப்பட்ட ஒரு கார் அவர்களை நோக்கி எதிர்திசையில் இருந்து வருவதைக் கண்டனர். உடனே அங்கிருந்த செடிகளுக்கு இடையில் சுவற்றில் சாய்ந்து கொண்டு பதுங்கினார்கள். கார் அவர்களை நெருங்கியதும், காரிலிருந்தவர்கள் இவர்களைச் சுட்டனர். கசாபின் இரண்டு கைகளிலும் குண்டுகள் பாய்ந்தன. காரிலிருந்து சுடப்படுவது நின்றதும், அதை இவர்கள் நெருங்க, அது போலீஸ் வாகனம் என்று தெரிந்தது. கசாப் பின்னால் இருந்து திறக்க முடியவில்லை. உள்ளே இருந்தவர்கள் எல்லோரும் இறந்துகிடந்தனர். கசாப் காயமடைந்து காரின் மீது சாய்ந்து நின்றான். இஸ்மாயில் காரை மீண்டும் சுட்டான். அதிலிருந்த சடலங்களை வெளியில் இழுத்துப் போட்டான். டிரைவர் அருகில் இருந்தவர்களை இழுத்துத் தரையில் வீசினான். இஸ்மாயில் ஏகே47ல் ரவுண்டுகள் தீர்ந்துவிட்டது. எனவே போலீசாரிடமிருந்த ஏகே47ஐப் பறித்துக் கொண்டான். உடனே காரை எடுத்துக்கொண்டு பேய் வேகத்தில் ஓட்டினான். தனது கால்கள் மற்றும் தோள்பட்டையில் குண்டுக்காயம் பட்டிருப்பதாக இஸ்மாயில் கசாப்பிடம் தெரிவித்தான்.


எதிரில் வந்த காரைப் பறித்தனர்

சிறிது தூரம் சென்றதும் ஒரு மைதானத்தை அடைந்தனர். அங்கு பெரிய மக்கள் மற்றும் போலீஸ் கூட்டம் இருந்தது. வண்டியைத் தொடர்ந்து ஓட்டிக்கொண்டே இஸ்மாயில், போலீசாரை நோக்கிச் சுட்டான். சிறிது தூரம் சென்றதும் காரின் பின் டயர்களில் ஒன்று பஞ்சர் ஆகிவிட்டதென்று தெரிந்தது. அதைப் பொருட்படுத்தாது இஸ்மாயில் காரை வெகு வேகமாக ஓட்டினான். எதிரில் ஒரு வெள்ளைக்காரர் எதிர்திசையிலிருந்து வருவதைப் பார்த்து இஸ்மாயில் தனது ஏகே47ஐ ஆகாயத்தை நோக்கிச் சுட்டான். காரை நிறுத்துமாறு டிரைவரைத் துப்பாக்கியைக் காட்டி நிறுத்தினான். டிரைவரை வெளியில் இழுத்துப் போட்டான். வண்டியில் டிரைவர் பக்கம் அமர்ந்திருந்த நபர், பின் சீட்டில் இருந்த பெண்ணும் உடனே இறங்கினர். காரை இவ்வாறு பறித்துக்கொண்டு டிரைவர் இருக்கையில் இஸ்மாயில், அருகில் இருக்க அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்கள். எங்கே செல்கிறோம் என்று கசாப் கேட்டான். மலபார் ஹில்ஸ் என்று இஸ்மாயில் பதில் கூறினான். அது எங்கேயென்று கசாப் கேட்டதற்கு, அதை அடைந்ததும் கூறுவதாக இஸ்மாயில் கூறினான்.


சாலை தடுப்புகளை தகர்த்து:

சிறிது தூரம் சென்றதும், கடற்கரைப் பாதையில் கார் சென்று கொண்டிருப்பதையும், அதுவே மலபார்ஹில்ஸ் பாதை என்றும் அதை வரைபடத்தில் சபாபுதீன், பஹீம் இருவரும் காட்டியதை கசாப் நினைவு கூர்ந்தான். அதிவேகத்தில் கார் மலபார்ஹில்ஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சாலைகளில் தடுப்புகளையும் போலீசாரையும் கண்டனர். காரை நிறுத்தும்படியும், விசிலடித்துப் போலீசார் தடுத்தனர். எவ்வளவு வேகமாக ஓட்டினாலும் தடைகளை உடைத்துக்கொண்டு செல்வது சாத்தியமில்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொண்டனர். எனவே சிறிது தூரத்தில் காரை நிறுத்தி முன் விளக்குகளைப் போடும்படிம், அந்த வெளிச்சத்தில் போலீசார் பார்வை கஷ்டமாகும், காரின் நம்பர் பிளேட்டைப் பார்க்க முடியாதென்றும் கசாப் ஆலோசனை கூறினான். விளக்குகளை அணைக்குமாறு போலீசார் கத்தினார்கள்.
சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த கசாப், வலப்பக்கம் இருந்த சாலைப் பிரிவுச்சுவர் - ரோடு டிவைடர் - தாழ்வாக இருப்பதைப் பார்த்து, அதிவேகமாகக் காரை ஓட்டினால் அதைத் தாண்டிவிட முடியுமென்று கசாப் யோசனைகூற, இஸ்மாயில் கார் முன் கண்ணாடியில் தண்ணீர் ஸ்பிரே செய்து வைபர்களை இயக்கினான். சற்று முன்னால் காரை நகர்த்திப் பிரிவுச்சுவர் மீது அதிவேகத்தில் காரைச் செலுத்தினான். யுக்தி பலிக்கவில்லை. கார் நின்றுவிட்டது. அதே சமயம் போலீசார் இரண்டு பக்கத்திலிருந்தும் தாக்கினார்கள். நிலைமையின் கடுமையைப் புரிந்துகொண்ட இவர்கள் கையைத் தூக்கினார்கள்.
இஸ்மாயில் தனது ஏகே47ஐ எடுக்க முயன்றான். ஆனால் அது கீழே இருந்ததால் முடியவில்லை. அவனது பிஸ்டலை சீட்டில் இருந்து எடுத்துப் போலீசாரை நோக்கிச் சுட்டான். தன்னை நோக்கிப் போலீசார் வருவதை அறிந்த கசாப் கார் கதவைத் திறந்து தனது ஏகே47ஐப் பிடித்துக்கொண்டான். போலீஸ் சுடத் தொடங்கியது. இவனிடமிருந்து ஏகே47ஐப் பிடுங்க ஒரு போலீஸ்காரர் முயற்சித்தார். இந்தப் போராட்டத்தில் கசாப் கீழே விழுந்தான் என்றாலும் அவனது விரல் துப்பாக்கியின் மேல் இருந்ததால் அதை அழுத்தினான். போலீஸ்காரர் புல்லட் பாய்ந்து இறந்தார். மற்ற போலீசார் அவனைத் தடியால் அடித்து துப்பாக்கியைப் பிடுங்கி விட்டனர். போலீஸ் சுட்டதில் இஸ்மாயில் காயமடைந்தான். இருவரும் போலீசாரிடம் சிக்கிவிட்டனர்.


கூட்டாளி பலியானான்:

பின்னர் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கசாப் தெரிவித்தான். போலீஸ் புல்லட் தாக்குதலில் இஸ்மாயில் இறந்துவிட்டான் என்பதை கசாப் மருத்துவமனையில் தெரிந்துகொண்டான். தனது மற்றும் இஸ்மாயில் பெயர்களை போலீசார் மற்றும் டாக்டர்களிடம் தெரிவித்த கசாப், தாங்கள் பாகிஸ்தானிகள் என்பதையும் தெரிவித்தான்.
மருத்துவமனையில் தனது புண்களைக் கழுவி பாண்டேஜ் போட்டு, அவனது ரத்தக்கறை படிந்த ஆடைகளை அகற்றி, ஆஸ்பத்திரி ஆடைகளை அணியச் செய்தனர். அவனது கூட்டாளிகளைப் பற்றியும், எப்படி பம்பாய் வந்தார்கள் என்பது பற்றியும் போலீசார் கேட்டதற்கு, கசாப் எல்லா விவரங்களையும் தெரிவித்தான்.
இவ்வாறு மும்பை கூடுதல் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டிடம் தனது வாக்குமூலத்தைக் கூறி முடித்தான்.


உயர்மட்ட சட்ட உதவி:

கசாப் - முகமது அஜ்மல் முகமது அமீர்கசாப் - வழக்கை மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து, அவன் செய்த குற்றங்களை ஆராய்ந்து அவனுக்கு 5 மரண தண்டனை மற்றும் 5 ஆயுள் தண்டனைகளை விதித்து தீர்ப்புக் கூறியது. மகாராஷ்டிரா - பம்பாய் உயர்நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. கசாப் உச்சநீதிமன்றத்தை நாடினான். உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் அவன் சார்பில் வாதாட வக்கீல் யாரும் இல்லை. அவனுக்காக வாதாட மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், அவருக்கு உதவியாக வழக்கறிஞர் கௌரவ் அகர்வால் இருவரையும் உச்சநீதிமன்றம் நியமித்துக் கொடுத்தது.
இந்திய மக்களின் பெரும்பான்மையானவர்களுக்குக் கூடக் கிடைக்காத இந்த உயர்தர சட்ட உதவி கசாபுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி அப்தாப் அலாம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X