எப்படியோ நடந்த கொலை... எப்.ஐ.ஆர்., போட்டது போலீசோட கலை!| Dinamalar

எப்படியோ நடந்த கொலை... எப்.ஐ.ஆர்., போட்டது போலீசோட கலை!

Added : மார் 16, 2014
Share
''இந்த முறை என்னோட ஓட்டு... கண்டிப்பா ....!'' மித்ரா சொல்லி முடிப்பதற்குள், அவளது வாயைப் பொத்தினாள் சித்ரா.''எல்லாத்தையும் ஊருக்குச் சொல்றது மாதிரி, இதையும் சொல்லாதடி...விரலை மட்டும் காமி!,'' என்று சித்ரா சொல்ல, இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். பீளமேட்டிலுள்ள பிரபல 'காஃபி ஷாப்'பில் இருவரும், மெதுவாய் காஃபியை உறிஞ்சிக்கொண்டே, பேசிக்கொண்டிருந்தார்கள். கண்ணாடிகள்
எப்படியோ நடந்த கொலை...  எப்.ஐ.ஆர்., போட்டது போலீசோட கலை!

''இந்த முறை என்னோட ஓட்டு... கண்டிப்பா ....!'' மித்ரா சொல்லி முடிப்பதற்குள், அவளது வாயைப் பொத்தினாள் சித்ரா.

''எல்லாத்தையும் ஊருக்குச் சொல்றது மாதிரி, இதையும் சொல்லாதடி...விரலை மட்டும் காமி!,'' என்று சித்ரா சொல்ல, இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.


பீளமேட்டிலுள்ள பிரபல 'காஃபி ஷாப்'பில் இருவரும், மெதுவாய் காஃபியை உறிஞ்சிக்கொண்டே, பேசிக்கொண்டிருந்தார்கள்.


கண்ணாடிகள் சூழ்ந்த அந்த மாடி அறையில், மெலிதாய் வெளிச்சம் பாய்ந்து கொண்டிருக்க, பல ஜோடிகள் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், கட்டுண்டு கிடந்தன.


''ஏய்! என்னடி...இங்க கூப்பிட்டு வந்திருக்க?,'' என்று நெளிந்தாள் சித்ரா.


''இதையெல்லாம் வேடிக்கை பார்க்க உன்னக் கூப்பிட்டு வரலை; அவிநாசி ரோட்டுல வண்டி ஓட்டுற எத்தனை பேரு, இங்க பார்த்துட்டுப்போய், கீழ விழுறாங்கன்னு காமிக்கிறதுக்காகத்தான் கூப்பிட்டு வந்தேன். இந்த கொடுமை ரொம்ப நாளா நடக்குது...இவுங்க கொஞ்சல்சைப் பாத்தே, சிலர் முட்டி மோதி, கீழ விழுந்து 'ஆஸ்பிடல்' போயிருக்காங்க,'' என்றாள் மித்ரா.


''வரவர கோயம்புத்துார் ரொம்பதான் மோசமாயிட்டு இருக்குடி...ரேஸ்கோர்ஸ்ல பட்டப்பகல்ல காலேஜ் பொண்ணுங்க 'தம்' அடிக்கிறாங்க; ஸ்கீம் ரோட்டுல பல ஆயிரம் புள்ளங்க படிக்கிற ஸ்கூல் இருக்கு; ஜட்ஜ் குவாட்டர்ஸ் இருக்கு; அதுக்குப் பக்கத்துலயே சிகரெட் விக்கிறாங்க; சிலர், காரை எடுத்துட்டு பேய் மாதிரி பறக்கிறானுக; இடையில யாராவது சிக்குனா, எலும்பு கூட தேறாது'' என்றாள் சித்ரா.


''ஆமாக்கா! நானும் ஒரு 'ஹம்மர்' காரை அடிக்கடி அந்த ஏரியாவுல பாக்குறேன்; நீ சொல்றது மாதிரித்தான் சும்மா பறக்குது...அந்த வண்டி யாரோடது தெரியுமா? கதர்க்கட்சிக்கு தமிழ்நாட்டுக்கே தலைவராயிருந்த 'தங்க'மான தலைவரோட பையன் காரு. இவருக்கெல்லாம் இந்த கார் எப்படி வந்துச்சுன்னு 'என்ஃபோர்ஸ்மென்ட்'காரங்க விசாரிக்க மாட்டாங்களா?,'' என்றாள் மித்ரா.


''பவர் புல்லான பசங்கன்னா, இந்த போலீஸ்காரங்க கண்டுக்க மாட்டாங்க போல...!''


''அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு; போன வாரம், சிங்காநல்லுார் போலீஸ் ஜோடிச்ச ஒரு கேசைப் பத்தி கேள்விப்பட்டா, நீயே கொதிச்சுப் போயிருவ!,''


''அப்புடி என்னடி ஜோடிச்சாங்க?,' ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.


''ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, மனநோயாளி ஒருத்தரை யாரோ 'மர்டர்' பண்ணிட்டாங்க; ஒரு வாரமா, யாரையும் கண்டு பிடிக்க முடியலை; திடீர்ன்னு இன்னொரு மனநோயாளியைப் பிடிச்சு, 'ரெண்டு பேருக்கும் நடந்த சண்டையில கல்லால அடிச்சு, கொன்னுட்டான்; அவனே ஒத்துக்கிட்டான்'னு அழகா, எப்.ஐ.ஆர்., எழுதி, கைதும் பண்ணிட்டாங்க...!''


''அச்சச்சோ...அப்புறம் என்ன ஆச்சு?,''


''அரெஸ்ட் பண்ணப்பட்டவர், மனநோயாளின்னு அவுங்க குடும்பத்துக்காரங்க கோர்ட்ல 'பெட்டிஷன்' தாக்கல் பண்ணுனதால, டாக்டர்சை வச்சு 'எக்ஸாமின்' பண்ணச் சொல்லி, மாஜிஸ்திரேட் சொல்லிட்டாரு. அவரை 'எக்ஸாமின்' பண்றதுக்குள்ள, உண்மையான 'அக்யூஸ்ட்'டுங்க ரெண்டு பேரு, 'நாங்கதான் கொன்னோம்'னு கோர்ட்ல சரண்டர் ஆயிட்டாங்க. அப்புறமா, அந்த மனநோயாளி இளைஞரை விட்ருக்காங்க,'' என்றாள் மித்ரா.


''அடக்கொடுமையே! அவுங்க வரலைன்னா, அவரையே 'அக்யூஸ்ட்'ன்னு கணக்கு காமிச்சிருப்பாங்களா...இது மாதிரி எத்தனை கேசுல எத்தனை பேரை கோர்த்து விட்ருக்காங்களோ?,'' என்றாள் சித்ரா.


''அதை விடு...! நீ சொன்ன அஞ்சு புளோர், அஞ்சு கனெக்ஷன் மேட்டர் ஒண்ணுமே பிடிபடலையேக்கா... விஷயத்தை நீயே சொல்லு!,'' என்று சரண்டர் ஆனாள் மித்ரா.


''ஆர்.எஸ்.புரத்துல ஒரு ஜவுளிக்கடைக்கு, 5 ஃபுளோர்க்கும் சேர்த்து 'எச்.டி' கனெக்ஷன் கொடுக்கிறதுக்குப் பதிலா, ஒவ்வொரு ஃபுளோருக்கும் தனித்தனியா அஞ்சு 'எல்.டி' கனெக்ஷன் கொடுத்திருக்காங்க. அதனால, 60 மாசத்துல, இ.பி.,க்கு 45 லட்ச ரூபா 'லாஸ்' ஆயிருக்கு; இதைப் பத்தி 'சி.எம்..செல்'லுக்கு பெட்டிஷன் போயிருக்கு; குன்னுார் இ.இ.,விசாரிச்சு, தெளிவா அறிக்கையும் கொடுத்துட்டாரு. ஒரு லேடி இன்ஜினியர்தான் இதுக்குக் காரணம்னு அறிக்கை சொல்லுது; ஆனா, ஒரு நடவடிக்கையும் எடுக்கலை,'' என்றாள் சித்ரா.


''ஏன்...மேல இருக்கிறவுங்களையும் கவனிச்சிட்டாங்களா?.''


''அதான் தெரியலை... இப்படி கனெக்ஷன் கொடுத்ததுக்காக 16 லட்ச ரூபா, கை மாறிருக்கிறதா பேசிக்கிறாங்க; இதுல பல பேருக்கு பங்கு போயிருக்கு. சம்மந்தப்பட்ட இன்ஜினியர் மேல, பெரிய ஆபீசர் நடவடிக்கை எடுக்காததுக்கு ரெண்டு பேரும், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவுங்கதாங்கிறதுதான் காரணமாம்...!


''இதற்கு சமுதாய சாயம் பூசாதே வேணுமுன்னா இவங்கெல்லாம் லஞ்சம் வாங்குற சமுதாயம் என கூப்பிடலாம்,'' என்றாள் மித்ரா.


''கோயம்புத்துார் தோழர்கள் எல்லாம் 'படு அப்செட்' ஆயிருப்பாங்கன்னு பார்த்தா, 'தி.மு.க., கூட்டணியில சீட்டு வாங்கப்போறோம்; மறுபடியும் பி.ஆர்.நடராஜன்தான் கேண்டீடேட்'ன்னு சொல்லிட்டு இருக்காங்க. அப்படியே போட்டி போட்டாலும், 'கருணாநிதியோட குடும்பம் பொரி வியாபாரத்தைக் கூட விட்டு வைக்காது'ன்னு இவரு இதே ஊருல பேசுனதை உடன் பிறப்புகள் மறந்துட்டு இவருக்கு வேலை பார்ப்பாங்களா?,'' என்றாள் சித்ரா.


''அரசியல்ல எதுவும் நடக்கலாம்; கோயம்புத்துார்ல 'சீட்டு' கேட்டு கிடைக்காத ரெண்டு வக்கீல் உடன் பிறப்புகளுக்குள்ள ஏகப்பட்ட உரசலாமே; வக்கீலுங்க பல ஆயிரம் பேருக்கு, 'நான்தான் கேண்டிடேட்'ன்னு ஆதரவு கேட்டு, அருள்மொழி 'மெசேஜ்' கொடுத்திருக்காரு; அதைப் பாத்துட்டு, இன்னொரு வக்கீலு விஜயசேகர், 'தலைமையே இன்னும் அறிவிக்கலை; அதுக்குள்ள அவரு எப்படிச் சொல்லலாம்? நான்தான் கேண்டீடேட்'ன்னு சொல்ல, ரெண்டு பேரும் உரசி கிட்டாங்க'' இப்ப ரெண்டு பேருக்குமே சீட்டு கொடுக்காம, கணேஷ் குமார்ன்னு இன்னொரு வக்கீல அறிவிச்சுட்டாங்க,'' என்றாள் மித்ரா.


''எலக்ஷன் பஞ்சாயத்தை விடு...! ஒப்பணக்கார வீதியில, ஒரு நகைக்கடை கட்டடத்துக்கு சமீபத்துல 'சீல்' வச்சாங்க தெரியுமா? அந்த கட்டடம், நம்ம 'கோவை முக்கியமானவருக்கு நெருக்கமா இருக்கிற 'வீரமான சாமி'யோட கட்டடமாம்; அதுக்கு 'சீல்' வைக்க வேண்டாம்னு 'முக்கியமானவர்' சொன்னதைக் கேக்காமலே, அதிகாரிங்க 'சீல்' வச்சிட்டாங்களாம்; ஆனா, கட்டடத்தை ஏன் கை வைக்கலைன்னு தெரியலை?,'' என்றாள் சித்ரா.


''சிட்டிக்குள்ள சென்டர்ல அனுமதியில்லாம கட்டுற ஒரு பெரிய கட்டடத்துல 'இது அனுமதியில்லாத கட்டடம்; இங்கு யாரும் வாடகைக்கு வர வேண்டாம்'னு 'போர்டு' வக்கச் சொல்லி, கமிஷனர் மேடம் உத்தரவு போட்டும், அதைப் பண்ணாம, சூப்பரா காசு பாத்துட்டாராம் ஒரு ஆபீசர்; அவர் யார்ன்னு தெரியுமா?,'' என்று கேட்டாள் மித்ரா.


''இப்போ என்னோட 'டேர்ன்' வந்துருச்சா...யோசிக்கிறேன்; இப்போ, கெளம்பு. இதுக்கு மேல, இங்க நடக்குற கண்றாவியெல்லாம் பாக்க முடியாது,'' என்று வேகமாய் எழுந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X