மதுரை : 'தி.மு.க.,
எங்கள் இயக்கம். இக்கட்சியில் இருந்து நம்மை வெளியேற்ற யாருக்கும்
தகுதியில்லை' என, அழகிரி முன்னிலையில், அவரது ஆதரவாளர்கள் ஆவேசமாக பேசினர்.
மதுரையில்
அழகிரி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ஆதரவாளர்கள் பேசியதாவது: மாலைராஜா,
நெல்லை, முன்னாள் எம்.எல்.ஏ.,: நெல்லை மாவட்ட செயலர் பாலியல் சர்ச்சையில்
சிக்கினார். அதற்கு நான் காரணம் என, கட்சியை விட்டு வெளியேற்றினர். ஆனால்,
ஒரு பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த, அவர் மீது நடவடிக்கை இல்லை. கருணாநிதி
கட்டுப்பாட்டில் கட்சி இல்லை; அதை நாம் காப்பாற்ற வேண்டும்.சண்முகம், தேனி
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்: ம.தி.மு.க., உருவானபோது, அக்கட்சிக்கு மாறிய
பொன்.முத்துராமலிங்கம், தற்போது வேட்பாளர். ஆனால், பல ஆண்டுகளாக கட்சிக்கு
உழைத்தவர்களுக்கு, 'சீட்' இல்லை.சின்னராஜ், விருதுநகர் மாவட்ட நிர்வாகி:
சாத்துார் ராமச்சந்திரனை, அழகிரி தான் கட்சிக்குள் கொண்டு வந்தார். ஆனால்,
இப்போது அவர் இஷ்டத்திற்கு செயல்படுகிறார்; கட்சிக்கு பிடித்த 'சனியன்'
அவர். 'அழகிரி மீண்டும் கட்சிக்குள் வந்துவிட்டால், நான் ஓடிவிடுவேன்' என,
அவரே கூறி வருகிறார். விருதுநகர் வேட்பாளர் யார்? என்றே தெரியவில்லை. நாம்
தான் உண்மையான தி.மு.க., இசக்கிமுத்து, மதுரை நகர் முன்னாள் அவைத் தலைவர்:
அழகிரிக்கு ஆதரவாக எழுந்துள்ள இந்த எழுச்சியை பார்த்தாவது, கட்சி அவரை
மீண்டும் அழைக்க வேண்டும். இக்கூட்டம், கட்சிக்காக உழைக்க காத்திருக்கிறது;
இழந்து விடாதீர்கள். மன்னன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர்:
தி.மு.க.,வில் இருந்து வைகோ பிரிந்தபோது, 'உயிரை கொடுப்போம்; கழகத்தை
காப்போம்' என்று முழங்கினோம். இப்போது, 'கழகத்தை காப்போம்; தலைவரை
காப்போம்' என்று முழங்குவோம். ஷேக், ராமநாதபுரம் முன்னாள் ஒன்றிய செயலர்:
அழகிரியை முதலில் கட்சியில் சேருங்கள். நீங்கள் (அழகிரியை பார்த்து),
கட்டளையிடுங்கள், நாங்கள் படையெடுத்து அறிவாலயத்தையும், தலைவரையும்
காப்பாற்றுகிறோம்.ரித்தீஷ், ராமநாதபுரம் தி.மு.க., - எம்.பி.,: இந்த
கூட்டத்தில் பங்கேற்ற நீங்கள் தான் நாளைய, தி.மு.க.,வில், 'ஒன்றியம்',
'மாவட்டம்', 'அமைச்சர்கள்'. இது நமது இயக்கம். நம்மை கட்சியில் இருந்து
வெளியேற்ற யாருக்கும் தகுதி இல்லை. நமது உயிர், உடல், ஆன்மாவை கட்சிக்காக
அர்ப்பணிக்க வேண்டும். பொதுக் குழுவில் கருணாநிதி கூறினால், தொண்டர்கள்
கேட்பார்கள். அதுபோல், இக்கூட்டத்தில் நீங்கள் எடுக்கும் முடிவை, நாங்கள்
ஏற்போம். தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கள் ஞானகுருசாமி, சையது மீரான்,
மதுரை நகர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாக்கியநாதன் உட்பட, பலரும் ஆவேசமாக
பேசினர்.
'ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்'
''தி.மு.க.,வை
ஒப்பிடும் போது, அடிக்கடி மாவட்ட செயலர்களை மாற்றும் விஷயத்தில், முதல்வர்
ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்,'' என அழகிரி பேசினார். மதுரையில், தென்
மாவட்டங்களைச் சேர்ந்த அவரது ஆதரவாளர் கருத்துக்களை கேட்ட பின், அழகிரி
பேசியதாவது: இங்கு பேசியவர்கள், 'ஒற்றுமையாக இருந்து கட்சியை வெற்றி பெற
வைக்க வேண்டும்' என, கருத்து கூறினீர்கள். ஆனால், தி.மு.க., வேட்பாளர்கள்
தேர்வு, அப்படி அமையவில்லை. அது, கருணாநிதியால் தயாரிக்கப்பட்டது அல்ல. பல
வேட்பாளர்கள், கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள். குறிப்பாக, விருதுநகர்
வேட்பாளர் ரத்தினவேல், மதுரை மாநகராட்சி மேயராக, அ.தி.மு.க.,வின் ராஜன்
செல்லப்பா வெற்றி பெற்றபோது, 'இதன் மூலம் ஊழலற்ற நிர்வாகம், சுத்தமான,
சுகாதாரமான காற்று வீசுவேண்டும்' என, வாழ்த்துக் கூறியவர். இந்த வாழ்த்து
மூலம், முன்பிருந்த, தி.மு.க., மேயரை குறை கூறியவர். அவருக்கு வேட்பாளர்
வாய்ப்பு கொடுத்தால், எப்படி கட்சி உருப்படும்? இதேபோல், நெல்லையில்,
கோவில் தக்கார்; ராமநாதபுரத்தில், கல்வி நிறுவனம் நடத்துபவர்; சேலம்,
கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், துாத்துக்குடி, நாகர்கோவில் என,
நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் ஒருவர் கூட தேற மாட்டார்கள். கட்சிக்கு
உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். வேலுார் தொகுதியில், கட்சியில்
துணைப் பொதுச் செயலர் துரைமுருகன் மகனுக்கு, 'சீட்' கொடுக்கவில்லை என்ற
காரணத்திற்காக, அவர் துாண்டுதலில், அங்கு அறிவிக்கப்பட்ட முஸ்லிம் லீக்
கட்சி வேட்பாளர் அப்துல் ரகுமானை, 'ஊழியர் கூட்டத்திற்குள் உள்ளே நுழைய
விடமாட்டோம்' என, போஸ்டர் அடித்து ஒட்டினர். அப்படியெனில், துரைமுருகன்
மீது, கட்சி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? அ.தி.மு.க.,
வில், ஜெயலலிதா சொல்பவர் தான் வேட்பாளர். ஒவ்வொரு ஆண்டும், மாவட்ட செயலர்
மாற்றம் போன்ற விஷயத்தில், ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன். ஆனால், இந்த
கட்சியில், 'பேக்ஸில்' புகார் அனுப்பினால் கூட, தலைவருக்கும், பொதுச்
செயலருக்கும் போய் சேருவதே இல்லை. தேனியில் பொன்.முத்துராமலிங்கம்
நிறுத்தப்பட்டுள்ளார். நான் மனம் திறந்து சொல்கிறேன். அவர் தோற்றுப்
போய்விடுவார். நான்காவது இடம் தான் அவருக்கு கிடைக்கும். 'கலெக் ஷனுக்காக'
அங்கு நின்றுள்ளார்; 'எலக் ஷனுக்காக' அல்ல. இதுபோன்ற வேட்பாளர்களை நம்பி,
தி.மு.க., தேர்தலை சந்திக்கிறது. எனவே, 35 வேட்பாளர்களையும் மாற்றினால்
தான், தி.மு.க., வெற்றி பெற முடியும். 'கட்சித் தலைமை, நம்மை அழைத்து
பேசினால், நாம் என்ன செய்ய வேண்டும்' என, நீங்கள் ஆலோசனை கூறினீர்கள்.
ஒருவேளை அழைக்காவிட்டால், அடுத்த கட்ட முடிவு குறித்து, அனைத்து
மாவட்டங்களிலும், ஆதரவாளர்கள் கூட்டம் நடத்தி, பின் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு, அழகிரி கூறினார்.