திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகரில் ஆண்டு தோறும் சீசனை முன்னிட்டு துவங்கப்படும் புளி மார்க்கெட் நேற்று துவங்கியது. மூன்று மாதங்கள் இந்த மார்க்கெட் செயல்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி, வடமதுரை, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் புளிய மரங்கள் அதிகளவு உள்ளன. இந்தாண்டு மழை இல்லாததால், புளி விளைச்சல் மந்தமாகவே உள்ளது. புளியமரத்திற்கு எப்போதும் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச மாட்டார்கள். நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றதால், போர்வெல் அமைத்து, புளிய மரத்திற்கு நீர் பாய்ச்சும் நிலையும் ஏற்பட்டுள்ளது.இந்தாண்டு குறைந்தளவு விளைச்சல் இருந்தபோதும், வழக்கமாக மார்ச் மாதத்தில் துவங்கும் புளி மார்க்கெட் நேற்று திண்டுக்கல் நாகல் நகரில் துவங்கியுள்ளது. நத்தம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் புளியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.பழநி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் புளிகளை வாங்கி சென்றனர். கடந்த ஆண்டு விதை எடுத்த புளி கிலோ ரூ.45க்கும், விதையுடன் கூடிய புளி கிலோ ரூ.22 க்கும்
விற்கப்பட்டது. இந்தாண்டு மழை இல்லாததால், விலை கடுமையாக அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ விதை எடுத்த புளி ரூ.60 க்கும், விதையுடன் கூடிய புளி கிலோ ரூ.27 க்கும் விற்கப்பட்டது.