மேல்முறையீடு பரிசீலனை துவங்கியது| Dinamalar

மேல்முறையீடு பரிசீலனை துவங்கியது

Added : மார் 20, 2014 | கருத்துகள் (1)
Advertisement
மேல்முறையீடு பரிசீலனை துவங்கியது

மாஜிஸ்திரேட்டிடம் கசாப் இதுவரை அளித்த வாக்குமூலத்தைக் கொண்டு, மனுதாரர் (கசாப்) மற்றும் அவனது பயங்கரவாதக் கூட்டாளிகள் நிகழ்த்திய வன்முறைக் குற்றங்களை "நாங்கள் சுருக்கமாக இந்தியக் கண்களால் பார்த்துப் பரிசீலிக்க விரும்புகிறோம். மனுதாரர் மற்றும் அவனது கூட்டாளிகள் நிகழ்த்திய ரத்தந்தோய்ந்த சம்பவங்களைத் தொடர்ந்து பார்ப்போம்' என்ற முகவுரையுடன் நீதிபதிகள் கசாபின் மேல்முறையீடு மனுவை அணுகத் தொடங்குகிறார்கள்.

1. மும்பையில் கரையேறியது:காற்றடைத்த ரப்பர் படகில் பயங்கரவாதிகள் மும்பை வந்து கரையேறிய இடம் பத்வார் பார்க். இந்த இடத்தில் இந்தப் படகு ஏதோ சந்தர்ப்பவசத்தால் வந்தது என்பது சாத்தியமானதல்ல. இந்தப் பயங்கரவாதிகள் இந்த இடத்தை - பத்வார் பார்க் - தங்களது கேந்திரமான தாக்குதல் இலக்குகளை அடையச் சரியான இடம் என்று துல்லியமாகக் கணக்கிட்டே முடிவு செய்து தேர்ந்தெடுத்துள்ளனர், என்பது தெளிவாகவே தெரிகிறது. இந்த இடத்தைப் பயங்கரவாதிகள் கரையேறுவதற்கு அவர்களாகவே தேர்ந்தெடுக்கவில்லை, சதிகாரர்களில் யாரோ ஒருவனே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாகவே தெரிகிறது. இந்த இடத்தேர்வு நிச்சயமாக நன்கு ஆராயப்பட்டு, சர்வே நடத்தி முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தைத் தேர்வு செய்தவன், மும்பையில் கடற்கரை வழிகளை மட்டுமல்லாது, மும்பை நகரத்தைப் பற்றியும் முழுமையாக அறிந்துள்ளவன் என்பதிலும் எவ்விதமான சந்தேகமும் இல்லை.


சந்தேகப்படும் சூழ்நிலை இல்லை:

2. பத்வார் பார்க் மீனவர்கள் குடியிருப்பு. அந்த இடத்தில் கடல் ஆழமாகவும், நிலப்பரப்போடும், மேடு குழிகளாகவும் இருக்கும். எனவே கடல் அமைதியாக இருக்கும். இந்த இடம் மீனவர் குடியிருப்பாகவுள்ளதால், ஏதோ சில இளைஞர்கள் கடலிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்து யாரும் சந்தேகப்பட காரணங்கள் இருப்பதற்கில்லை, குறிப்பாக இவர்களை யாரும் கண்டு கொள்ளவும் மாட்டார்கள். மேலும், இந்த இடம் ஒரு பிரதான சாலையை நோக்கிப் போகிறது. கடல் நீரில் இருந்து ஒரு சரியான மண்பாதை, 10 மீட்டர் நீளம் கொண்டது, இந்தச் சாலைக்கு இட்டுச் செல்லுகிறது. இங்கு டாக்சிகள் உடனே கிடைக்கும். சி.எஸ். ரயில் நிலையம் இங்கிருந்து - பத்வார் பார்க்கில் இருந்து - 3.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. டாக்சி மூலம் 15 - 20 நிமிடத்தில் சென்று விடலாம். தாஜ் ஹோட்டல் 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. லியோபோல் கபே 900 மீட்டர் தூரத்தில் உள்ளது. பயங்கரவாதிகள் நடந்தே சென்றடைந்த நரிமான் ஹவுஸ் அரைகிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பத்வார் பார்க்கில் முதல் 8 பேரும் இறங்கிய பின்னர், கடைசி ஜோடி படகிலேயே நரிமான் பாயின்ட் சென்றடைந்த தூரம் 0.55 நாடிகல் மைல் - அதாவது ஒரு கிலோ மீட்டர். இவர்கள் இறங்கிய இடத்திலிருந்து ஓபிராய், ட்ரைடென்ட் ஓட்டல்கள் 300 மீட்டர் தூரத்தில் உள்ளது. நரிமான் பாயின்டில் படகிலிருந்து இறங்கிய இவர்கள் இந்த இரண்டு ஓட்டல்களையும் நடந்தே சென்றடைந்தனர்.


இருவருடன் சந்திப்பு:

3. படகில் இறங்கிய பின்னர் இரண்டுபேரைச் சந்தித்ததாகக் கசாப் மாஜிஸ்திரேட்டிடம் கூறியுள்ளான். அவர்கள் இவர்களைப் பற்றி விசாரித்தபோது, அபு இஸ்மாயில் அவர்களிடம் கிண்டலாகப் பேசியுள்ளான். கசாப் தங்களை மாணவர்கள் என்று தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறான். இவர்களைச் சந்தித்தவர்களில் ஒருவன் பாரத் தத்தாத்ரே தாமூர் - ப்ராசிக்யூஷன் சாட்சி 28. இவன் கஃபே பாரேட் மீனவர் குடியிருப்பில் வசிப்பவன். கொலாபாடாஜ் மகால் ஓட்டலில் இவன் நிரந்தர ஊழியன். இவன் அங்கு "முகாதம்'' வேலைசெய்கிறான். தாஜ் ஓட்டலில் இருந்து 15 நிமிட நடைதூரத்தில் உள்ள சால் எண்.2ல் வசிக்கிறான். இது கடலை ஒட்டி அமைந்த இடம். அவன் வசிக்கும் சால், கடல் நீருக்கு மிக அருகாமையில் இருப்பதால், அவன் எங்கு சென்றாலும் கடலை ஒட்டித்தான் நடக்க வேண்டும் என்று தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளான். 2008, நவம்பர் 26ம் தேதி, அவன் வீட்டை விட்டு, ஓட்டல் வேலைக்கு இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டிருக்கிறான். அவன் வேலை இரவு 10 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 7 மணிக்கு முடிவடைகிறது. ஓட்டலுக்குச் செல்லும் வழியில் ஒரு காற்றுப் படகையும், அதில் 10 பேர் - எல்லாரும் 20-25 வயதுப் பிரிவினர் - இருப்பதையும் பார்த்திருக்கிறான். அதிலிருந்து 8 பேர் ஒரு சாக்கு மூட்டையும், கைப்பையும் ஏந்திக் கொண்டு இறங்குவதையும் பார்த்திருக்கிறான். அவர்களில் இருவர், மற்றவர்களை முந்திக் கொண்டு பிரதான சாலையை நோக்கிச் சென்றனர்.


முரட்டுத்தனமான பதில்:

அவர்கள் இந்த இடத்திற்கு அன்னியர்களைப் போல் காணப்பட்டதால் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று இவன் கேட்டுள்ளான். அவர்களில் ஒருவன் தாங்கள் மாணவர்களென்று கூறினான். மற்றவன் "இதைப்பற்றி உனக்கென்ன கவலை' என்று முரட்டுத்தனமாக பதில் சொன்னான். படகிலிருந்து இறங்காத இருவரும் படகை நரிமான் பாயின்ட் நோக்கி செலுத்திச் சென்றனரென்று அவன் மேலும் கூறினான். இவன் (பாரத் தத்தாத்ரே) அடுத்தநாள் காலை சுமார் 7 மணிக்கு வீடு திரும்பியுள்ளான். அப்போது பத்வார் பார்க் ரயில்வே ஆபீசர் காலனி அருகில் 4 போலீஸ்காரர்கள் இந்தக் காற்றுப் படகைப்பற்றி பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்களிடம் முந்தைய நாள் மாலையில் தான் கண்ட மனிதர்களைப் பற்றித் தெரிவித்தான். பின்னர் போலீசாரின் அடையாள அணிவகுப்புப் பரீட்சையில் மனுதாரரை (கசாப்) அடையாளம் காட்டியுள்ளான். இந்த அணிவகுப்பு 2008 டிசம்பர் 28ம் தேதி நடைபெற்றுள்ளது. ஜே.ஜே. மருத்துவமனையில் பிணக்கிடங்கில் மற்றவனையும் இவன் அடையாளம் காட்டியுள்ளான். கோர்ட்டில் சாட்சி கூறும்போதும் மனுதாரரைத் தான் கண்ட இருவரில் ஒருவன் என்று மீண்டும் அடையாளம் காட்டியுள்ளான். படகில் இருந்து இறங்கியவர்களில் ஒருவன் என்றும் தெரிவித்துள்ளான்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X