"இந்திய கம்யூ., கட்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.,வை களத்துல இறக்க போறாங்க,'' என்றவாறு ஹாலுக்கு வந்தமர்ந்தாள் மித்ரா.
"திருப்பூர்க்காரரா?,'' என்று ஆவலுடன் கேட்ட சித்ராவுக்கு, ஐஸ் கட்டி போட்டு, தர்பூசணி ஜூஸ் கொடுத்து உபசரித்தாள் மித்ரா.
"ஆரம்பத்துல, கூட்டணி இல்லாம, தேர்தல் களத்தை சந்திக்க, நிர்வாகிகள் யாருமே அசைஞ்சு கொடுக்கலை. பெருந்துறையில் எம்.எல்.ஏ.,வா இருந்தவர திருப்பூர் தொகுதியில் நிறுத்துறாங்க. மாநிலக்குழுவும், "ஓகே' சொல்லிடுச்சு. யார் வேட்பாளரா இருந்தாலும், கம்யூனிஸ்ட் ஓட்டு மாறப்போறதில்லை.
அதனால, இந்த தேர்தலில், நம்மோட பலம் என்னான்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு தைரியமா இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
"ஆளுங்கட்சி வேட்பாளரை ஆதரிச்சு, சி.எம்., பிரசாரம் செஞ்சாங்களே. போயிருந்தியா,'' என்று சித்ரா கேள்வி எழுப்ப,
"காங்கயத்துல நல்ல கூட்டம்; திருப்பூர்ல சுமார்ன்னு கட்சிக்காரங்களே பேசுறாங்க. சி.எம்., கோபமாயி, திட்டுவாங்களோன்னு, எல்லோரும் பயந்துக்கிட்டு இருந்தாங்க. அவுங்க, கண்டுக்காம போயிட்டாங்க. திருப்பூருக்குள்ள ரெண்டு தொகுதி தான் இருக்குன்னு சொல்லி, கட்சி மேலிடத்தை சமாளிச்சிட்டாங்க. அப்புறம், திரட்டிட்டு வந்த கூட்டத்துக்கும் சரியா பணம் பட்டுவாடா செய்யலைன்னு புலம்புறாங்க,'' என்றாள் மித்ரா.
"அதெல்லாம் சரி... சனிக்கிழமை நடந்த கூட்டத்துல, கட்சி நிர்வாகிகள் உருக்கமா பேசுனாங்களாமே,'' என்றாள் சித்ரா.
"ஆமாக்கா... கட்சியில் பதவி சுகத்தை அனுபவிச்சிக்கிட்டு இருக்கிற எல்லாத்துக்கும், எலக்ஷன் பயம் வந்துருச்சு. கட்சி ஆபீசுல நடந்த கூட்டத்துல, நீங்க கேட்டு நாங்க செய்யாமல் இருந்திருக்கலாம்; நாங்கள் கேட்டு நீங்கள் செய்யாமல் இருந்திருக்கலாம். எல்லாத்தையும் மறந்துட்டு, ஒற்றுமையா தேர்தல் வேலை செய்யணும்னு உருக்கமா பேசியிருக்காங்க. அவர்களது பம்முற பேச்சை கேட்டுட்டு, எலக்ஷன் நேரத்துல இதெல்லாம் சகஜம்தானே என கவுன்சிலர்கள் கிண்டலடிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
"நான், ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். சி.எம்., பங்ஷனுக்கு ரேஷன் கடை ஊழியர்களெல்லாம், கடையை மூடிட்டு வந்துட்டாங்க. அதனால, பொதுமக்கள் பாதிக்கப்பட்டாங்கன்னு பிரச்னை வராம இருக்க, கூட்டுறவு துறை அதிகாரிகள் உஷாராகி, கடையை மூடிட்டு, பங்ஷனுக்கு போனவங்கள்ட்ட, லீவு லெட்டர் வாங்கி வச்சிருக்காங்க,'' என்றவாறு, தர்பூசணி ஜூஸை குடித்து முடித்தாள் சித்ரா.
"எதிர்க்கட்சி வட்டாரத்தை பத்தி எதுவுமே சொல்லலையே. அவுங்க தரப்புல என்ன செய்றாங்க,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
"தி.மு.க., தரப்பில், வேட்பாளர் அறிமுக கூட்டம் நடுத்துனாங்க. திருப்பூர் தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் சாமிநாதன், நகர செயலாளர் செல்வராஜ், 15 வேலம்பாளையம் நகர செயலாளர் மணின்னு மொத்தம் மூணு கோஷ்டி இருக்கு. ஒவ்வொருத்தரையும், அவுங்கவுங்க அலுவலகத்துக்கு போயி, தன்னை அறிமுகம் செஞ்சிருக்காரு வேட்பாளர் செந்தில்நாதன். இனி, எல்லா கோஷ்டியையும் எப்படி இழுத்துக்கிட்டு போகப்போறாருன்னு தெரியலையேன்னு தொண்டர்கள் புலம்புறாங்க. பா.ஜ., கூட்டணியில், கொ.ம.தே.க.,வுக்கு திருப்பூர் தொகுதியை ஒதுக்க முடிவு செஞ்சதால, தே.மு.தி.க., கட்சிக்காரங்க, செம "அப்செட்'டுல இருக்காங்க. எதிரணி வலுவா இல்லாததால, ஆளுங்கட்சிக்காரங்க தெம்பாயிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE